ஸ்ரீஹரியின் தோற்றமும்... பூதேவியின் கலக்கமும்...
ஸ்ரீஹரியின் தோற்றமும்... பூதேவியின் கலக்கமும்...மைத்ரேய முனிவரே... துருவனின் சித்தத்தில் மிகுந்த பிரகாசத்தோடு தோன்றியிருக்கக்கூடிய ஸ்ரீஹரியை, சகலத்தையும் தருகின்ற பூ தேவியானவள் அந்தப் பரம யோகியை தரிக்காமல் இருந்தாள். பூதேவி தரிக்காமல் இருந்ததினால் பலவிதமான இன்னல்களையும் அடையத் துவங்கினாள்.பூதேவியின் மடியான பூமியில் துருவன் தனது இடது காலை ஊன்றி, வலது காலை மடித்து தவத்தினை மேற்கொண்டிருந்த பொழுது பூமியின் இடது பக்கமானது தாழ்ந்தும், துருவன் வலது காலை ஊன்றி, இடது காலை மடித்து தவத்தை மேற்கொண்டிருந்த பொழுது பூமியின் வலது பக்கமானது தாழ்ந்தும் இருந்தது.பிறகு துருவ யோகியானவன் ஒரே பாதத்தில் கட்டைவிரலால் மட்டும் பூமியில் நின்ற பொழுது நீண்ட நெடும் மலைகளுடன் கூடிய பூமி நடுங்க துவங்கியது. மகா நதிகளும், சப்த சாகரங்களும் கலக்கமடைய துவங்கின. துருவன் மேற்கொண்டிருந்த அந்த தியானத்தின் விளைவாக மக்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் பலவிதமான இன்னல்கள் ஏற்படப் போவதை கண்ட அந்த மநுவந்தரத்தில் இருந்த யாமர் என்னும் தேவதைகள் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தனர். பின்பு தேவதைகள் அனைவரும் ஒன்றிணைந்து இங்கு நிகழும் இந்த நிகழ்வின் மூலம் பின் நிகழும் மாற்றங்கள் மிகவும் பயங்கரமாகவும், கொடூரமாகவும் இருப்பதை எண்ணி தேவர்களின் தலைவனாக இருக்கக்கூடிய தேவேந்திரனான இந்திரனிடம், இவ்விடத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பதை எடுத்துரைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.இந்திரலோகத்தில் இருக்கக்கூடிய தேவேந்திரனை சென்றடைந்த தேவதைகள், இந்திரனை வணங்கிய வண்ணமாக பூமியில் மநுவந்திரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய துருவனின் தியானத்தின் மூலம் ஏற்பட இருக்கும் விளைவுகளை எடுத்துரைத்தனர்.தியானத்திற்கு இடையூறு செய்தல் :</font> தேவதைகள் கூறிய அனைத்து விஷயங்களையும் அறிந்துகொண்ட இந்திரனும் நீங்கள் கூறிய யாவும் நிகழாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று வினவினார்.இந்திரனை வணங்கிய தேவதைகள் துருவனின் தியானத்தை எவ்விதத்திலாவது விக்கினஞ் செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள்.இந்திரனும், தேவதைகள் கூறிய விதத்தில் சிறு பாலகனான துருவனின் தியானத்தை எவ்விதத்திலாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்று தனது கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பூதகணங்களுக்கு ஆணையிட்டார். இந்திரனின் கட்டளையை ஏற்றுக்கொண்ட கூசு மாண்டங்கள் என்னும் பயங்கரமான பூதகணங்கள் அந்த மகாயோகியான துருவன் தவம் செய்து கொண்டிருக்கக்கூடிய இடத்தினை வந்து அடைந்தார்கள்.