திருப்பூவனூர் - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

653

பூவ னூர்ப்புனி தன்றிரு நாமந்தான்
நாவின் நூறுநூ றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே.

5.65.1

654

என்ன னென்மனை எந்தையெ னாருயிர்
தன்னன் றன்னடி யேன்றனமாகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்
இன்ன னென்றறி வொண்ணான் இயற்கையே.

5.65.2

655

குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர்
மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம்
புற்ற ராவினன் பூவனூர் ஈசன்பேர்
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே.

5.65.3

656

ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப்
பூவ னூர்புகு வார்வினை போகுமே.

5.65.4

657

புல்ல மூர்தியூர் பூவனூர் பூம்புனல்
நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர்
தில்லை யூர்திரு வாரூர் சீர்காழிநல்
வல்ல மூரென வல்வினை மாயுமே.

5.65.5

658

அனுச யப்பட்ட துவிது வென்னாதே
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார்
மனித ரிற்றலை யான மனிதரே.

5.65.6

659

ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன்
வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர்
பாதி யானான் பரந்த பெரும்படைப்
பூத நாதன்தென் பூவனூர் நாதனே.

5.65.7

660

பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில்
நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங்
கோவ லூர்குட வாயில் கொடுமுடி
மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே.

5.65.8

661

ஏவ மேது மிலாவம ணேதலர்
பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான்
தேவ தேவன் திருநெறி யாகிய
பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே.

5.65.9

662

நார ணன்னொடு நான்முகன் இந்திரன்
வார ணன்கும ரன்வணங் குங்கழற்
பூர ணன்திருப் பூவனூர் மேவிய
கார ணன்னெனை யாளுடைக் காளையே.

5.65.10


663

மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை
புக்கெ டுத்தலும் பூவனூ ரன்னடி
மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும்
பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே.

5.65.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புஷ்பவனநாதர் தேவியார் - கற்பகவல்லியம்மை.


திருச்சிற்றம்பலம்