திருவதிகைவீரட்டம் - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

531

கோணன் மாமதி சூடியோர் கோவணம்
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டங்
காணில் அல்லதென் கண்டுயில் கொள்ளுமே.

5.53.1

532

பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி
அண்ண லையம ரர்தொழு மாதியைச்
சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம்
நண்ணி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.

5.53.2

533

உற்ற வர்தம் உறுநோய் களைபவர்
பெற்ற மேறும் பிறங்கு சடையினர்
சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டங்
கற்கி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.

5.53.13

534

முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாழுந் திரிபுரந் தீயெழ
விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டங்
கற்றா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.

5.53.4

535

பல்லா ரும்பல தேவர் பணிபவர்
நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன்
வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டங்
கல்லே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.

5.53.5

536

வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக்
கொண்டான் கோல மதியோ டரவமும்
விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டங்
கண்டா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.

5.53.6

537

அரையார் கோவண ஆடைய னாறெலாந்
திரையார் ஒண்புனல் பாய்கெடி லக்கரை
விரையார் நீற்றன் விளங்கு வீரட்டன்பாற்
கரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.

5.53.7

538

நீறு டைத்தடந் தோளுடை நின்மலன்
ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை
ஏறு டைக்கொடி யான்றிரு வீரட்டங்
கூறி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.

5.53.8

539

செங்கண் மால்விடை யேறிய செல்வனார்
பைங்க ணானையின் ஈருரி போர்த்தவர்
அங்கண் ஞாலம தாகிய வீரட்டங்
கங்கு லாகவென் கண்டுயில் கொள்ளுமே.

5.53.9

540

பூணா ணாரம் பொருந்த வுடையவர்
நாணா கவ்வரை வில்லிடை யம்பினாற்
பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டங்
காணே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.

5.53.10

541

வரையார்ந் தவயி ரத்திரள் மாணிக்கந்
திரையார்ந் தபுனல் பாய்கெடி லக்கரை
விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.

5.53.11

542

உலந்தார் வெண்டலை உண்கல னாகவே
வலந்தான் மிக்கவன் வாளரக் கன்றனைச்
சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம்
புலம்பே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.

5.53.12

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்