அகோர தோற்றம் கொண்ட, காண்பதற்கு மனதில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இருக்கக்கூடிய கூசு மாண்டங்கள் என்னும் பூதகணமானது துருவனின் தவத்தைக் கலைப்பதற்கான மாய வேலைகளை செய்ய துவங்கின.தவத்தினை செய்து கொண்டிருக்கக் கூடிய பாலகனின் தோற்றத்தைக் கண்டதும் பூதத்தின் மனதில் ஒரு எண்ணம் உதயமானது. அந்த எண்ணத்தின் விளைவாக பூதகணமானது தன்னுடைய அகோர தோற்றத்தினை கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து பாலகனின் தாயான சுநீதியின் தோற்றத்திற்கு தன்னுடைய உடலினை மாற்றியது.அந்த அடர்ந்த வனத்தின் நடுவில் தன்னுடைய மகனை தேடி தாய் வந்திருப்பது போல பூதகணமானது தன்னுடைய வேலைகளை மேற்கொள்ள துவங்குகின்றது.துருவனின் அருகில் செல்லுதல் :</font>துருவனின் தாய் தோற்றத்தோடு அருகில் சென்ற பூதகணமானது நீண்ட நெடும் தொலைவிலிருந்து வந்திருப்பது போலவும், உடல் களைப்பில் இருப்பது போலவும் மாய வேலைகளை செய்து தன்னுடைய மகனான துருவனின் அருகில் சென்றது.அருகில் சென்ற சுநீதியானவள், அதாவது பூதகணமானது துருவனின் தவத்தை கலைக்கும் நோக்கத்தோடு தனது அடுத்த அம்பினை தொடுக்கத் துவங்கியது. விழிகளில் நீர் ததும்ப, வார்த்தைகளில் ஒருவிதமான கவலைகளுடன் இருக்கும் விதத்தில் தன்னுடைய மகனான துருவனின் அருகில் வந்த சுநீதி, அதாவது பூதகணமானது மகனே உன்னுடைய சரீரத்திற்கு மிகுந்த ஆபத்தையும், அபாயத்தையும் அடையக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய இந்த கொடிய தவத்தினை விடுவாயாக என்று கூறினாள்.தவ நிலையில் இருந்து கொண்டிருந்த துருவனுக்கு இங்கு நிகழ்ந்து கொண்டு இருப்பது எதுவும் அறியாமல் தன்னுடைய மனம் மற்றும் ஐம்புலன்கள் யாவற்றையும் பிரபஞ்ச நாயகனான ஜெகநாதனிடம் முழுமையாக ஒப்படைத்து சரணாகதி நிலையில் அமர்ந்து இருக்கின்றான்.பொறுமை முழுவதுமாக இழந்த சுநீதியின் தோற்றத்தில் இருந்த பூதகணமானது நான் உரைத்துக் கொண்டு இருக்கின்றேன். ஆனால் நீயோ நான் கூறும் எதையும் கேட்காமல் அமைதியுடன் இருந்து கொண்டே இருக்கின்றாயா... இதற்காகவா நான் நீண்ட நெடுங்காலம் தவம் இருந்து உன்னை ஈன்று எடுத்தேன்?மாற்றான் தாயின் கோபத்தில் உரைத்த பேச்சுக்களுக்காக என்னை இப்படி வருந்த வைப்பது நியாயமா? யாருமில்லாமல் கதியற்ற நிலையில் இருக்கும் எனக்கு நீ மட்டுமே கதி அல்லவா? யாருக்கும் திரும்பக் கிடைக்காத இந்த பருவத்தில் சக தோழர்களுடன் இணைந்து விளையாட வேண்டியதை விடுத்து கடும் தவத்தை மேற்கொள்வதன் மூலமாக உமக்கு எந்தவிதமான பயனும் ஏற்பட போவதில்லை. எந்தவிதமான பயனும் அளிக்காமல் உன்னுடைய உடலிற்கும், தோற்றத்திற்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த முயற்சியில் இருந்து விடுபடுவாயாக.