சேரமான் பெருமாள் நாயனார் பாசுரங்கள்

bookmark

4.1 சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்த பொன்வண்ணத்தந்தாதி (பாசுரங்கள் 169- 269)

169.    

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.    

1

170    

ஈசனைக் காணப் பலிகொடு செல்லஎற் றேஇவளோர்
பேயனைக் காமுறு பிச்சிகொ லாமென்று பேதையர்முன்
தாயெனை ஈர்ப்பத் தமியேன் தளரஅத் தாழ்சடையோன்
வாவெனைப் புல்லவென் றான்இமை விண்டன வாட்கண்களே.    

2

171    

கண்களங் கஞ்செய்யக் கைவளை சோரக் கலையுஞ்செல்ல
ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பஒண் கொன்றையந் தார்உருவப்
பெண்களங் கம்மிவள் பேதுறும் என்பதோர் பேதைநெஞ்சம்
பண்களங் கம்மிசை பாடநின் றாடும் பரமனையே.    

3

172    

பரமனை யேபலி தேர்ந்துநஞ் சுண்டது பன்மலர்சேர்
பிரமனை யேசிரங் கொண்டுங் கொடுப்பது பேரருளாம்
சரமனை யேஉடம் பட்டும் உடம்பொடு மாதிடமாம்
வரமனை யேகிளை யாகும்முக் கண்ணுடை மாதவனே.    

4

173    

தவனே உலகுக்குத் தானே முதல்தான் படைத்தவெல்லாம்
சிவனே முழுதும்என் பார்சிவ லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி கடலிடை நஞ்சமுண்ட
பவனே எனச்சொல்லு வாரும் பெறுவர்இப் பாரிடமே.    

5

174    

இடமால் வலந்தான் இடப்பால் துழாய்வலப் பால்ஒண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம் ஆழி இடம்வலம்மான்
இடமால் கரிதால் வலஞ்சே திவனுக் கெழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலங் கொக்கரை யாம்எங்கள் கூத்தனுக்கே.    

6

175    

கூத்துக் கொலாம் இவர் ஆடித் திரிவது கோல்வளைகள்
பாத்துக் கொலாம்பலி தேர்வது மேனி பவளம்கொலாம்
ஏத்துக் கொலாம்இவர் ஆதரிக் கின்ற திமயவர்தம்
ஓத்துக் கொலாம்இவர் கண்டதிண் டைச்சடை உத்தமரே.    

7

176    

உத்தம ராய்அடி யார்உல காளத் தமக்குரிய
மத்தம் அராமதி மாடம் பதிநலம் சீர்மைகுன்றா
எத்தம ராயும் பணிகொள்ள வல்ல இறைவர்வந்தென்
சித்தம ராய்அக லாதுடன் ஆடித் திரிதவரே.    

8

177    

திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளும் திரிதரினும்
அரிதவர் தன்மை அறிவிப்ப தாயினும் ஆழிநஞ்சேய்
கரிதவர் கண்டம் வெளிதவர் சாந்தம்கண் மூன்றொடொன்றாம்
பரிதவர் தாமே அருள்செய்து கொள்வர்தம் பல்பணியே.    

9

178  

 பணிபதம் பாடிசை ஆடிசை யாகப் பனிமலரால்
அணிபதங் கன்பற் கொளப்பனை அத்தவற் கேயடிமை
துணிபதங் காமுறு தோலொடு நீறுடல் தூர்த்துநல்ல
தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம் நீஎன் தனிநெஞ்சமே.    

10

179.    

நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர் ததும்ப முகம்மலர
அஞ்செங் கரதலம் கூம்பஅட் டாங்கம் அடிபணிந்து
தஞ்சொல் மலரால் அணியவல் லோர்கட்குத் தாழ்சடையான்
வஞ்சங் கடிந்து திருத்திவைத் தான்பெரு வானகமே.    

11

180    

வானகம் ஆண்டுமந் தாகினி ஆடிநந் தாவனம் சூழ்
தேனக மாமலர் சூடிச்செல் வோரும் சிதவல்சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப் போரும் கனகவண்ணப்
பால்நிற நீற்றற் கடியரும் அல்லாப் படிறருமே.    

12

181    

படிறா யினசொல்லிப் பாழுடல் ஓம்பிப் பலகடைச் சென்
றிடறா தொழிதும் எழுநெஞ்ச மேஎரி ஆடிஎம்மான்
கடல்தா யினநஞ்சம் உண்ட பிரான்கழல் சேர்தல்கண்டாய்
உடல்தான் உளபயன் ஆவசொன் னேன்இவ் வுலகினுள்ளே.    

