ஷாரஜாத்திடம் அவளது தந்தை சொன்ன கதை

bookmark


ஒரு ஊரில் பணக்கார வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் அந்நாட்டு அரசனுக்கு நிகரான செல்வத்தைப் படைத்தவன். அவனிடம் பல வேலையாட்கள் பணி புரிந்து வந்தனர். அத்துடன் அவன் பல்வேறு கால் நடைகளை வளர்த்து வந்தான். மேலும் அவன் அதீத இறை அருளைப் பெற்று இருந்தான். அதனால் அனைத்து ஜீவ ராசிகளும் தங்களுக்குள் பேசிக் கொள்வதை உணர்ந்து இருந்தான்.

அப்போது ஒரு நாள் தொழுவத்திற்கு அந்த வியாபாரி வந்த சமயத்தில் தனித்தனியே ஒரு எருதும், கழுதையும் கட்டப்பட்டு இருந்தது. அவை இரண்டும் பேசிக் கொண்டு இருப்பதைக் கேட்டான். அதன் படி முதலில் எருது தனது கஷ்டத்தைக் கழுதையிடம் கூறத் தொடங்கியது.

"கழுதையே! உண்மையில் நீ கொடுத்து வைத்தவன். காரணம் பெரும்பாலும் நீ தொழுவத்தில் தான் கட்டப்பட்டு இருக்கிறாய். உன்னை அன்புடன் கவனித்துக் கொள்ள நமது முதலாளியின் ஆட்கள் எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் எனது நிலையைப் பார். படாத பாடு பட்டு வருகிறேன். ஏரில் கட்டி என்னை உழ வைக்கிறார்கள். அத்துடன் வலுவான நுகத்தைச் சுமந்து சுமந்து என் கழுத்து கூடப் புண்ணாகி விட்டது. இவ்வளவு கஷ்டப்பட்டும் கூட எனக்கு என்ன பயன்? காய்ந்து போன வைக்கோலைத் தானே உணவாகக் கொடுக்கிறார்கள். என்னால் இந்தக் கொடுமையை தாங்கிக் கொள்ள முடியவில்லை" என்று கண்களில் கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்தது.

உடனே எருதின் வார்த்தையைக் கேட்ட அந்தக் கழுதை, எருதிடம் "எருதே! நீ கவலை கொள்ளாதே! நான் கூறுகிற படி நீ செய். நாளைய தினம் உன்னை வயல் உழுவதற்குக் கொண்டு போவார்கள் அல்லவா, அப்போது வேண்டும் என்றே முடியாது என்று படுத்து விடு. அப்படியாக நீ படுத்துக் கொண்டால் உன்னை யாரும் ஏரில் கட்டி உழ மாட்டார்கள். அப்படி ஒரு வேலை சில வேலையாட்கள் உன்னை அடித்தாலும் நீ எழுந்து விடாதே. வயலில் இருந்து உன்னை மீண்டும் தொழுவத்திற்கு அழைத்துச் சென்று கட்டிப் போட்டு தீனி கொடுத்தாலும் நீ அதனை சாப்பிடாதே. மாறாக முகர்ந்து பார்த்து விட்டு அமைதியாக ஒதுங்கி விடு. பிறகு தண்ணீரை குடிக்க வைக்க முயற்சி செய்வார்கள். அதையும் நீ குடித்து விடாதே. அப்போது தான் உண்மையிலேயே உனக்கு ஏதோ உடல் நிலைக் கோளாறு என்று நினைத்து மேற்கொண்டு உன்னைத் துன்புறுத்த மாட்டார்கள். அத்துடன் நீ குறைந்தது இரண்டு மூன்று நாட்களாவது நிம்மதியாக இருக்கலாம்" என்றது.

இப்படியாக அந்த இரண்டு விலங்குகளின் சம்பாஷணையை கேட்ட அந்த வியாபாரி பொல்லாத கழுதையின் புத்திக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டான்.

