திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை

bookmark

திருச்சிற்றம்பலம்

147

பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் வைகும் அயலெலாம்
இறைவன் எங்கள் பிரானிடை மருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.

5.15.1

148

மனத்துள் மாயனை மாசறு சோதியைப்
புனிற்றுப் பிள்ளைவெள் ளைம்மதி சூடியை
எனக்குத் தாயையெம் மானிடை மருதனை
நினைத்திட் டூறி நிறைந்ததென் னுள்ளமே.

5.15.2

149

வண்ட ணைந்தன வன்னியும் மத்தமுங்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனை
எண்டி சைக்கும் இடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே.

5.15.3

150

துணையி லாமையிற் றூங்கிருட் பேய்களோ
டணைய லாவதெ மக்கரி தேயெனா
இணையி லாஇடை மாமரு தில்லெழு
பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே.

5.15.4

151

மண்ணை யுண்டமால் காணான் மலரடி
விண்ணை விண்டயன் காணான் வியன்முடி
மொண்ணை மாமரு தாவென்றென் மொய்குழல்
பண்ணை யாயமுந் தானும் பயிலுமே.

5.15.5

152

மங்கை காணக் கொடார்மண மாலையைக்
கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை
நங்கை மீர்இடை மருதரிந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே.

5.15.6

இப்பதிகத்தில் 7,8,9,10,11-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

திருச்சிற்றம்பலம்