திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

42

பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்
இட்ட மாக இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே.

5.5.1

43

பெற்ற மேறுவர் பெய்பலிக் கென்றவர்
சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்
அற்றந் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நற்ற வத்தொடு ஞானத் திருப்பரே.

5.5.2

44

பல்லி லோடுகை யேந்திப் பலஇலம்
ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர்
அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நல்ல வாயின நம்மை அடையுமே.

5.5.3

45

பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர் செய்வதொன் றென்கொலோ
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போகுநம் மேலை வினைகளே.

5.5.4

46

தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.

5.5.5

47

கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவிய
நட்ட மாடியை நண்ணநன் காகுமே.

5.5.6

48

கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்க ளாடும் பரமனார்
ஆணிப் பொன்னினண் ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.

5.5.7

49

கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத் தோங்கும்அண் ணாமலை கைதொழ
விண்டு போகுநம் மேலை வினைகளே.

5.5.8

50

முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்றன்அண் ணாமலை
சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடுங்
கந்த மாமலர் சூடுங் கருத்தனே.

5.5.9

51

மறையி னானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப்
பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.

5.5.10

திருச்சிற்றம்பலம்