13

182    

உலகா ளுறுவீர் தொழுமின்விண் ணாள்வீர் பணிமின்நித்தம்
பலகா முறுவீர் நினைமின் பரமனொ டொன்றலுற்றீர்
நலகா மலரால் அருச்சிமின் ஆள்நர கத்துநிற்கும்
அலகா முறுவீர் அரனடி யாரை அலைமின்களே.    

14

183    

அலையார் புனல்அனல் ஞாயி றவனி மதியம்விண்கால்
தொலையா உயிருடம் பாகிய சோதியைத் தொக்குமினோ
தலையாற் சுமந்துந் தடித்துங் கொடித்தேர் அரக்கன்என்னே
கலையான் ஒருவிரல் தாங்ககில் லான்விட்ட காரணமே.    

15

184    

காரணன் காமரம் பாடவோர் காமர்அம் பூடுறத்தன்
தாரணங் காகத் தளர்கின்ற தையலைத் தாங்குவர்யார்
போரணி வேற்கண் புனற்படம் போர்த்தன பூஞ்சுணங்கார்
ஏரணி கொங்கையும் பொற்படம் மூடி இருந்தனவே.    

16

185    

இருந்தனம் எய்தியும் நின்றுந் திரிந்துங் கிடந்தலைந்தும்
வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு போகநெஞ் சேமடவாள்
பொருந்திய பாகத்துப் புண்ணியன் புண்ணியல் சூலத்தெம்மான்
திருந்திய போதவன் தானே களையும்நம் தீவினையே.    

17

186    

தீவினை யேனைநின் றைவர் இராப்பகல் செத்தித்தின்ன
மேவினை வாழ்க்கை வெறுத்தேன் வெறுத்துவிட் டேன்வினையும்
ஓவின துள்ளந் தெளிந்தது கள்ளங் கடிந் தடைந்தேன்
பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே.    

18

187    

பாதம் புவனி சுடர்நய னம்புவ னம்உயிர்ப் போங்
கோதம் உடுக்கை உயர்வான் முடிவிசும் பேய் உடம்பு
வேதம் முகம்திசை தோள்மிகு பன்மொழி கீதம்என்ன
போதம் இவற்கோர் மணிநிறம் தோற்பது பூங்கொடியே.    

19

188    

கொடிமேல் இடபமுங் கோவணக் கீளுமோர் கொக்கிறகும்
அடிமேற் கழலும் அகலத்தில் நீறும்ஐ வாயரவும்
முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் மூவிலைய
வடிவேல் வடிவும்என் கண்ணுள்எப் போதும் வருகின்றவே.    

20

189    

வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்வை கற்குவைகல்
பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில் லேன்பொடி பூசிவந்துன்
அருகொன்றி நிற்க அருளுகண் டாய்அழல் வாய்அரவம்
வெருகொன்ற வெண்மதி செஞ்சடை மேல்வைத்த வேதியனே.    

21

190    

வேதியன் பாதம் பணிந்தேன் பணிந்துமெய்ஞ் ஞானமென்னும்
சோதியென் பால்கொள்ள உற்றுநின் றேற்கின்று தொட்டிதுதான்
நீதியென் றான்செல்வம் ஆவதென் றேன்மேல் நினைப்புவண்டேர்
ஓதிநின் போல்வகைத் தேயிரு பாலும் ஒழித்ததுவே.    

22

191    

ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன் உவகையை ஓங்கிற்றுள்ளம்
இழித்தேன் உடம்பினை ஏலேன் பிறரிடை இம்மனையும்
பழித்தேன் பழியே விளைக்கும்பஞ் சேந்தியக் குஞ்சரமும்
தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன் இனிமிகத் தெள்ளியனே.    

23

192    

தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன் தீங்கவி பாடலுற்றேன்
ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன் உரைத் தார்உரைத்த
கள்ளிய புக்காற் கவிகள்ஒட் டார்கடல் நஞ்சயின்றாய்
கொள்ளிய அல்லகண் டாய்புன்சொல் ஆயினும் கொண்டருளே.    

24

193    

அருளால் வருநஞ்சம் உண்டுநின் றாயை அமரர்குழாம்
பொருளார் கவிசொல்ல யானும்புன் சொற்கள் புணர்க்கலுற்றேன்
இருளா சறவெழில் மாமதி தோன்றவும் ஏன்றதென்ன
வெருளா தெதிர்சென்று மின்மினி தானும் விரிகின்றதே.    

25

194    

விரிகின்ற ஞாயிறு போன்றது மேனியஞ் ஞாயிறுசூழ்ந்
தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை அச்சடைக் கீழ்ச்
சரிகின்ற காரிருள் போன்றது கண்டம்அக் காரிருட்கீழ்ப்
புரிகின்ற வெண்முகில் போன்றுள தால்எந்தை ஒண்பொடியே.    

