திருவையாறு - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
276
சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம்
முந்தி வண்ணத்த ராய்முழு நீறணி
சந்தி வண்ணத்த ராய்த்தழல் போல்வதோர்
அந்தி வண்ணமு மாவர்ஐ யாறரே.
5.28.1
277
மூல வண்ணத்த ராய்முத லாகிய
கோல வண்ணத்த ராகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்த ராகி நெடும்பளிங்
கால வண்ணத்த ராவர்ஐ யாறரே.
5.28.2
278
சிந்தை வண்ணமுந் தீயதோர் வண்ணமும்
அந்திப் போதழ காகிய வண்ணமும்
பந்திக் காலனைப் பாய்ந்ததோர் வண்ணமும்
அந்தி வண்ணமு மாவர்ஐ யாறரே.
5.28.3
279
இருளின் வண்ணமு மேழிசை வண்ணமுஞ்
சுருளின் வண்ணமுஞ் சோதியின் வண்ணமும்
மருளு நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமு மாவர்ஐ யாறரே.
5.28.4
280
இழுக்கின் வண்ணங்க ளாகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்க ளாகியுங் கூடியும்
மழைக்கண் மாமுகி லாகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமு மாவர்ஐ யாறரே.
5.28.5
281
இண்டை வண்ணமும் ஏழிசை வண்ணமுந்
தொண்டர் வண்ணமுஞ் சோதியின் வண்ணமுங்
கண்ட வண்ணங்க ளாய்க்கனல் மாமணி
அண்ட வண்ணமு மாவர்ஐ யாறரே.
5.28.6
282
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமுங்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமு மாவர்ஐ யாறரே.
5.28.7
283
ஊழி வண்ணமும் ஒண்சுடர் வண்ணமும்
வேழ ஈருரி போர்த்ததோர் வண்ணமும்
வாழித் தீயுரு வாகிய வண்ணமும்
ஆழி வண்ணமு மாவர்ஐ யாறரே.
5.28.8
284
செய்த வன்றிரு நீறணி வண்ணமும்
எய்த நோக்கரி தாகிய வண்ணமுங்
கைது காட்சி யரியதோர் வண்ணமும்
ஐது வண்ணமு மாவர்ஐ யாறரே.
5.28.9
285
எடுத்த வாளரக் கன்றிறல் வண்ணமும்
இடர்க்கள் போல்பெரி தாகிய வண்ணமுங்
கடுத்த கைந்நரம் பாலிசை வண்ணமும்
அடுத்த வண்ணமு மாவர்ஐ யாறரே.
5.28.10
திருச்சிற்றம்பலம்
