அதிகப் பாடல்கள்
1. உரை நூல்களில் காணப்பட்ட பாடல்கள்
3048
ஆறு சமய முதலாம் சமயங்கள்
ஊற தெனவும் உணர்க உணர்பவர்
வேற தறவுணர் வார்மெய்க் குருநந்தி
ஆறி யமைபவர்க் கண்ணிக்குந் தானே.
1
3049
உடலாங் குகையில் உணர்வாகும் பீடத்து
அடலார் சமாதி இதயத்ததாக
நடமா டியகுகை நாடிய யோகி
மிடையாகா வண்ணமே சாதிக்கு மெல்லவே.
2
3050
நிற்ற லிருத்தல் கிடத்தல் நடையோடல்
பெற்ற வக்காலுந் திருவருள் பேராமல்
சற்றியன் ஞானந்தந் தானந்தந் தங்கவே
உற்ற பிறப்பற் றொளிர்ஞான நிட்டையே.
3
3051
நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம்
நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி
நாயோட்டு மந்திரம் நாமறியோமே.
4
3052
இணங்க வேண்டா இனியுல கோருடன்
நுணங்கு கல்வியும் நூல்களும் என் செயும்
வணங்க வேண்டா வடிவை அறிந்தபின்
பிணங்க வேண்டா பிதற்றை யொழியுமே.
5
3053
எவ்விடத் துந்தம் பணியின்மை கண்டுளோர்
எவ்விடத்தும் பணி ஈசன் பணியென்றே
அவ்விடத் தைங்கரு மத்தால் அறிதலால்
உவ்விடத் தோருக்கோர் உபாய மில்லையே.
6
3054
ஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திலர்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின்
முத்தி விளைக்கு முதல்வனு மாமே.
7
3055
முதலொன்றா மானை முதுகுடன் வாலுந்
திதமுறு கொம்பு செவிதுதிக் கையால்
மதியுடன் அந்தகர் வகைவகை பார்த்தே
அதுகூற லொக்கும் ஆறு சமயமே.
8
3056
பொங்கும் இருள்நீக்கும் புண்ணியக் கூத்தனை
எங்குமாய் நின்றாடும் ஏகம்பக் கூத்தனை
கங்குல் பகலினுங் காணாத கூத்தனை
இங்கென் இடமாக யான்கண்ட வாறே.
9
3057
வாயு விருந்திட வாயு விருந்திடு
மாயு விருந்திடக் காய மிகுந்திடும்
காய மிருந்தாற் கருத்து மிருந்திடு
மேய வறிவுணர் வுற்றால் வினையின்றே.
10
3058
அரனவன் பாதலமாதி சிவானந்தம்
வருமவை சத்திகள் மூன்றாய் வகுத்திட்
டுரனுறு சந்நிதி செட்டிப்ப வென்றிட்
டிரனுறத் தோயாச் சிவாநந்தி யாமே.
11
3059
அன்பு சிவம் என்று அறியார் இரண்டென்பர்
அன்பு சிவம் என்று அறிவார்க்கு இரண்டில்லை
அன்பு சிவம் என்று அரிவால் அறிந்தபின்
அன்பு சிவமாய் அறிந்து கொண்டேனே.
12
3060
ஆவி இருவகை ஆண் பெண்ணதாகி
மேவி இருவர் விருப்புறுமாறுபோல்
தேவியும் தேவனும் சேர்ந்தின்ப ரூபகம்
ஆவிக்கும் வேறே ஆனந்தமாமே.
13
3061
எட்டான உட்சமயம் மினவமா மாயை
எட்டாம் புறச்சமயத்துடன் யாவையும்
தொட்டான மாயை இருமாயை தோயாது
விட்டார் சிவமாவர் வேதாந்தப் போதரே.
14
3062
எந்தை பிரான் குணம் எண்ணிலி கோடிகள்
எந்தை பிரான் சத்தி எண்ணிலி யாகினும்
எந்தை பிரான்றனை யான் காண வந்துழி
எந்தை பிரானலா லியாதொன்றுங் காணேனே.
15
3063
கண்ணின் மணியாடு பாவைஎம் ஈசனை
உண்ணின் ருணறவல் லாரவர் கட்கு
விண்ணின்று தூறும் உலகமது கடந்து
எண்ணும் பரிசினோ டென்குணமாமே.
