ஸ்ரீமந் நாராயணன் துருவன் முன்பு காட்சி அளித்தல்

bookmark

ஸ்ரீமந் நாராயணன் துருவன் முன்பு காட்சி அளித்தல் சிறு பாலகனான துருவனின் மனதில் ஸ்ரீமந் நாராயணன் எவ்விதத்தில் லயித்திருந்தாரோ அதே விதத்தில் எம்பெருமான் துருவனுடைய ஒன்றித்த தியானத்திற்கு மனமகிழ்ந்து திருவுள்ளம் உவர்ந்து நான்கு திருத்தோள்கள் உடைய திருமேனியோடு துருவன் முன்பு காட்சி அளித்தார்.உத்தானபாதனின் மகனே! உமக்கு மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகக் கடவது. உன்னுடைய தவத்தினை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். உமக்கு விருப்பமான வரத்தினை அருளுவதற்காகவே யான் இங்கு வந்திருக்கின்றோம். நீ உன்னுடைய சித்தத்தை எல்லாம் என் மீது நிலையாக நிறுத்தியதனால் யான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். உனக்கு விருப்பமான வரத்தைக் கேட்பாயாக என்று ஸ்ரீமந் நாராயணன் கூறினார்.நாராயணன் கூறியதைக் கேட்டதும் துருவன் தன்னுடைய விழிகளைத் திறந்து தனக்கு எதிரே நின்று கொண்டிருக்கக்கூடிய நாராயணனின் திருவுருவத்தை கண்டான். தன் தியானத்தில் எவ்விதத்தில் மகாவிஷ்ணு எழுந்தருளி இருந்தாரோ அதே தோற்றத்தில் சங்கு, சக்கரம், கதை, கட்கம், சாரங்கம் முதலிய பஞ்ச ஆயுதங்களுடன் கிரீட, வனமாலிகா, கௌஸ்துப பீதாம்பர அலங்காரத்துடன் எழுந்தருளி இருந்தார். துருவனின் வேண்டுதல் :விஷ்ணுவின் தோற்றத்தை கண்டதும் பூமியில் விழுந்து வணங்கியது மட்டுமின்றி மனதில் மிகுந்த பயபக்தியுடன் தேவர்களுக்கெல்லாம் தேவராகவும், இந்த பிரபஞ்ச உருவாக்கத்தில் முதன்மை வகிக்கக்கூடியவராகவும் இருக்கக்கூடிய, யாருக்கும் அவ்வளவு எளிதில் காணக் கிடைக்காத இந்த அரிய காட்சியை தனக்கு காண்பித்த ஸ்ரீமஹாவிஷ்ணுவை பலவிதங்களில் துதி செய்தான்.பிரபஞ்ச நாயகனாகவும் காப்பதில் வல்லவராகவும் இருக்கக்கூடிய இந்த மகா புருஷனை எந்த நாமத்தில் தங்களை சொல்வேன்? யார் உரைத்தது போல நானும் உங்களை துதிப்பேன்? என்று துருவன் மனம் கலங்கியதோடு மட்டுமல்லாமல் மனதில் எந்தவிதமான சிந்தனை ஓட்டங்களும் இன்றி விஷ்ணு பகவானை முழுவதுமாகம் சரணடைந்து, ஷட்குண ஐஸ்வரியங்கள் யாவும் நிறைந்திருக்க கூடியவரே! அடியேனது தவத்திற்கு திருவுள்ளம் கொண்டு உம்மை என்றுமே ஸ்தோத்திரம் செய்ய எண்ணுகின்ற எமக்கு அதற்கேற்ற ஞானத்தையும் வழங்கி அருள வேண்டும். வேதமறிந்த வேதிகளும், பிரமாதிகளும் உனது மகிமையை எடுத்துரைக்க வல்லவர்களாக இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இடத்தில் எம்மைப்போன்ற பாலகன் எப்படி உங்களை துதிப்பேன்? அடியேனுடைய மனமானது எப்பொழுதும் உங்களுடைய சரண கமலங்களில் பதிந்திருக்க வேண்டும்.