திருமங்கலக்குடி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
731
தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி
அங்க லக்கழித் தாரருள் செய்தவன்
கொங்க லர்க்குழற் கொம்பனை யாளொடு
மங்க லக்குடி மேய மணாளனே.
5.73.1
732
காவி ரியின்வ டகரைக் காண்டகு
மாவி ரியும்பொ ழில்மங் கலக்குடித்
தேவ ரியும்பி ரமனுந் தேடொணாத்
தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே.
5.73.2
733
மங்க லக்குடி ஈசனை மாகாளி
வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணுநேர்
சங்கு சக்கர தாரி சதுர்முகன்
அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே.
5.73.3
734
மஞ்சன் வார்கடல் சூழ்மங்க லக்குடி
நஞ்ச மாரமு தாக நயந்துகொண்
டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடை
நெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே.
5.73.4
735
செல்வ மல்கு திருமங் கலக்குடிச்
செல்வ மல்கு சிவநிய மத்தராய்ச்
செல்வ மல்கு செழுமறை யோர்தொழச்
செல்வன் றேவியொ டுந்திகழ் கோயிலே.
5.73.5
736
மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் றன்பெயர்
உன்னு வாரு முரைக்கவல் லார்களுந்
துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே.
5.73.6
737
மாத ரார்மரு வும்மங்க லக்குடி
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்
வேத நாயகன் வேதியர் நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
5.73.7
738
வண்டு சேர்பொழில் சூழ்மங்க லக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயக னுக்கருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே.
5.73.8
739
கூசு வாரலர் குண்டர் குணமிலர்
நேச மேது மிலாதவர் நீசர்கள்
மாசர் பால்மங்க லக்குடி மேவிய
ஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே.
5.73.9
740
மங்க லக்குடி யான்கயி லைமலை
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன்
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்
தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே.
5.73.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிராணேசவரதர், தேவியார் - மங்களநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