16
3064
குணக்குக் குடக்குத்தெற் குத்தரமேல் கீழ்பால்
இணக்கத் தகுஞ்சைவ மாகியா றென்பர்
தணக்கத் தகுஞ்சிவாத் துவிதஞ்சம் மேளங்
கணக்கொடுமுன் னாறுங் காணவெட் டாமே
17
3065
தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளித்திருந்தானே.
18
3066
பண்டங்கள் எண்பத்து நான்குநூ ராயிரம்
துண்டஞ்செய் யாரைத் தொடர்ந்துயி ராய்நிற்குங்
கண்டவை தன்னில் கலந்துண்ணேன் நானென்று
உண்டியு மாகி ஒருங்கி நின்றானே.
19
3067
பவமாம் பரிசு பலபல காட்டும்
தவமா நெறியில் தலைவருமான
நவநாத சித்தரு நந்தி அருளால்
சிவமாம் பரிசு திகழ்ந்து சென்றாரே.
20
3068
காணிப் பொன்கொண்டு கடைகடை தோறும்
வாணிபம் செய்து மயங்கித் திரிவேனை
ஆணிப் பொன்னான அறிவை அறிந்தபின்
மாணிக்கம் பெற்று மகிழ்ந்திருந்தேனே.
21
3069
வானுக்குள் ஈசனைத் தேடு மருளர்காள்
தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ
தேனுக்குள் இன்பம் சிறந்திருந் தாற்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.
22
3070
எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தன் நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாமே
23
3071
வாழை பழுத்துக் கிடக்குது வையகம்
வாழையைச் சூழத் தாழ்கோத்து நிற்குது
தாழைத் திறந்து கனியுண்ண மாட்டாதார்
தாழம் பழத்துக்குத் தன்னாண்ட வாறே.
24
3072
கள்ள வழியில் விழுந்த விளாங்கனி
கொள்ளச் சென் றைவரும் குழியில் விழுந்தனர்
தெள்ளிய ஞானி தெளிவுறக் கண்டபின்
பிள்ளைகள் ஐவரும் பிதற்று ஒழிந்தாரே
25
3073
உலை ஒக்கக் கொல்லன் ஊதும் துருத்திபோல்
கலை ஒக்கப் பாயும் கருத்தறிவார் இல்லை
கலை ஒக்கப் பாயும் கருத்தறிவாளர்க்கு
நிலை ஒக்கச் சீவன் நிறுத்தலும் ஆமே.
26
3074
ஒன்றே கலப்பை உழவெறு தஞ்சுண்டு
ஒன்றைவிட் டொன்று உழன்று திரியாது
ஒன்றை விட்டு ஒன்றை உழுதுண்ண வல்லாருக்
கன்றுநட் டன்றே அறுக்கலு மாமே.
27
3075
வேராணி யற்று விளைந்தவித் தின்மரம்
பாராணி எங்கும் பரந்தே இருக்குது
தேராணிக்குள்ளே தெளிவுற நோக்கினால்
ஓராணி யாக உகந்திருந் தானே.
28
3076
தஞ்சாவூர்த் தட்டான் தலத்துக்கு நாயகன்
மஞ்சாடி கொள்ளான் வழக்கன்றி மன்றேறான்
துஞ்சான் உறங்கான் தொழில் செய்யான் சோம்பான்
அஞ்சாறு நாளைக் கவதியிட்டானே.
29
3077
மத்தக மொத்த சிலந்தி வளையத்துள்
ஒத்தங் கிருந்து உயிருணும் வாறுபோல்
அத்தனும் ஐம்புலத் தாடகத் துள்ளிருந்து
சத்த முதலைந்தும் தானுண்ட வாறே.
30
3078
சொன்னம் குகைமூன்று தானஞ்சு பச்சிலை
மின்ன அரைத்துவை வெள்ளிபொன்னாயிடும்
வண்ணம் பதியிந்த வாசிகொண் டூதிடில்
சொன்னம் வாஞ்சித் தொன்றுமென் சிந்தையே.
31
3079
இருவர் இருந்திடம் எண்திசை அண்டம்
அரிபிர மாதிகள் ஆரும் அறிந்திலர்
பரிதியும் சோமனும் பாருமும் மிடத்தே
கருதி முடிந்திடம் சொல்லவொண் ணாதே.