26

195    

பொடிக்கின் றிலமுலை போந்தில பல்சொற் பொருள்தெரியா
முடிக்கின் றிலகுழல் ஆயினும் கேண்மின்கள் மூரிவெள்ளம்
குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங் கண்டன்மெய்க் கொண்டணிந்த
கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி யேன்பிறர் கட்டுரையே.    

27

196    

உரைவளர் நான்மறை ஓதி உலகம் எலாந் திரியும்
விரைவளர் கொன்றை மருவிய மார்பன் விரிசடைமேல்
திரைவளர் கங்கை நுரைவளர் தீர்த்தஞ் செறியச் செய்த
கரைவளர் ஒத்துள தாற்சிர மாலைஎம் கண்டனுக்கே.    

28

197    

கண்டங் கரியன் கரியீர் உரியன் விரிதருசீர்
அண்டங் கடந்த பெருமான் சிறுமான் தரித்தபிரான்
பண்டன் பரம சிவனோர் பிரமன் சிரம்அரிந்த
புண்தங் கயிலன் பயிலார மார்பன்எம் புண்ணியனே.    

29

198    

புண்ணியன் புண்ணியல் வேலையன் வேலைய நஞ்சன்அங்கக்
கண்ணியன் கண்ணியல் நெற்றியன் காரணன் கார்இயங்கும்
விண்ணியன் விண்ணியல் பாணியன் பாணி கொள உமையாள்
பண்ணியன் பண்ணியல் பாடலன் ஆடற் பசுபதியே.    

30

199    

பதியார் பலிக்கென்று வந்தார் ஒருவர்க்குப் பாவைநல்லீர்
கதியார் விடைஉண்டு கண்மூன் றுளகறைக் கண்டமுண்டு
கொதியார் மழுவுண்டு கொக்கரை உண்டிறை கூத்துமுண்டு
மதியார் சடைஉள மால்உள தீவது மங்கையர்க்கே.    

31

200    

மங்கைகொங் கைத்தடத் திங்குமக் குங்குமப் பங்கநுங்கி
அங்கமெங் கும்நெகச் சங்கமங் கைத்தலத் துங்கவர்வான்
கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங் கண்அர வங்கள்பொங்கிப்
பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங் கும்முடிப் பண்டங்கனே.    

32

201  

 பண்டங்கன் வந்து பலிதாஎன்றான்பக லோற் கிடென்றேன்
அண்டங் கடந்தவன் அன்னம்என்றான்அயன் ஊர்தியென்றேன்
கொண்டிங் குன்ஐயம்பெய் என்றான் கொடித்தேர் அநங்கன்என்றேன்
உண்டிங் கமைந்ததென் றாற்கது சொல்ல உணர்வுற்றதே.    

33

202    

உற்றடி யார்உல காளஓர் ஊணும் உறக்கும் இன்றிப்
பெற்றம தாவதென் றேனும் பிரான்பெரு வேல்நெடுங்கண்
சிற்றடி யாய்வெண்பல் செவ்வாய் இவள்சிர மாலைக்கென்றும்
இற்றிடை யாம்படி யாகஎன் னுக்கு மெலிக்கின்றதே.    

34

203    

மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய் இழுதழல் வாய்மெழுகு
கலிக்கின்ற காமம் கரதலம் எல்லி துறக்கம் வெங்கூற்
றொலிக்கின்ற நீருறு தீயொளி யார்முக்கண் அத்தர்மிக்க
பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை சூடிய பல்லுயிரே.    

35

204    

பல்லுயிர் பாகம் உடல்தலை தோல்பக லோன்மறல்பெண்
வில்லிஓர் வேதியன் வேழம் நிரையே பறித்துதைத்துப்
புல்லியுஞ் சுட்டும் அறுத்தும் உரித்துங்கொண் டான் புகழே
சொல்லியும் பாடியும் ஏத்தக் கெடும்நங்கள் சூழ்துயரே.  

 36

205    

துயருந் தொழும்அழும் சோரும் துகிலுங் கலையுஞ்செல்லப்
பெயரும் பிதற்றும் நகும்வெய் துயிர்க்கும் பெரும்பணிகூர்ந்
தயரும் அமர்விக்கும் மூரி நிமிர்க்கும்அந் தோஇங்ஙனே
மயரும் மறைக்காட் டிறையினுக் காட்பட்ட வாணுதலே.    

37

206    

வாணுதற் கெண்ணம்நன் றன்று வளர்சடை எந்தைவந்தால்
நாணுதற் கெண்ணாள் பலிகொடுசென்று நகும்நயந்து
பேணுதற் கெண்ணும் பிரமன் திருமால் அவர்க் கரிய
தாணுவுக் கென்னோ இராப்பகல் நைந்திவள் தாழ்கின்றதே.    

