அதிரா அடிகள் பாசுரங்கள்
10.1 அதிரா அடிகள் அருளிச் செய்த மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை
திருச்சிற்றம்பலம்
803.
ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்
குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன்
மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்
கடதடக் கபோலத் தோரிட மருப்பிற்
கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்
சேவடி யுகளம் அல்லது
யாவையும் இலமினி இருநிலத் திடையே.
1
804
நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலந்துளங்கச் சப்பாணி கொட்டும் -கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.
2
805
மணிசிந்து கங்கைதன் மானக் குருளையை வாள்அரக்கர்
அணிசிந்த வென்றஎம் ஐயர்க் கிளங்கன்றை அங்கரும்பின்
துணிசிந்த வாய்ப்பெய்த போதகத் தைத்தொடர்ந் தோர்பிறவிப்
பிணிசிந்து கார்முளை யைப்பிடித் தோர்க்கில்லை பேதுறவே.
3
806
பேதுறு தகையம் அல்லது தீதுறச்
செக்கர்க் குஞ்சிக் கருநிறத் தொக்கல் நாப்பண்
புக்கவண் இரும்பொறித் தடக்கையும்
முரணிய பெருந்தோட்
கொட்ட நாவி தேவிதன்
மட்டுகு தெரியல் அடிமணந் தனமே.
4
807
மேய கருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனை
ஓய மணியூசல் ஆடின்றே - பாய
மழைசெவிக்காற் றுந்திய வாளமர்க்கண் எந்தை
தழைசெவிக்காற் றுந்தத் தளர்ந்து.
5
808
உந்தத் தளரா வளைத்தனம் முன்னம்மின் ஓடைநெற்றிச்
சந்தத் தளரா ஒருதனித் தெவ்வர்தந் தாளிரியூர்
விந்தத் தளரா மருங்கிற் கிளிபெற்ற வேழக்கன்றின்
மந்தத் தளரா மலர்ச்சர ணங்கள் வழுத்துமின்னே.
6
809
மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து
ஓவற விளங்கிய துளைக்கைக் கடவுளை
யாம்மிக வழுத்துவ தெவனோ அவனேல்
பிறந்த திவ் வுலகின் பெருமூ தாதை
உரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது
மேருச் சிமையத்து மீமிசை
வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே.
7
810
மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே
கழிய வருபொருளே கண்ணே -தெழிய
கலாலயனே எங்கள் கணபதியே நின்னை
அலாதையனே சூழாதென் அன்பு.
8
811
அன்பு தவச்சுற்று காரழல் கொண்டெயில் மூன்றெரிய
வன்புத வத்துந்தை மாட்டுகின் றாம்மதஞ் சூழ்மருப்பிற்
கன்பு தவக்கரத் தாளமிட் டோடிக் கடுநடையிட்
டின்பு தவச்சென்று நீயன்று காத்த தியம்புகவே.
9
812
கவவுமணிக் கேடகக் கங்கணக் கரவனா
அறைகழல் அவுணரொடு பொருத ஞான்றுநீள்
புழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதை
விரைநனி கீறி மூரி
அஞ்சேறு புலர்த்தும் என்பர்
மஞ்சேறு கயிலை மலைகிழ வோயே.
10
813
மலைசூழ்ந் திழிகின்ற மாசுணப்பொற் பாறை
தலைசூழ்ந்து தானினைப்ப தொக்கும் - கலைசூழ்
திரண்டகங்கொள் பேரறிவன் திண்வயிற்றின் உம்பர்க்
கரண்டகங்கொள் காலுயிர்க்குங் கை.
11
814
காலது கையது கண்ணது தீயது கார்மதநீர்
மேலது கீழது நூலது வெற்பது பொற்பமைதீம்
பாலது தேனது தானது மென்மொழிப் பாவைமுப்பூண்
வேலது வாளது நான்மறைக் கீன்ற விடுசுடர்க்கே.
