திருத்தோணிபுரம் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
448
மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால்
நீதி தான்சொல நீயெனக் காரெனுஞ்
சோதி யார்தரு தோணி புரவர்க்குத்
தாதி யாவன்நா னென்னுமென் தையலே.
5.45.1
449
நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்ட
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல் தோணி புரவர்க்குத்
தக்க தன்று தமது பெருமைக்கே.
5.45.2
450
கெண்டை போல்நய னத்திம வான்மகள்
வண்டு வார்குழ லாளுட னாகவே
துண்ட வான்பிறைத் தோணி புரவரைக்
கண்டு காமுறு கின்றனள் கன்னியே.
5.45.3
451
பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடை
மேல ளாவது கண்டனள் விண்ணுறச்
சோலை யார்தரு தோணி புரவர்க்குச்
சால நல்லளா கின்றனள் தையலே.
5.45.4
452
பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவிப்
பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
சுண்ண மாடிய தோணி புரத்துறை
அண்ண லாருக்குச் சால அழகிதே.
5.45.5
453
முல்லை வெண்ணகை மொய்குழ லாயுனக்
கல்ல னாவ தறிந்திலை நீகனித்
தொல்லை யார்பொழில் தோணி புரவர்க்கே
நல்லை யாயிடு கின்றனை நங்கையே.
5.45.6
454
ஒன்று தானறி யாருல கத்தவர்
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்
துன்று வார்பொழில் தோணி புரவர்தங்
கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே.
5.45.7
455
உறவு பேய்க்கணம் உண்பது வெண்டலை
உறைவ தீமம் உடலிலோர் பெண்கொடி
துறைக ளார்கடல் தோணி புரத்துறை
இறைவ னார்க்கிவள் என்கண்டன் பாவதே.
5.45.8
456
மாக யானை மருப்பேர் முலையினர்
போக யானு மவள்புக்க தேபுகத்
தோகை சேர்தரு தோணி புரவர்க்கே
ஆக யானு மவர்க்கினி யாளதே.
5.45.9
457
இட்ட மாயின செய்வாளென் பெண்கொடி
கட்டம் பேசிய காரரக் கன்றனைத்
துட்ட டக்கிய தோணி புரத்துறை
அட்ட மூர்த்திக்கு அன்பது வாகியே.
5.45.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோணியப்பர், தேவியார் - திருநிலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