38

207    

தாழுஞ் சடைசடை மேலது கங்கையக் கங்கைநங்கை
வாமுஞ் சடைசடை மேலது திங்கள்அத் திங்கட்பிள்ளை
போழுஞ் சடைசடை மேலது பொங்கர வவ்வரவம்
வாழுஞ் சடைசடை மேலது கொன்றையெம் மாமுனிக்கே.    

39

208    

முனியே முருகலர் கொன்றையி னாய்என்னை மூப்பொழித்த
கனியே கழலடி அல்லாற் களைகண்மற் றொன்றுமிலேன்
இனியேல் இருந்தவம் செய்யேன் திருந்தஅஞ் சேநினைந்து
தனியேன் படுகின்ற சங்கடம் ஆர்க்கினிச் சாற்றுவனே.    

40

209    

சாற்றுவன் கோயில் தலையும் மனமும் தவம்இவற்றால்
ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந் தாற்றிஅஞ் சொல்மலரால்
ஏற்றுவன் ஈசன்வந் தென்மனத் தான்என் றெழுந்தலரே
தூற்றுவன் தோத்திரம் ஆயின வேயினிச் சொல்லுவனே.    

41

210  

 சொல்லா தனகொழு நாவல்ல சோதியுட் சோதிதன்பேர்
செல்லாச் செவிமரம் தேறித் தொழாதகை மண்திணிந்த
கல்லாம் நினையா மனம்வணங்காத்தலை யும்பொறையாம்
அல்லா அவயவந் தானும் மனிதர்க் கசேதனமே.    

42

211    

தனக்குன்றம் மாவையம் சங்கரன் தன்னருள் அன்றிப்பெற்றால்
மனக்கென்றும் நஞ்சிற் கடையா நினைவன் மதுவிரியும்
புனக்கொன்றை யான்அரு ளால்புழுவாகிப் பிறந்திடினும்
எனக்கென்றும் வானவர் பொன்னுல கோடொக்க எண்ணுவனே.    

43

212    

எண்ணம் இறையே பிழைக்குங் கொலாம்இமை யோர்இறைஞ்சும்
தண்ணம் பிறைச்சடைச் சங்கரன் சங்கக் குழையன்வந்தென்
உள்நன் குறைவ தறிந்தும் ஒளிமா நிறங்கவர்வான்
கண்ணும் உறங்கா திராப்பகல் எய்கின்ற காமனுக்கே.    

44

213    

காமனை முன்செற்ற தென்றாள் அவள்இவள் காலன்என்னும்
தாமநன் மார்பனை முன்செற்ற தென்றுதன் கையெறிந்தாள்
நாம்முனஞ் செற்றதன் றாரைஎன் றேற்கிரு வர்க்கும் அஞ்சி
ஆமெனக் கிற்றிலர் அன்றெனக் கிற்றிலர் அந்தணரே.    

45

214  

அந்தணராம் இவர்ஆருர் உறைவதென் றேன்அதுவே
சந்தணை தோளியென் றார்தலை யாயசலவர் என்றேன்
பந்தணை கையாய் அதுவும்உண் டென்றார் உமையறியக்
கொந்தணை தாரீர் உரைமின்என் றேன்துடி கொட்டினரே.    

46

215    

கொட்டும் சிலபல சூழநின் றார்க்கும்குப் புற்றெழுந்து
நட்ட மறியும் கிரீடிக்கும் பாடும் நகும்வெருட்டும்
வட்டம் வரும்அருஞ் சாரணை செல்லும் மலர்தயங்கும்
புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக் காட்டரன் பூதங்களே.    

47

216    

பூதப் படையுடைப் புண்ணியரேபுறஞ் சொற்கள்நும்மேல்
ஏதப் படஎழு கின்றன வாலிளை யாளொடும்மைக்
காதற்படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற்
சேதப் படுத்திட்ட காரணம் நீரிறை செப்புமினே.  

 48

217    

செப்பன கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை நிறம்பணித்தான்
மைப்புரை கண்ணுக்கு வார்புனல் கங்கைவைத் தான்மனத்துக்
கொப்பன இல்லா ஒளிகிளர் உன்மத்தமும் அமைத்தான்
அப்பனை அம்மனைநீயென் பெறாதுநின் றார்க்கின்றதே.    

49

218    

ஆர்க்கின்ற நீரும் அனலும் மதியும் ஐவாய்அரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும் உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவும்எல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குடன் ஆகிக் கலந்தனவே.    

50

219    

கலந்தனக் கென்பலர் கட்டவிழ் வார்கொன்றை கட்டரவார்
சலந்தனக் கண்ணிய கானகம் ஆடியோர் சாணகமும்
நிலந்தனக் கில்லா அகதியன் ஆகிய நீலகண்டத்
தலந்தலைக் கென்னே அலந்தலை யாகி அழிகின்றதே.    