12
815
சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல்
சேய்மூ வுலகம் வலம்வர வேயக்
கொன்றையம் படலை துன்றுசடைக் கிடந்த
ஓங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி
அள்ளல் தீஞ்சுவை அருந்திய
வள்ளற் கிங்கென் மனங்கனிந் திடுமே.
13
816
இக்கயங்கொள் மூவலயஞ் சூழேழ் தடவரைகள்
திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை - புக்கியங்கு
தேனாட வண்டாடச் செங்கீரை ஆடின்றே
வானாடன் பெற்ற வரை.
14
817
பெற்றமெல் லோதி சிலம்பின் மகள்பெறப் பிச்சுகந்த
மற்றவள் பிச்சன் மயங்கன்முன் னோன்பின் னிணைமைமிகக்
கற்றவன் ஐயன் புறங்காட் டிடைநடம் ஆட்டுகந்தோ
செற்றவெண் தந்தத் தவன்நம்மை ஆட்கொண்டு செய்தனவே.
15
818
செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளை
வெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப்
பெருந்திரட் புழைக்கை
மண்முழை வழங்கும் திண்முரண் ஏற்றின்
பனையடர்ப் பாகன் றன திணையடி
நெடும்பொற் சரணம் ஏத்த
இடும்பைப் பெளவம் இனிநீங் கலமே.
16
819
அலங்கல் மணிகனகம் உந்தி அருவி
விலங்கல் மிசைஇழிவ தொக்கும் - பலங்கனிகள்
உண்டளைந்த கோன்மகுடத் தொண்கடுக்கைத் தாதளைந்து
வண்டணைந்து சோரும் மதம்.
17
820
மதந்தந்த மென்மொழி மாமலை யாட்டி மடங்கல்கொன்ற
மதந்தந்த முக்கண் ணரற்குமுன் ஈன்றவம் மாமலைபோல்
மதந்தந்த கும்பக் குழவிமந் தாரப்பொன் னாட்டிருந்து
மதந்தந்த செம்மலன் றோவையம் உய்ய வளர்கின்றதே.
18
821
வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப்
பொதும்பர்த் தும்பி ஒழிகின் றோச்சும்
பாரிடைக் குறுநடைத் தோடி ஞாங்கர்
இட்ட மாங்கனி
முழுவதும் விழுங்கிய முளைப்பனைத் தடக்கை
எந்தை அல்லது மற்று யாவுள
சிந்தை செய்யும் தேவதை நமக்கே.
19
822
கேளுற்றி யான்தளர ஒட்டுமே கிம்புரிப்பூண்
வாளுற்ற கேயூர வாளரக்கர் - தோளுற்
றறுத்தெறிந்து கொன்றழித்த அங்கயங்கண் மீண்டே
இறுத்தெறிந்து கொன்றழித்த ஏறு.
20
823
ஏறு தழீஇயவெம் புத்தேள் மருகஎங் குந்தவள
நீறு தழீஇயஎண் தோளவன் செல்வவண் டுண்ணநெக்க
ஆறு தழீஇய கரதலத் தையநின் றன்னைஅல்லால்
வேறு தழீஇத்தொழு மோவணங் காத வியன்சிரமே.
21
824
சிரமே, விசும்புபோத உயரி இரண்டசும்பு பொழியும்மே
கரமே, வரைத்திரண் முரணிய விரைத்து விழும்மே
புயமே, திசைவிளிம்பு கிழியச் சென்று செறிக்கும்மே
அடியே, இடுந்தொறும் இவ்வுலகம் பெயரும்மே
ஆயினும், அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ
நெஞ்சகத் தொடுங்குமோ நெடும்பணைச் சூரே.
22
825
சூர்தந்த பொற்குவட்டின் சூளிகையின் வானயிர்த்து
வார்தந் தெழுமதியம் மன்னுமே - சீர்தந்த
மாமதலை வான்மதியங் கொம்பு வயிறுதித்த
கோமதலை வாண்மதியங் கொம்பு.
23
(24முதல்30 வரையிலான திருப்பாடல்கள் கிடைக்கப் பெறவில்லை)
திருச்சிற்றம்பலம்