மனமானது கமலங்களில் பதிந்தது மட்டுமின்றி உம்மை மட்டுமே என்றுமே துதிக்க விரும்புகின்றது. ஆகையினால் அடியேனுக்கு அதற்கேற்ற ஞானத்தை தாங்கள் தந்தருள வேண்டும் என்று வேண்டினான் துருவன் பாலகன்.துருவன் ஸ்ரீமந் நாராயணனை வணங்குதல் :பாலகனின் விருப்பத்தையும், அவன் செய்த தவத்தின் பலனாகவும் ஸ்ரீ கோவிந்தன் சகல வித்யாமயமான தமது பாஞ்சசன்யத்தினாலேயே அச்சிறு பாலகனின் முகத்தில் ஸ்பரிசித்து அருளினார்.ஸ்ரீ கோவிந்தன் அருளிய வரத்தினால் துருவனுக்கு ஞான உதயம் ஆனதால் அவன் மிகுந்த பிரசன்ன முகத்துடன் தெண்டனிட்டு (சேவித்து) பிரிதிவி, அப்பு, தேஜசு, வாயு, ஆகாயம், தன்மாத்திரைகளும், மனசும் மற்றுமுள்ள இந்திரியங்களும், மகத்தகங்காரங்களும் மூலப் பிரகிருதியும் எவனுடைய ரூபங்களாக இருக்கின்றதோ அந்த சர்வேஸ்வரனான விஷ்ணு பகவானுக்கு தெண்டனிடுகிறேன்.பிரமம் என்ற நாமதேயம் உடையதாய் விகாரங்கள் எதுவும் இல்லாதாய் யோகி சிந்தியமாய் விளங்கும் உங்களுடைய திவ்ய சொரூபத்துக்கு வணக்கம்...!!ஆயிரம் பாதங்களை உடையவராகவும், ஆயிரம் விழிகளை உடையவராகவும், புருஷராகவும், சர்வத்தையும் உருவாக்கி பூமி என வழங்கும் சராசர மயமான பிரபஞ்சத்தை விட பல மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளவரே புருஷோத்தமனே!உன்னிடத்திலே பிரபஞ்சங்கள் எல்லாம் தோன்றியிருக்கின்றன. இவ்விதம் உங்களால் படைக்கப்பட்டு உங்களுடைய ரூபமாக இருக்கக்கூடிய இரணிய கர்ப்பனுதரத்திலே அகில பிரபஞ்சமும் அடங்கியிருப்பதனால் எல்லாமே உமக்குள்ளே என்று தனியாக வேறு சொல்ல வேண்டுமோ? யாவும் ஒருங்கே ஒடுங்க அமையப்பெற்றவரே யாகமும், பிரஷதாச்சியம் என்ற அவிசும் கிராமியங்கள் ஆரணியங்கள் என்ற இருவிதமான பசுக்களும், ரிக், யஜுர், சாம வேதங்களும், சந்தங்களும், அசுவங்களும், அஜாதிகங்களும், ஒற்றை பல்வரிசை உள்ள ஐந்து சாதங்களும், மிருகங்களும் உன்னிடத்திலேயே தோன்றியிருக்கின்றன.விழிகளில் சூரியனும், அகத்திலே சந்திரனும், பிராணத்திலே வாயுவும், முகத்திலே அக்னியும், நாபியில் அந்தரிட்சமும், சரீரத்தில் சொர்க்கமும், கர்ணங்களிலே திசைகளும், பாதங்களிலே பூமியும் தோன்றியிருக்கின்றன.அதிக விஸ்தாரம் உள்ள பரந்து விரிந்து வளரக்கூடிய ஆலமரம் ஆனது மிகவும் நுண்ணிய பீஜத்திலே (விதையிலேயே) அடங்கியிருப்பது போல மகத்தான எவராலும் சொல்ல இயலாத வர்ணிக்க இயலாத இந்த பிரபஞ்சம் எல்லாம் பிரளய காலத்திலே ஆதி காரண பூதனான உம்மிடத்திலேயே அடங்கியிருக்கின்றன.