மறு நாள் காலை விடிந்தது வியாபாரின் வெளியாட்கள் எருதை வயல் வெளிக்கு ஒட்டிக் கொண்டு சென்றார்கள். அங்கு எருது கழுதையின் சொல்படியே நடந்து கொண்டது. அத்துடன் பயங்கரமாக முரண்டு பிடித்தது. அதனால் அந்த வியாபாரியின் வேலையாட்கள் செய்வதறியாது திகைத்தார்கள். அத்துடன் அவர்களால் முடிந்தவரையில் முயன்றார்கள். எருதை முதலில் அடித்துப் பார்த்தார்கள். பிறகு வைக்கோலும், தண்ணீரும் வைத்துப் பார்த்தார்கள். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. அந்த எருது அவற்றை முகர்ந்து கூடப் பார்க்கவில்லை. அது ஒரு கட்டத்தில் நெடுஞ்சான் கிடையாக படுத்துக் கொண்டது. பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு அந்த எருதை ஒட்டிக் கொண்டு போய் தொழுவத்தில் கட்டினான் வேலையாட்களில் ஒருவன். அத்துடன் தனது முதலாளியிடம் (அதாவது அந்தப் பணக்கார வியாபாரி) சென்று விஷயத்தைக் கூறினான். அந்த வியாபாரிக்குத் தான் எல்லாமே தெரியுமே. அதனால் தனது வேலையாளிடம், "நீ இனிமேல் எருதை தொந்தரவு செய்யாதே மாறாகக் கழுதையை ஒட்டிக் கொண்டு போய் அதனை வைத்து முடிந்தவரையில் ஏர் உழுது விட்டு வா" என்றான்.

தன் முதலாளி கூறிய மேற்கண்ட வார்த்தைகளைக் கேட்ட அந்த வேலையாள் சற்றே திகைத்தான். காரணம் அவன் கழுதையைக் கொண்டு நிலத்தை உழுவது குறித்துக் கேள்விப் பட்டதே இல்லை. எனினும், தனது முதலாளி கூறினால் அதனை மீறக் கூடாது என்ற எண்ணத்தில், தொழுவத்தில் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு இருந்த கழுதையை ஓட்டிச் சென்று ஏர் பூட்டி உழுதான். அன்றைய தினம் முழுவதும் கழுதைக்கு சோதனை தினமாக இருந்தது. எருதை நடத்தியது போல அந்தக் கழுதையை நடத்தினான் அந்த வேலையாள். அதனை சவுக்கால் விளாசி எடுத்தான். அந்தக் கழுதையோ வலி தாங்க முடியாமல் கனைத்தது. அது செய்வதறியாது அன்றைய தினம் முழுவதும் வேதனையை அடைந்து களைத்துப் போய் மாலையில் தொழுவம் வந்து அடைந்தது. அதனால் நடக்கக் கூட முடியவில்லை.

மறுபுறம் எருதுக்கு நன்றாக ஓய்வு கிடைத்தது. அத்துடன் அது வயிறார புல்லையும் வைக்கோலையும் தின்று தீர்த்தது. தனக்கு இந்த அருமையான வாய்ப்பை உண்டு பண்ணிக் கொடுத்தது கழுதை தான் என்று எண்ணிய எருது மனமார கழுதையை வாழ்த்தி அது வந்த மாத்திரத்தில் நன்றியையும் உடன் தெரிவித்து மகிழ்ந்தது. ஆனால், கழுதைக்கோ ஆத்திரம் தாங்க முடியவில்லை. எல்லாம் தனது வாய்க் கொழுப்பினால் விளைந்தது தான் என்பதை அது நன்கு உணர்ந்து கொண்டது. பிறகு சற்று நேரம் அமைதியாக நின்றபடி "இனி மறுநாளும் வயலுக்குச் சென்று உழ முடியாது என்ன செய்யலாம்" என்று வருத்தத்துடன் யோசிக்கத் தொடங்கியது. அதன் முடிவில் ஏதாவது தந்திரம் செய்து தான் எருதை வயலுக்குப் போகச் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு மெல்ல எருதிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கியது.

"எருது சகோதரா! நான் உனது நல்ல நண்பன் என்பதை நீயும் அறிவாய் அல்லவா? தவிர நான் உனக்கு நல்லதைத் தான் சொல்லுவேன் என்பதும் கூட உனக்குத் தெரியும் இல்லையா? அதனால் நாளை காலையிலும் நீ இது போல அடம் பிடித்தபடி படுத்துக் கிடந்தால் உனக்குப் பெரும் துன்பம் வந்து சேரும். அது எப்படி எனில், உன்னைக் கசாப்புக் கடைக்காரனிடம் விற்று விடுவார்கள். அவன் உன்னை அடித்தே கொன்று விடுவான். ஏனெனில் தனக்குப் பயன் இல்லாத ஒன்றை மனிதர்கள் ஒருபோதும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் தான் நான் சொல்கிறேன், நீ ஒழுங்காக நாளை உன்னை தொழுவத்தில் இருந்து அழைத்துச் சென்ற மாத்திரத்தில் உடனே புறப்பட்டு ஏர் உழுது உனது இந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்" என்று கூறியது. அப்போது அங்கு வந்த அந்தப் பணக்கார வியாபாரி கழுதை சொல்லிக் கொண்டு இருந்ததைக் கேட்டு விட்டான். எனினும், எதையும் காட்டிக் கொள்ளாமல் மெல்ல தனது வீட்டிற்குச் சென்று உண்டு உறங்கினான்.