51

220    

அழிகின்ற தாருயிர் ஆகின்ற தாகுலம் ஏறிடும்மால்
இழிகின்ற சங்கம் இருந்த முலைமேல் கிடந்தனபீர்
பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது வாய்கலை போனவந்தார்
மொழிகின்ற தென்இனி நான்மறை முக்கண் முறைவனுக்கே.    

52

221    

முறைவனை மூப்புக்கு நான்மறைக் கும்முதல் ஏழ்கடலந்
துறைவனைச் சூழ்கயி லாயச் சிலம்பனைத் தொன்மைகுன்றா
இறைவனை எண்குணத் தீசனை ஏத்தினர் சித்தந்தம்பால்
உறைவனைப் பாம்பனை யாம்பின்னை என்சொல்லி ஓதுவதே.    

53

222    

ஓதவன் நாமம் உரையவன் பல்குணம் உன்னைவிட்டேன்
போதவன் பின்னே பொருந்தவன் வாழ்க்கை திருந்தச்சென்று
மாதவ மாகிடு மாதவ மாவளர் புன்சடையான்
யாதவன் சொன்னான் அதுகொண் டொழிஇனி ஆரணங்கே.    

54

223  

ஆரணங் கின்முகம் ஐங்கணை யான்அகம் அவ்வகத்தில்
தோரணந் தோள்அவன் தேரகல் அல்குல்தொன் மைக்கண்வந்த
பூரண கும்பம் முலைஇவை காணப் புரிசடைஎம்
காரணன் தாள்தொழும் அன்போ பகையோ கருதியதே.    

55

224    

கருதிய தொன்றில்லை ஆயினும் கேண்மின்கள் காரிகையாள்
ஒருதின மும்முள ளாகஒட் டாதொடுங் கார்ஒடுங்கப்
பொருதநன் மால்விடைப் புண்ணியன் பொங்கிளங் கொன்றைஇன்னே
தருதிர்நன் றாயிடும் தாரா விடிற்கொல்லுந் தாழ்இருளே.    

56

225    

இருளார் மிடற்றால் இராப்பகல் தன்னால் வரைமறையால்
பொருளார் கமழ்கொன்றை யால்முல்லை புற்றர வாடுதலால்
தெருளார் மதிவிசும் பால்பெளவந்தெண்புனல் தாங்குதலால்
அருளாற் பலபல வண்ணமுமா அரன் ஆயினனே.  

 57

226    

ஆயினஅந்தணர் வாய்மை அரைக்கலை கைவளைகள்
போயின வாள்நிகர் கண்ணுறு மைந்நீர் முலையிடையே
பாயின வேள்கைக் கரபத் திரத்துக்குச் சூத்திரம்போல்
ஆயின பல்சடை யார்க்கன்பு பட்டஎம் ஆயிழைக்கே.    

58

227    

இழையார் வனமுலை வீங்கி இடையிறு கின்ற திற்றால்
பிழையாள் நமக்கிவை கட்டுண்க என்பது பேச்சுக்கொலாம்
கழையார் கழுக்குன்ற வாணனைக் கண்டனைக் காதலித்தாள்
குழையார் செவியொடு கோலக் கயற்கண்கள் கூடியவே.    

59

228    

கூடிய தன்னிடத் தான்உமை யாளிடத் தானைஐயா
றீடிய பல்சடை மேற்றெரி வண்ணம் எனப்பணிமின்
பாடிய நான்மறை பாய்ந்தது கூற்றைப் படர்புரஞ்சுட்
டாடியநீறுசெஞ் சாந்திவை யாம்எம் அயன்எனவே.    

60

229    

அயமே பலிஇங்கு மாடுள தாணுவோர் குக்கிக்கிடப்
பயமே மொழியும் பசுபதி ஏறெம்மைப் பாய்ந்திடுமால்
புயமேய் குழலியர் புண்ணியர் போமின் இரத்தல்பொல்லா
நயமே மொழியினும் நக்காம் அம் மாஉம்மை நாணுதுமே.    

61

230    

நாணா நடக்க நலத்தார்க் கிடையில்லை நாம்எழுத
ஏணார் இருந்தமி ழால்மற வேனுந் நினைமின்என்றும்
பூணார் முலையீர் நிருத்தன் புரிசடை எந்தைவந்தால்
காணாவிடேன்கண்டி ரவா தொழியேன் கடிமலரே.    

62

231    

கடிமலர்க் கொன்றை தரினும்புல் லேன்கலை சாரஒட்டேன்
முடிமலர் தீண்டின் முனிவன் முலைதொடு மேற்கெடுவன்
அடிமலர் வானவர் ஏத்தநின் றாய்க்கழ கல்லஎன்பன்
தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு வாணை தொடங்குவனே.    