மகிழ்ச்சியையும் துக்கத்தையும் உண்டாக்குவதும் நீயே, குணங்களுக்கு அப்பாற்பட்டவனாய் இருக்கக்கூடியவனும் நீயே... உன்னிடத்திலேயே சகலமும் சர்வமும் அடங்கி இருக்கின்றன. ஆகையால் சர்வ ஆத்மாவான உமக்கு தெண்டனிடுகிறேன். இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கக்கூடியவரும் நீரே... அந்தக் காரணங்களில் மறைந்து, அனைத்திலும் வியாபித்து இருக்கின்றவரும் நீரே... அதுமட்டும் அல்லாது நீரே என்னுடைய மனோரதத்தை அறிந்திருப்பீர்கள். ஆகையால் அடியேன் விண்ணப்பம் செய்ய வேண்டியது என்ன? சுவாமி உங்களை தரிசனம் செய்வது தெண்டன் (வணக்கம்) சமர்ப்பிப்பதில் அடியோனுடைய மனோரதமானது நிறைவேறும் என்று நான் மேற்கொண்ட தவமும் பலித்தன. நான் தூய்மை அடைந்தேன், தன்னியன் ஆனேன் என்று பலவாறாக துதிசெய்து ஸ்ரீ மகாவிஷ்ணுவை கண்டு கொண்டிருந்தான் பாலகனான துருவன்.பாலகனை கண்ட மகாவிஷ்ணு புன்னகை பூத்த முகத்துடன் குமாரனே என்னை கண்டு வணங்கியதால் உன்னுடைய தவமானது பலித்தது சரிதான். ஆயினும் நீ செய்த செயலுக்கான பலனை அளிக்க வேண்டும் அல்லவா... ஆகையால் உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்பாயாக! நான் பிரதட்சிணமானேன். ஏனென்றால் எவருக்குமே சகல மனோரதங்களும் கைகூடும் என்பதாகும் என்றார்.தேவாதிதேவனே, தேவர்களின் அதிபதியே சர்வ பூதங்களிலும், சகல உயிர்களிலும் வியாபித்து இருக்கக்கூடிய உமக்கு அடியேனுடைய விருப்பம் என்னவென்று தெரிந்திருக்குமே. இருப்பினும் நீரே கேட்பதினால் என்னுடைய விருப்பத்தை நானே உரைக்கின்றேன்.இந்திரன் உமது அனுகிரகத்தினால் அல்லவா திரிலோக சாம்ராஜ்யத்தை அனுபவிக்கின்றான். ஜனார்த்தனா என்னுடைய சிற்றன்னையான சுருசியானவள் தனது கர்ப்பத்தில் நான் பிறவாததால் ராஜருக்கு தகுதியான சிங்காசனத்துக்கு அருகனல்ல என்று என்னை பார்த்து இறுமாப்புடன் ஏளனம் செய்தாள். ஆகையால் ஜகத்துக்கு ஆதாரமும், சர்வ உத்தமமும் நிரம்பி இருக்கக்கூடிய உன்னத ஸ்தானத்தை அடையவே நான் விரும்புகின்றேன். இதற்கு தேவரீர் திருவருள் புரியவேண்டும் என்றான் சிறு பாலகனான துருவன்.பகவான் ஸ்ரீ விஷ்ணு துருவனின் விருப்பத்திற்கேற்ப பாலகனே நீ விரும்பிய பதவியை அடைய கடவாய் என்று கூறினார். பின்பு நீ மேற்கொண்டிருக்கும் இந்தத் தவத்திற்காக மட்டும் நீ அப்பதவியை அடைவதில்லை. அப்பதவி அடைவதற்கு வேறொரு காரணமும் இருக்கின்றது. அக்காரணத்தையும் உரைக்கின்றேன் கேட்பாயாக!