அடுத்த நாள் கலையில் வியாபாரி மீண்டும் அந்தத் தொழுவத்திற்கு வந்தான். அப்போது அவனது மனைவியும் அங்கு நின்று கொண்டு இருந்தாள். மறுபுறம் வேலையாள் வந்து வழக்கம் போல தினசரி வேலைக்கு எருதை அவிழ்த்தான். எருதானது காசாப்பு கடைக்குத் தான் தன்னை கொண்டு செல்வதாக நினைத்துக் கொண்டு அந்த வியாபாரியின் பக்கத்தில் சென்று அவனது காலடியை நக்கியது. அத்துடன் அந்த வேலையாளுடன் முழுவதுமாக ஒத்துழைத்தது. அச்சமயத்தில் கழுதை முந்தய தினம் பேசியதை மனதில் கொண்டவனாய். இப்போது எருதின் நடவடிக்கையைக் கண்டு சிரித்துக் கொண்டான் அந்த வியாபாரி. வியாபாரி சிரித்ததை பார்த்த அவனது மனைவி," ஏன் இவ்விதம் சிரிக்கின்றீர்கள்?" என்று வினவினாள். ஆனால், அவனோ நடந்தது எதையும் சொல்ல முடியாமல் தவித்தான். காரணம் அது தேவ ரகசியம். அதன் படி நடந்ததை சொன்னால் அந்த வியாபாரி அடுத்த கணம் மரணம் அடைய நேரிடும்.

எனவே மேற்கண்ட காரணத்தால் அந்த வியாபாரி எதையும் கூறாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தான். ஆனால், அவனது மனைவியோ விடுவதாக இல்லை. பல முறைத் தனது கணவனிடம் துருவித் துருவி கேட்டாள்.

வியாபாரி தனது மனைவியிடம், "இதோ பார் காரணத்தைக் கேட்காதே! நான் உண்மையில் கண்டதையும் கேட்டதையும் நினைத்தே சிரித்தேன். அதற்கு மேல் இது பற்றி என்னிடம் எதுவும் நீ கேட்காதே!" என்று கண்டிப்புடன் கூறினான்.

ஆனால் வியாபாரியின் மனைவியோ அவனை விடுவதாக இல்லை. மீண்டும் அவனை நச்சரிக்கத் தொடங்கினாள். அதன்படி அந்த வியாபாரியிடம், "அந்த கண்டதையும், கேட்டதையும் தான் கொஞ்சம் சொல்லுங்களேன். நானும் அதை கேட்கிறேன்" என்றாள். அத்துடன் அவனைத் துளைத்து எடுத்தாள்.

வேறு வழி இன்றி அந்த வியாபாரி தனது மனைவியிடம், "இதோ பார் என்னிடம் எதையும் கேட்காதே. நான் உன்னிடம் எதையும் கூற முடியாது. கூறினால் எனது உயிருக்கு ஆபத்து. இத்துடன் இதனை அப்படியே விட்டு விடு" என்றான்.

ஆனால் எதையுமே அந்த வியாபாரியின் மனைவி கேட்பதாக இல்லை. மீண்டும், மீண்டும் அந்த வியாபாரியிடம் அந்த ஒரே விஷயத்தையே கேட்டுக் கொண்டு  இருந்தாள். இவளை எப்படி சமாளிப்பது என்று யோசித்தான் அந்த வியாபாரி. இந்தக் காட்சிகளை எல்லாம் அவ்விடத்தில் மேய்ந்து திரிந்த கோழிகளும், சேவல்களும் பார்த்துக் கொண்டு இருந்தன.

அப்போது அங்கிருந்த சேவல் தனது பெட்டைக் கோழியிடம்,” ஏன் இவர் இப்படிப் பணிந்து பேசிக் கொண்டு இருக்கிறார்? தனது மனைவியைக் கட்டுப் படுத்த முடியாத ஆண்கள் எல்லாம் ஆண்களா? இதுவே நான் இவரது இடத்தில் இருந்தால் மரத்தில் இருந்த ஒரு கொம்பை ஒடித்து அவளைக் கதறக், கதற உதைத்து இருப்பேன்" என்றது.