32
3080
கோத்த கோவை குலையக் குருபரன்
சேர்த்த சேவடி சென்னியில் வைத்தொரு
வார்த்தை சொல்லி வழக்கறுத் தாண்டவன்
பார்த்த பார்வை பசுமரத்தாணியே.
33
3081
வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இரண்டுக்கும்
போதாந்த மான புரந்தரன் வாழ்வொன்று
நாதாந்தமான ஞானங்கை கூடாதேல்
சேதாந்தமான செனனம் ஒழியாதே.
34
3082
ஆதாரம் ஆறல்ல அப்பால் நடமல்ல
ஓதா ஒளியல்ல உன்மந் திரமல்ல
வேதா கமத்தில் விளங்கும் பொருளல்ல
சூதான நந்தி சொல்லுபதேசமே.
35
3083
உருகிப் புறப்பட் டுலகை வலம் வந்து
சொருகிக் கிடக்கும் துறை அறிவாரில்லை
சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு
ஊகிக் கிடக்குமென் உள்ளன்புதானே.
36
3084
எட்டினில் எட்டு மதிலொட் டிரட்டியும்
கட்டியை விட்டுக் கலந்துண்ண மாட்டாமல்
பட்டினி விட்டும் பலவிதம் தேடியும்
எட்டும் இரண்டும் அறியாத மாக்களே.
37
3085
கோயிலும் அஞ்சுள கோபுரம் மூன்றுள
கோயில் அடைக்கக் கதவோ ரிரண்டுள
கோயில் திறந்து கும்பிட வல்லார்க்குக்
கோயிலுக் குள்ளே குடியிருந் தானே.
38
3086
நாதன் இருக்கும் நடுமண்ட பத்துள்ளே
நாதாங்கி இல்லாமல் நாலஞ்சு வாசல்
ஆதார மேதென் றறியவல் லார்க்கு
வேதாவின் ஓலை வீணோலை யாமே.
39
3087
அனாதிசொரூபி யாகிய ஆன்மாத்
தனாதி மலத்தால் தடைப்பட்டு நின்றன
தனாதி மலமும் தடையற நீங்கிடில்
அநாதி சிவத்துடன் ஒன்றானவாறே.
40
3088
போக்கு வரவற்ற பூரண காரணன்
நோக்க வரிய நுண்ணியன் நுண்ணியன்
தேக்கு மலத்தன் சிவனுக் குரியவன்
பாக்கில் வியாபி பலவணுத் தானே.
41
3089
கரடிகள் ஐந்தும் கடும் கானம் வாழ்வன
திருடி இராப்பகல் தின்று திரிவன
கரடிகள் ஐந்தும் கடைத்தலைப் பட்டால்
குருடியர் குத்தினும் குண்டுர லாமே.
42
3090
உச்சிக்கு மேலே உணர்வுக்கும் கீழே
வைச்ச பொருளின் வகை அறிவார் இல்லை
வைச்ச பொருளின் வகை அறிவாளர்க்கு
எச்ச எருதும் இளவெருதாமே.
43
3091
வாசலின் கீழே படுகுழி மூன்றுள
ஊசி யிருக்கும் பழஞ்சோற்றிருங்குழி
ஊசி யிருக்கும் பழஞ்சோற்றை நாய் தின்ன
வாசல் இருந்தவர் வாய் திறவாரே.
44
3092
முத்துப் பவளம் பச்சை என்றிவை மூன்றும்
ஒத்துப் புணரும் உணர்வை அறியார்
ஒத்துப் புணரும் உணர்வை அறிந்தபின்
கொத்துப் படுகொக்குப் போல்குருவாமே.
45
3093
பண்ணாத பேரொளிக்கு அப்புறத்தப்புறம்
என்னா யகனார் இசைந்தங் கிருந்திடம்
உன்னா வெளிய துரைசெயா மந்திரம்
சொன்னான் கழல்முன் னறிந்தமர்ந் தோமே.
46
3094
ஆரை பழுத்துக் கிடக்குது வையகம்
ஆரையைச் சூழ நீர் கோத்து நிற்குது
ஆரை பறித்துக் கறியுண்ண மாட்டாமல்
கீரைக்கு நெல்லிட்டுக் கெடுகின்றவாறே.
47
***********