63

232    

தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரே
அடங்கிய வேட்கை அரன்பால் இலர்அறு காற்பறவை
முடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கன்றி இங்கும்அன்றிக்
கிடங்கினிற் பட்ட கராஅனை யார்பல கேவலரே.    

64

233    

வலந்தான் கழல்இடம் பாடகம் பாம்பு வலம்இடமே
கலந்தான் வலம்நீ றிடம்சாந் தெரிவலம் பந்திடமென்
பலந்தார் வலம்இடம் ஆடகம் வேல்வலம் ஆழிஇடம்
சலந்தாழ் சடைவலம் தண்ணங் குழல்இடம் சங்கரற்கே.    

65

234    

சங்கரன் சங்கக் குழையன் சரணார விந்தந்தன்னை
அங்கரங் கூப்பித் தொழுதாட் படுமின்தொண் டீர்நமனார்
கிங்கரர் தாம்செய்யும் கீழா யினமிறை கேட்டலுமே
இங்கரம் ஆயிரம் ஈரஎன் நெஞ்சம் எரிகின்றதே.    

66

235    

எரிகின்ற தீயொத் துளசடை ஈசற்கத் தீக்கிமையோர்
சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல் அப்புனலிற்
சரிகின்ற திங்களோர் தோணிஒக்கின்றதத் தோணிஉய்ப்பான்
தெரிகின்ற திண்கழை போன்றுள தால்அத்திறல் அரவே.    

67

236    

அரவம் உயிர்ப்ப அழலும்அங் கங்கை வளாய்க்குளிரும்
குரவங் குழல்உமை ஊடற்கு நைந்துரு கும்அடைந்தோர்
பரவும் புகழ்அண்ணல் தீண்டலும் பார்வா னவைவிளக்கும்
விரவும் இடர்இன்பம் எம்இறை சூடிய வெண்பிறையே.    

68

237    

பிறைத்துண்டம் சூடலுற் றோபிச்சை கொண்டனல் ஆடலுற்றோ
மறைக்கண்டம் பாடலுற் றோஎன்பும் நீறும் மருவலுற்றோ
கறைக்கண்டம் புல்லலுற் றோகடு வாய்அர வாடலுற்றோ
குறைக்கொண் டிவள்அரன் பின்செல்வ தென்னுக்குக் கூறுமினே.    

69

238    

கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற் றேவல் குளிர்மின்கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின்செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவைநெறியா
ஏறுமின் வானத் திருமின் விருந்தாய் இமையவர்க்கே.    

70

239    

இமையோர் கொணர்ந்திங் கிழித்திட நீர்மைகெட் டேந்தல்பின்போய்
அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த சலமகளாய் அணைந்தே
எமையாளு டையான் தலைமக ளாஅங் கிருப்பஎன்னே
உமையா ளவள்கீழ் உறைவிடம் பெற்றோ உறைகின்றதே.    

71

240    

உறைகின் றனர்ஐவர் ஒன்பது வாயில்ஓர் மூன்றுளதால்
மறைகின்ற என்பு நரம்போ டிறைச்சி உதிரமச்சை
பறைகின்ற தோல்போர் குரம்பை பயன்இல்லை போய்அடைமின்
அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக் கொண்டோன் மலரடிக்கே.    

72

241    

அடிக்கண்ணி கைதொழு தார்க்ககன் ஞாலங் கொடுத்தடிநாய்
வடிக்கண்ணி நின்னைத் தொழவளை கொண்டனை வண்டுண்கொன்றைத்
கடிக்கண்ணி யாய்எமக் கோருர் இரண்டகங் காட்டினையால்
கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே றுயர்த்த குணக்குன்றமே.    

73

242    

குன்றெடுத் தான்செவி கண்வாய் சிரங்கள் நெரிந்தலற
அன்றடர்த் தற்றுகச் செற்றவன் நற்றவர்க் கற்றசிவன்
மன்றிடைத் தோன்றிய நெல்லிக் கனிநிற்ப மானுடர்போய்
ஒன்றெடுத் தோதிப் புகுவர் நரகத் துறுகுழியே.    

74

243    

குழிகட் கொடுநடைக் கூன்பற் கவட்டடி நெட்டிடைஊன்
உழுவைத் தழைசெவித் தோல்முலைச் சூறை மயிர்ப்பகுவாய்த்
தெழிகட் டிரைகுரல் தேம்பல் வயிற்றுத் திருக்குவிரற்
கழுதுக் குறைவிடம் போல்கண்டன் ஆடும் கடியரங்கே.    

75

244    

அரங்கா மணிஅன்றில் தென்றல்ஓர் கூற்றம் மதியம் அந்தீச்
சரங்காமன் எய்யஞ்சு சந்துட் பகையால் இவள்தளர்ந்தாள்
இரங்கா மனத்தவர் இல்லை இரங்கான் இமையவர்தம்
சிரங்கா முறுவான் எலும்புகொள் வான்என்றன் தேமொழிக்கே.    