சேவல் கூறியதைக் கேட்ட அந்த வியாபாரி, அது தான் சரியான வழி என்று எண்ணினான். அத்துடன் உண்மையைக் கூறி அவன் சாக விரும்பவில்லை. அதனால் மெல்லச் சென்று மரத்தில் இருந்த ஒரு கொம்பை ஒடித்துக் கொண்டு வந்து மனைவியை "கேட்பியா? கேட்பியா?" என்று கூறியவாறு நைய்யப் புடைத்தான். அவளோ வலியைத் தாங்க முடியாமல் அழுதபடி "கேட்க மாட்டேன், கேட்க மாட்டேன்" என்று கூறிக் கண்ணீர் வடித்தாள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தனது கணவருடன் நல்ல முறையில் வாழ்ந்தாள் அந்த வியாபாரியின் மனைவி. அத்துடன் அன்றைய தினத்தில் இருந்து எதையும் கட்டாயம் கூறத் தான் வேண்டும் என்று முரண்டு பிடிக்க மாட்டாள்; அவர்களது குடும்பமும் மிக அமைதியாக நடந்து வந்தது.

இப்படியாக மேற்கண்ட கதையை கூறி முடித்த அந்த அமைச்சர். தனது மகள் ஷாரஜாத்திடம், "அருமை மகளே, நீ புத்திசாலி அனைத்தையும் அறிந்தவள். ஒரு வேளை, நீ நான் சொல்வதைக் கேட்காமல் அடம் பிடித்தாய் என்றால் நானும் அந்த வியாபாரியைப் போல உன்னிடம் நடந்து கொள்ள வேண்டி வரும்" என்றார்.

அதற்கு ஷாரஜாத், "தந்தையே தாங்கள் என்னை அடித்தாலும் நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப் பட மாட்டேன். அத்துடன் எந்தத் துன்பம் வந்தாலும் நான் சந்திக்கத் தயார். நான் மன்னரை மணக்க முடிவு செய்து விட்டேன். அவரை என்னால் மாற்ற இயலும் என நான் நம்புகிறேன். இது வரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் மன்னரின் கோபத்தால் இறந்து விட்டார்கள். இனி வரும் காலங்களில் நான் அவ்வாறு நடக்க விட மாட்டேன். மேலும், ஒரு வேளை தாங்கள் எனது திருமணத்தை மன்னருடன் நடத்த மறுத்தால் நானே அரண்மனைக்குச் சென்று மன்னரிடம் பேசி அவரை மணந்து கொள்வேன்" என்று தனது தந்தையிடம்  திட்டவட்டமாக கூறிவிட்டாள்.

இனியும் தனது மகளிடம் பேசி எந்த விதப் பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு வந்தார் அமைச்சர். அதனால் அவரே தனது மகளின் திருமணத்தை நடத்தும் பொருட்டு மன்னரை சந்தித்து உடனுக்குடன் விஷயத்தை அவரிடம் தெரிவித்தார்.

தனது அமைச்சர் கூறியதை பொறுமையாகக் கேட்டார் மன்னர் ஷாரியர். பிறகு அமைச்சரிடம் "அமைச்சரே, தங்கள் மகளை நான் இன்று மணந்து கொண்டாள். நாளை காலை அவளை நான் கொன்று விடுவேன். ஏனெனில் நான் பெண்களை வெறுக்கிறேன். அதில் உங்கள் மகள் மட்டும் விதி விலக்கா என்ன?" என்றார்.

மன்னரின் வார்த்தைகளைக் கேட்ட அமைச்சர், "எனது மகளின் உயிர் அல்லாவின் கரங்களில் உள்ளது. அவர் ஏதேனும் வழியை அவளுக்கு வைத்து இருப்பார். அதனால் அவர் மீது நான் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் எனது மகளைத் தங்களுக்கு மணம் முடித்து வைக்கத் தயார்" என்றார்.

அதைக் கேட்ட மன்னர் ஷாரியார், "எனில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை, அவளை உடனே நான் திருமணம் செய்து கொள்ளத் தயார். அவளை மணமகள் கோலத்தில் அலங்கரித்து அழைத்து வாருங்கள்" என்றார்.