இன்னும் சிறிது காலம் மட்டுமே உன்னால் விளையாட முடியும் மகனே. பின்பு நீ வேதங்களைப் பயில வேண்டிய காலமும் வந்துவிடும். வேதங்கள் பயின்ற பின்பு யோகங்களை அனுபவிக்கக்கூடிய காலமும் ஏற்படும். அதன் பிறகு உமக்கு தவம் செய்வதற்கு அவசியம் ஏதும் இருக்காது.விளையாடும் பருவத்தில் விளையாட்டை விட்டுவிட்டு தவம் மேற்கொள்வது அவ்வளவு நல்லதல்ல. நான் உன்னுடைய நலனுக்காக இவ்வளவு உரைத்துக் கொண்டு இருக்கின்றேன். ஆனால் நீயோ எதையும் பேசாமல் அமைதியாக அமர்ந்து கொண்டு இருக்கிறாயா?உனது தாயான எனது வார்த்தைகளைக் கேட்டு உடனே இந்த தவத்தினை நிறுத்திவிட்டு என்னுடன் புறப்பட்டு வருவாயாக. என்னுடன் வர மறுத்தால் அல்லது மென்மேலும் உமது தவத்தினை மேற்கொண்டே இருந்தால் உமக்கு எதிரில் யான் எனது பிராணனை விட்டு விடுவேன் என்று விழிகளில் நீர் வழிய கதறி அழுது கொண்டு சுநீதியின் தோற்றத்தில் இருந்த பூதகணமானது உரைத்தது. ஸ்ரீமந் நாராயணனின் திவ்ய திருவடிகளில் தனது மனதை முழுவதும் நிலை நிறுத்தி இருந்த துருவன் மாயையான சுநீதி உரைத்துக்கொண்டிருந்த யாவற்றையும் கேட்காமல் தனது முழு சிந்தனைகளையும் ஸ்ரீமந் நாராயணன் இடமே ஒப்படைத்திருந்தார்.துருவனின் செயல்பாடுகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த பூதகணமானது சிறிதும் காலம் தாமதிக்காமல் அடுத்த ஆயுதத்தினை பிரயோகப்படுத்தியது. <font color=blue>அரக்கர்கள் வருகை :</font>சுநீதியானவள் துருவனை நோக்கி மகனே உன்னை கொல்வதற்காக அகோரத் தோற்றம் கொண்ட அரக்கர்கள் அவரவர்களின் கரங்களில் கதை மற்றும் கூர்மையான வாள்கள் முதலான ஆயுதங்களோடு இங்கே வந்து கொண்டு இருக்கின்றார்கள். உடனே உம்முடைய தவத்தினை விடுத்து எம்முடன் விரைந்து வருவாயாக என்று உரைத்து விட்டு அந்த இடத்தினை விடுத்து மறைந்து சென்றது பூதம்.பலவிதமான ஆயுதங்களுடன் அக்னி ஜுவாலைகளை வெளிவிடும் முகங்களை கொண்ட அரக்கர்கள் சிறு பாலகனான துருவன் தவம் புரிந்து கொண்டு இருக்கக்கூடிய இடத்தில் தோன்றினார்கள். அவர்கள் அனைவரும் கரங்களில் போர்க் கருவிகளை ஏந்திய வண்ணமாக வந்து கர்ஜனை செய்து கொண்டிருந்தார்கள்.ஆனால் எலும்பு முகங்களுடன் கூடிய நரி தோற்றம் கொண்ட அசுரர்கள் அனைவரும் துருவனை சுற்றிக்கொண்டு மனதில் பயத்தை ஏற்படுத்தும் வண்ணமாகவும், செயல்பாடுகளில் பதற்றத்தை உருவாக்கும் விதத்திலும் ஊளையிட்டன. அதுமட்டுமல்லாது சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களை கொண்ட நிசாசரர்கள் இந்த பாலகனை கொன்று குத்துங்கள்... இவனை கொடூரமாக கொலை செய்யுங்கள்... அல்லது சென்றுவிடுங்கள் என்று