திருஅன்பில்ஆலந்துறை - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
796
வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை
நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை
ஆனஞ் சாடியை அன்பிலா லந்துறைக்
கோனெஞ் செல்வனைக் கூறிடக் கிற்றியே.
5.80.1
797
கார ணத்தர் கருத்தர் கபாலியார்
வார ணத்துரி போர்த்த மணாளனார்
ஆர ணப்பொருள் அன்பிலா லந்துறை
நார ணற்கரி யானொரு நம்பியே.
5.80.2
798
அன்பினா னஞ்ச மைந்துட னாடிய
என்பின் ஆனை யுரித்துக் களைந்தவன்
அன்பி லானையம் மானையள் ளூறிய
அன்பி னால்நினைந் தாரறிந் தார்களே.
5.80.3
799
சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமை
பங்க னாரடி பாவியே னானுய
அங்க ணனெந்தை அன்பிலா லந்துறைச்
செங்க ணாரடிச் சேரவும் வல்லனே.
5.80.4
800
கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர்
மிக்க ரக்கர் புரமெரி செய்தவர்
அக்க ரையினர் அன்பிலா லந்துறை
நக்கு ருவரும் நம்மை யறிவரே.
5.80.5
801
வெள்ள முள்ள விரிசடை நந்தியைக்
கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார்
அள்ள லார்வயல் அன்பிலா லந்துறை
உள்ள வாறறி யார்சிலர் ஊமரே.
5.80.6
802
பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும்
உறவெ லாஞ்சிந்தித் துன்னி உகவாதே
அறவன் எம்பிரான் அன்பிலா லந்துறை
மறவா தேதொழு தேத்தி வணங்குமே.
5.80.7
803
நுணங்கு நூலயன் மாலும் இருவரும்
பிணங்கி யெங்குந் திரிந்தெய்த்துங் காண்கிலா
அணங்கன் எம்பிரான் அன்பிலா லந்துறை
வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே.
5.80.8
804
பொய்யெ லாமுரைக் குஞ்சமண் சாக்கியக்
கையன் மாருரை கேளா தெழுமினோ
ஐயன் எம்பிரான் அன்பிலா லந்துறை
மெய்யன் சேவடி யேத்துவார் மெய்யரே.
5.80.9
805
இலங்கை வேந்தன் இருபது தோளிற்று
மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்
அலங்கல் எம்பிரான் அன்பிலா லந்துறை
வலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே.
5.80.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சத்திவாகீசர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