பூர்வ ஜென்மத்தில் நீ வேதமறிந்தவர்களில் ஒருவனாக பிறந்தாய். வேதங்களை நன்முறையில் கற்றது மட்டுமல்லாமல் தாய், தந்தையர்களுக்கு தேவையான பணிவிடைகளையும் செய்து உன்னுடைய சித்தத்தை ஒருநிலைப்படுத்தி, என்னையும் ஆராதனை செய்து வந்து கொண்டிருந்தாய். காலங்கள் செல்ல செல்ல நீயோ யௌவன பருவத்தை (இளமை பருவம்) அடைந்தாய்.அப்பொழுது தேக பலமும், சகல போகங்களும் அனுபவித்து இருக்கக்கூடிய ஒரு ராஜகுமாரன் உன்னிடத்தில் நண்பனாக இருந்தான். அப்பொழுது நீ அவனுடைய ஐஸ்வரிய போகங்களையும், இன்பங்களையும் கண்டு அதன் மீது இச்சை கொண்டு அடுத்த பிறவியிலாவது நான் ராஜ வம்சத்தில் புத்திரனாகப் பிறக்க வேண்டும் என்று விரும்பினாய். ஆகையினால் உன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப உத்தானபாதனது வம்சத்தில் பிறந்து இருக்கின்றாய்.என்னை துதிக்காத மற்றவர்களுக்கு சுவாயம்புவ மனுவின் வம்சத்தில் பிறவி ஏற்படுவது என்பது கிடைக்காத ஒன்றாகும். என்னிடத்தில் சித்தத்தை நிலை நிறுத்தி என்னையே தியானித்த மனிதன் அதிவிரைவில் மோட்சத்தை அடைவான். ஆனால் அவன் அற்பமான சொர்க்காதி பலன்களை அடைவதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை.ஆனால் நீயோ என்னுடைய அனுக்கிரகத்தினால் மூன்று உலகங்களுக்கும் மேன்மையானதாகவும், நட்சத்திரங்களுக்கும் ஆதார பூதமாய் சூரிய, சந்திர, அங்காரகன், புதன், பிரகஸ்பதி ஸ்தானங்களுக்கும், நட்சத்திரம் மண்டலங்களுக்கும், சப்தரிஷிகளின் மண்டலத்திற்கும், விமானாரூடராய் சித்தர்கள் சஞ்சரிக்கின்ற ஸ்தானங்களுக்கும் அதி உன்னதமாக திகழும் ஸ்தானத்தை அடைந்து சுகமாக இருப்பாயாக!தேவதைகளில் சிலர் நான்கு யுகங்கள் வரையிலும் சில மநுவந்தரப் பரியந்தமுமல்லாமல் அதிக காலம் இருக்கமாட்டார்கள். ஆனால் நீயோ என்னுடைய அருள் பார்வையினால் கல்ப காலம் வரை அந்த சர்வ உணர ஸ்தானத்தில் சுகமாய் இருப்பாய்.உன்னை ஈன்றெடுத்த தாயான சுநீதி திவ்ய விமானத்தில் ஏறி நட்சத்திர ரூபமாக எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டு கல்பாந்த பரியந்தமும் உன் அருகிலேயே இருப்பாள்.வானத்தில் துருவ நட்சத்திரமாக திகழும் உன்னை யாராக இருந்தாலும் அதிகாலையிலும், மாலையிலும் மன உறுதியுடன் வழிபாடு செய்பவன் மகா புண்ணியத்தை பெறுவான் என்றும் லோகநாதன் திருவாய் மலர்ந்தருளினார்.இவ்விதமாக திருமாலிடம் வரம் பெற்ற துருவன் சர்வலோக ஸ்தானத்தை அடைந்தான்.மைத்ரேய முனிவரே துருவன் பதவியை பெற்றதைக் கண்டு எந்த மனிதன் அவனை மனதோடு கீர்த்தனம் செய்வானோ அவனது சகல பாவங்களும் நிவர்த்தியாகும். அவன் சொர்க்க லோகத்தில் வாசம் செய்வான். அன்றியும் அவன் வானத்திலும், பூமியிலும் சகல சௌபாக்கியம் கொண்டவனாய் தீர்க்காயுளுடன் வாழ்வான் என்று கூறினார் பராசர முனிவர்.