பலவிதமான குரல்களில் கூச்சலிட்டு பயம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். அரக்கர்கள் அனைவரும் பலவிதங்களில் பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் கூச்சலையும், சூழல்களையும் உருவாக்கினாலும் தன்னுடைய மனதினை கோவிந்தனின் திருவடிகளில் முழுவதுமாக லயித்து இருந்ததினால் பூதகணங்கள் ஏற்படுத்திய சத்தங்களும், கூச்சல்களும் துருவனுக்கு எள்ளளவும் பயத்தினை உருவாக்காமல் இருந்தன.புறவுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய யாவற்றையும் சிறு பாலகன் எந்தவிதமான அக்கறையும், கவனமும் இல்லாமல் தன்னுடைய சித்தம் முழுவதும் ஸ்ரீமந் நாராயணனே தன்னுள் எழுந்து இருப்பதாக மனதை ஒரு நிலைப்படுத்தி முழுவதுமாக தியானித்துக் கொண்டு மற்ற எதையும் அறியாமல் இருந்து வந்தான்.இவ்விதமாக தேவர்கள் அனைவரும் பயன்படுத்திய அனைத்து மாயங்களும் எதிர்பார்த்த பலன் அளிக்காமல் ஏமாற்றத்தை மட்டும் அளித்தன. இந்த ஏமாற்றமானது தேவர்களின் அழிவின் ஆரம்பமாக இருக்கும் என்னும் அளவிற்கு இருந்து வந்தது.இங்கு நிகழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் கண்டுகொண்டு இருந்த தேவதைகளுக்கு இனியும் நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் இந்த மகாத்மாவின் தவ வலிமையினால் தங்களுக்கு ஆபத்து நேரிடுமோ என்ற அச்சமும், எண்ணமும் அதிகரிக்க துவங்கியது.இவர் மேற்கொண்டு இருக்கக்கூடிய இந்த தவத்தினை ஏதேனும் ஒரு வழியில் தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் உள்ளத்தில் தெளிவாகவும், பசுமரத்தாணியில் எழுதியது போன்று பதிய துவங்கியது.இந்த எண்ணத்தின் காரணமாக அனைத்து தேவதைகளும் ஒன்றிணைந்து இதற்கு சரியான தீர்வினை அளிக்கக்கூடியவர் யார் என்றால் இந்த ஜகத்தின் நாயகனான ஸ்ரீமந் நாராயணனே என்பதை முடிவு செய்து, அவரை சரணடைந்தால் தான் ஏற்படப்போகும் பிரளயத்தினை தவிர்க்க இயலும் என்று எண்ணினார்கள் தேவதைகள்.ஸ்ரீமந் நாராயணன் பள்ளி கொண்டிருக்கக்கூடிய திருப்பாற்கடலை அடைந்த தேவதைகள், தேவாதி தேவனே ஏற்படப்போகும் பிரளய ஆபத்திலிருந்து எங்களை காப்பாற்றவீர்களாக என்று உரைத்த வண்ணமாக, துருவனின் தவ வலிமையினால் நாங்கள் பலவிதமான இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.அந்த இன்னல்களிலிருந்து எங்களை காத்து ரட்சிப்பாயாக என்றும், சந்திரன் எவ்விதம் தினந்தோறும் தன்னுடைய கலைகளை அபிவிருத்தி செய்து வளர்ச்சி அடைவது போல, உத்தானபாதனின் மகனான துருவன் தன்னுடைய மன ஒற்றுமையினாலும், தவ வலிமையினாலும் நொடிக்கு நொடி வளர்ந்துகொண்டே வருகின்றான். அந்த சிறுவனின் அபார வளர்ச்சி என்பது எங்களுக்கு மிகுந்த அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்துகின்றது.