திருமறைக்காடு - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

84

ஓத மால்கடல் பாவி உலகெலாம்
மாத ரார்வலங் கொண்மறைக் காடரைக்
காதல் செய்து கருதப் படுமவர்
பாத மேத்தப் பறையுநம் பாவமே.

5.9.1

85

பூக்குந் தாழை புறணி அருகெலாம்
ஆக்கந் தானுடை மாமறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி யீர்அடி யார்தமை
நோக்கிக் காண்பது நும்பணி செய்யிலே.

5.9.2

86

புன்னை ஞாழல் புறணி அருகெலாம்
மன்னி னார்வலங் கொண்மறைக் காடரோ
அன்ன மென்னடை யாளையோர் பாகமாச்
சின்ன வேடம் உகப்பது செல்வமே.

5.9.3

87

அட்ட மாமலர் சூடி அடம்பொடு
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்ட மாடியும் நான்மறை பாடியும்
இட்ட மாக இருக்கும் இடமிதே.

5.9.4

88

நெய்த லாம்பல் நிறைவயல் சூழ்தரும்
மெய்யி னார்வலங் கொண்மறைக் காடரோ
தையல் பாகங்கொண் டீர்கவர் புன்சடைப்
பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே.

5.9.5

89

துஞ்சும் போதுந் துயிலின்றி ஏத்துவார்
வஞ்சின் றிவலங் கொண்மறைக் காடரோ
பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந்
தஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே

5.9.6

90

விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.

5.9.7

91

திருவி னார்செல்வ மல்கு விழாவணி
மருவி னார்வலங் கொண்மறைக் காடரோ
உருவி னாளுமை மங்கையோர் பாகமாய்
மருவி னாய்கங்கை யைச்சென்னி தன்னிலே.

5.9.8

92

சங்கு வந்தலைக் குந்தடங் கானல்வாய்
வங்க மார்வலங் கொண்மறைக் காடரோ
கங்கை செஞ்சடை வைப்பது மன்றியே
அங்கை யில்லனல் ஏந்தல் அழகிதே.

5.9.9

93

குறைக்காட் டான்விட்ட தேர்குத்த மாமலை
இறைக்காட் டியெடுத் தான்றலை ஈரைந்தும்
மறைக்காட் டானிறை ஊன்றலும் வாய்விட்டான்
இறைக்காட் டாயெம் பிரானுனை ஏத்தவே.

5.9.10

திருச்சிற்றம்பலம்