76

245    

மொழியக்கண் டான்பழி மூளக்கண் டான்பிணி முன்கைச் சங்கம்
அழியக்கண் டான்அன்றில் ஈரக்கண் டான்தென்றல் என்உயிர்மேல்
சுழியக்கண் டான்துயர் கூரக்கண் டான்துகில் சூழ்கலையும்
கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத லான்கண்ட கள்ளங்களே.    

77

246    

கள்ள வளாகங் கடிந்தடி மைப்படக் கற்றவர்தம்
உள்ள வளாகத் துறுகின்ற உத்தமன் நீள்முடிமேல்
வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி வியன்பிறையைக்
கொள்ள அளாய்கின்ற பாம்பொன் றுளது குறிக்கொண்மினே.    

78

247    

குறிக்கொண் டிவள்பெய்த கோல்வளை யேவந்து கோள்இழைத்தீர்
வெறிக்கொண்ட வெள்ளிலம் போதோ எலும்போ விரிசடைமேல்
உறைக்கொன்றை யோஉடைத் தோலோ பொடியோ உடைகலனோ
கறைக்கண்ட ரேநுமக் கென்னோ சிறுமி கடவியதே.    

79

248    

கடவிய தொன்றில்லை ஆயினுங் கேண்மின்கள் காரிகையாள்
மடவிய வாறுகண் டாம்பிறை வார்சடை எந்தைவந்தால்
கிடவிய நெஞ்சம் இடங்கொடுத் தாட் கவலங் கொடுத்தான்
தடவிய கொம்பதன் தாள்மேல் இருந்து தறிக்குறுமே.    

80

249    

தறித்தாய் அயன்தலை சாய்த்தாய் சலந்தர னைத்தழலாப்
பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய் புரம்புன லும்சடைமேற்
செறித்தாய்க் கிவைபுகழ் ஆகின்ற கண்டிவள் சில்வளையும்
பறித்தாய்க் கிதுபழி ஆகுங்கொ லாம்என்று பாவிப்பனே.  

81

250    

பாவிக்கும் பண்டையள் அல்லள் பரிசறி யாள்சிறுமி
ஆவிக்கும் குற்குலு நாறும் அகம்நெக அங்கம் எங்கும்
காவிக்கண் சோரும்பொச் சாப்புங் கறைமிடற் றானைக்கண்ணில்
தாவிக்கும் வெண்ணகை யாள்அம்மெல் லோதிக்குச் சந்தித்தவே.    

82

251    

சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம் பிணிக்குத் தனிமருந்தாம்
சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித் தமுதமுமாம்
வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும் வானோர் வணங்கநின்ற
அந்திக்கண் ஆடியி னான்அடி யார்களுக் காவனவே.    

83

252    

ஆவன யாரே அழிக்கவல் லார்அமை யாவுலகில்
போவன யாரே பொதியகிற் பார்புரம் மூன்றெரித்த
தேவனைத் தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுது
தீவினை யேன்இழந் தேன்கலை யோடு செறிவளையே.    

84

253    

செறிவளை யாய்நீ விரையல் குலநலம் கல்விமெய்யாம்
இறையவன் தாமரைச் சேவடிப் போதென்றெல் லோரும்ஏத்தும்
நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று வேண்டிய நீசர்தம்பால்
கறைவளர் கண்டனைக்காணப் பெரிதும் கலங்கியதே.    

85

254    

கலங்கின மால்கடல் வீழ்ந்தன கார்வரை ஆழ்ந்ததுமண்
மலங்கின நாகம் மருண்டன பல்கணம் வானங்கைபோய்
இலங்கின மின்னொடு நீண்ட சடைஇமை யோர்வியந்தார்
அலங்கல்நன் மாநடம் ஆர்க்கினி ஆடுவ தெம்மிறையே.    

86

255    

எம்மிறைவன் இமையோர் தலை வன்உமை யாள்கணவன்
மும்முறை யாலும் வணங்கப் படுகின்ற முக்கண்நக்கற்
கெம்முறை யாள்இவள் என்பிழைத் தாட்கிறை என்பிழைத்தான்
இம்முறை யாலே கவரக் கருதிற் றெழிற்கலையே.    

87

256    

கலைதலை சூலம் மழுக்கனல் கண்டைகட் டங்கம்கொடி
சிலைஇவை ஏந்திய எண்டோட் சிவற்கு மனஞ்சொற்செய்கை
நிலைபிழை யாதுகுற் றேவல்செய்தார்நின்ற மேருஎன்னும்
மலைபிழை யார்என்ப ரால் அறிந் தோர்கள்இம் மாநிலத்தே.    