அந்த பாலகன் தன்னுடைய தவ வலிமையினால் இந்திர, வருண, குபேர, சூரிய, சந்திரர்களுடைய பதவிகளை அல்லது வேறு எந்த பதவியை கேட்பான் என்று எங்களுக்கு எந்தவிதமான புரிதலும் ஏற்படவில்லை. ஆகையினால் அவன் மேற்கொண்டு இருக்கக்கூடிய இந்த தவத்தினை ஏதேனும் ஒருவிதத்தில் தாங்கள் தடுத்து நிறுத்தி எங்களிடத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய கவலைகளையும், பயத்தையும் போக்கிட வேண்டும் என்று வேண்டினார்கள்.சர்வ லோகங்களையும் படைத்தவரும், அனைத்து உயிரினங்களிலும் கலந்து இருக்கக்கூடியவரும், சிறு விஷயங்களில் கூட முழு கவனத்தையும் கொண்டிருக்கக்கூடியவருமான லோக நாயகனான ஸ்ரீமந் நாராயணன், தேவர்களே... தேவதைகளே! உங்களிடத்தில் இருக்கக்கூடிய அச்சம் என்பது அவசியமற்றது என்றும், சிறு பாலகனான துருவன் தன்னுடைய வலிமைக்கு மீறி எவராலும் செய்ய இயலாத, செய்ய முடியாத அளவில் மிகவும் வலிமையுடன், தன்னுடைய தவத்தில் முழு கவனத்துடன் இருந்து கொண்டிருக்கின்றான். அவன் மேற்கொண்டு இருக்கக்கூடிய அந்த தவத்தினை கலைப்பது என்பது முடியாத ஒன்றாகும்.நீங்கள் எண்ணியது போல பாலகனான துருவன் சூரியன், சந்திரன், இந்திரன், வருணன் முதலியோரின் அதிகாரங்கள் மற்றும் பதவிகள் முதலியவற்றை அவன் கேட்கப்போவதில்லை. அவனுடைய மனதில் இருப்பதை நான் நன்கு அறிவேன்.ஆகையினால் சிறு பாலகனான துருவனை பற்றிய உங்களது பயம் என்பது எந்தவிதமான பயனும் இல்லாதது. நீங்கள் கொண்டிருக்கக்கூடிய பயத்தினை விடுத்து அவரவர்களுக்கு உரிய பணிகளை ஆற்றுவீர்களாக என்று கூறினார்.சகலமும் அறிந்தவரான சகல லோகத்தினை காத்து ரட்சித்து கொண்டிருக்கக்கூடியவரான ஸ்ரீமஹாவிஷ்ணு இவ்விதம் எடுத்துரைத்த பின்பு தேவர்கள் மற்றும் தேவதைகளிடத்தில் இருந்துவந்த அச்சம் குறையத் துவங்கியது.ஜெகநாதனை காண வந்தபோது இருந்த மன வருத்தமும், கவலைகளும் நீங்கி மகிழ்ச்சியுடன் திருமாலிடம் விடைபெற்று தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றார்கள்.சிறு பாலகனான துருவன் விளையாடும் பருவத்தில் தன்னிடத்தில் மிகுந்த பக்தியுடன் மனதை ஒரு நிலைப்படுத்தி தியான நிலையில் அமர்ந்திருந்து, அவனுடைய தவ வலிமையினால் சகல லோக தேவாதி தேவர்களையும், தேவதைகளையும் அச்சமடைய வைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றான் என்பதை தேவர்கள் உரைத்ததிலிருந்து சகலமும் அறிந்த சகல லோக நாயகனான ஸ்ரீமந் நாராயணன் அறிந்துகொண்டார்.இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் என்ற எண்ணமும் தோன்றியது. இனி துருவனின் புகழ் இந்த உலகம் அறிந்து கொள்ளும் விதத்தில் அவனது வளர்ச்சி இருக்க போவதையும் ஸ்ரீமந் நாராயணன் அறிந்திருந்தார்.