88

257    

மாநிலத் தோர்கட்குத் தேவர் அனையஅத் தேவர்எல்லாம்
ஆனலத் தாற்றொழும் அஞ்சடை ஈசன் அவன்பெருமை
தேனலர்த் தாமரை யோன்திரு மாலவர் தேர்ந்துணரார்
பாநலத் தாற்கவி யாமெங்ங னேஇனிப் பாடுவதே.    

89

258    

பாடிய வண்டுறை கொன்றையி னான்படப் பாம்புயிர்ப்ப
ஓடிய தீயால் உருகிய திங்களின் ஊறல்ஒத்த
தாடிய நீறது கங்கையுந் தெண்ணீர் யமுனையுமே
கூடிய கோப்பொத்த தால்உமை பாகம்எம் கொற்றவற்கே.    

90

259    

கொற்றவ னேஎன்றும் கோவணத் தாய்என்றும் ஆவணத்தால்
நற்றவ னேஎன்றும் நஞ்சுண்டி யேஎன்றும் அஞ்சமைக்கப்
பெற்றவ னேஎன்றும் பிஞ்ஞக னேஎன்றும் மன்மதனைச்
செற்றவ னேஎன்றும் நாளும் பரவும்என் சிந்தனையே.    

91

260    

சிந்தனை செய்ய மனம்அமைத் தேன்செப்ப நாஅமைத்தேன்
வந்தனை செய்யத் தலைஅமைத் தேன்கை தொழஅமைத்தேன்
பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் அரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி ஈசற் கிவையான் விதித்தனவே.    

92

261    

விதித்தன வாழ்நாள் பெரும்பிணி விச்சைகள் கொண்டுபண்டே
கொதிப்பினில் ஒன்றுங் குறைவில்லை குங்குமக் குன்றனைய
பதித்தனங் கண்டனம் குன்றம்வெண் சந்தனம் பட்டனைய
மதித்தனங் கண்டனம் நெஞ்சினி என்செய்யும் வஞ்சனையே.    

93

262  

 வஞ்சனை யாலே வரிவளை கொண்டுள்ள மால்பனிப்பத்
துஞ்சும் பொழுதும் உறத்தொழுதேன் சொரி மால் அருவி
அஞ்சன மால்வரை வெண்பிறை கவ்விஅண் ணாந்தனைய
வெஞ்சின ஆனையின் ஈருரி மூடிய வீரனையே.    

94

263    

வீரன் அயன்அரி வெற்பலர் நீர்எரி பொன்எழிலார்
காரொண் கடுக்கை கமலம் துழாய்விடை தொல்பறவை
பேர்ஒண் பதிநிறம் தார்இவர் ஊர்திவெவ் வேறென் பரால்
யாரும் அறியா வகைஎங்கள் ஈசர் பரிசுகளே.    

95

264    

பரியா தனவந்த பாவமும் பற்றும்மற் றும்பணிந்தார்க்
குரியான் எனச்சொல்லி உன்னுட னாவன் எனஅடியார்க்
கரியான் இவன்என்று காட்டுவன் என்றென் றிவைஇவையே
பிரியா துறையும் சடையான் அடிக்கென்றும் பேசுதுமே.    

96

265.    

பேசுவ தெல்லாம் அரன்திரு நாமம்அப் பேதை நல்லாள்
காய்சின வேட்கை அரன்பாலது அறு காற்பறவை
மூசின கொன்றை முடிமே லதுமுலை மேல்முயங்கப்
பூசின சாந்தம் தொழுமால் இவைஒன்றும் பொய்யலவே.    

97

266.    

பொய்யா நரகம் புகினுந் துறக்கம் புகினும்புக்கிங்
குய்யா உடம்பினோ டூர்வ நடப்ப பறப்பஎன்று
நையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறைசேர்
மையார் மிடற்றான் அடிமற வாவரம் வேண்டுவனே.    

98

267.    

வேண்டிய நாள்களிற் பாதியும் கங்குல் மிகஅவற்றுள்
ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை மேலதுமூப்
பாண்டின அச்சம் வெகுளி அவாஅழுக் காறிங்ஙனே
மாண்டன சேர்தும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே.    

99

268.    

மாயன்நன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமை
ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே
காய்சின ஆனை வளரும் கனக மலையருகே
போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே.

100

269    

ஆக்கியோன் பெயர்
அன்றுவெள் ளானையின் மீதிமை யோர்சுற் றணுகுறச்செல்
வன்றொண்டர் பின்பரி மேற்கொண்டு வெள்ளி மலையரன்முன்
சென்றெழில் ஆதி உலாஅரங் கேற்றிய சேரர்பிரான்
மன்றிடை ஓதுபொன் வண்ணத்தந்தாதி வழங்கிதுவே.