அதைக் கேட்ட அமைச்சர், மன்னரிடம் விடை பெற்றுத் தனது இல்லம் திரும்பி ஷாரஜாத்திடம் மன்னர் கூறிய வார்த்தைகளைக் கூறினார். உடனே ஷாரஜாத்தும் தன்னை மணமகள் உடையில் அழகாக அலங்காரம் செய்து கொண்டாள். அத்துடன் புது மணப்பெண்ணாய் அரண்மனைக்குச் செல்ல தயார் ஆனாள். இதற்கு இடையில் தனது அருமைத் தங்கையை அழைத்து அவளிடம்," அன்புத் தங்கையே, நான் இன்று இரவு அரசருக்கு மனைவியாகப் போகிறேன். அரண்மனையின் பள்ளி அறையில் இருந்த படி உன்னை அங்கு அழைத்து வருவதற்கு ஆள் அனுப்புவேன். அப்போது நீ அங்கு வந்து சாதரணமாக என்னிடம் பேசுவது போல ஒரு கதையைக் கேட்க வேண்டும். நானும் கதையை சொல்ல ஆரம்பிப்பேன். ஒரு வேளை நான் சொல்லும் அந்தக் கதை நமது மன்னரின் மனத்தைக் கூட மாற்றலாம். ஒரு வேளை, நான் உன்னை அழைப்பதற்கு தாமதம் ஆனாலும் தயவு கூர்ந்து உனது இந்த அக்காவின் பொருட்டு நீயே அரண்மனைக்கு வந்து விடு" என்றாள்.

தனது அக்காள் ஷாரஜாத்தின் வார்த்தைகளைக் கேட்ட துன்யாஜாத் அக்காவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கண்டிப்பாக அவள் அங்கு வருவதாக வாக்களித்தாள். பிறகு ஷாரஜாத் தனது தந்தையுடன் அரண்மனையை அடைந்தாள். உடன் ஏராளமான ஒட்டகங்களை பரிசுப் பொருட்களுடன் இஸ்லாத்தின் வழக்கப்படி மன்னர் தனது புது மனைவிக்கு சீதனமாகக் கொடுத்தார். ஷாரஜாத் அதனைத் தனது தந்தைக்கு அளித்தாள். மகளின் விருப்பப் படி அப்பொருட்களை அரை குறை மனதுடன் பெற்றுக் கொண்ட அமைச்சர். தனது மகளை பாசத்துடன் பார்த்தபடி கண்களில் நீர் வடிய காணப்பட்டார். பிற்பாடு பலர் கூடி நிற்க மன்னருக்கும், அமைச்சரின் அன்பு மகளான ஷாரியத்துக்கும் நல்ல முறையில் நிக்கா (திருமணம்) நடந்தேறியது. அதில் அந்த ஊரே கலந்து கொண்டது.

பிற்பாடு மணமகள் ஷாரஜாத் படுக்கை அறைக்குத் தோழிகள் புடை சூழ அழைத்துச் செல்லப் பட்டாள். அவளுக்காகப் படுக்கை அறையில் காத்திருந்த அரசர் ஷாரியர் அவளது அழகில் மயங்கி தன்னையே அதில் பறிகொடுத்தார். அதன் காரணமாய் அவ்விருவரும் நீண்ட நேரம் இன்பத்தை அனுபவித்தனர். அதிலும் ஷாரஜாத் வித்தியாசமான பெண்ணாக இருந்தாள். பல விதங்களில் அவள் மன்னரைக் கவர்ந்தாள்.

"இத்தனை நாள் நாம் மணந்து இன்பம் தூய்த்த பெண்களில் இவள் வித்தியாசமான பெண்ணாக இருக்கிறாளே, எனினும் விடிந்தால் இவளையும் இழக்க வேண்டிய நிலை வந்து விடுமே" என்று மன்னர் ஷாரியாரே கொஞ்சம் மனம் கலங்கினார். அப்படியாக ஷாரஜாத் மன்னரிடம் நாசுக்காக குறிப்பறிந்து நடந்து கொண்டாள். பின்னர் பல முறை இருவரும் சங்கமித்துக் களைத்தனர். இறுதியில் ஷாரஜாத் மன்னரிடம்," அன்பரே, எப்படியும் விடிந்தால் நான் சாகப் போவது உறுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். இப்போது தங்களிடம் எனது கடைசி ஆசையாக ஒன்றைக் கேட்பேன். என் பொருட்டு அதனைத் தாங்கள் நிறைவேற்றி வைப்பீர்களா?" என்று கேட்டாள்.

அப்போது மன்னர் ஷாரியர் அவள் மீது பரிதாபம் கொண்டார். அதனால் அவளிடம், "எனது அன்புக்கு உரியவளே, நாளைய தினம் நீ மரணிக்கப் போவதால், நீ என்னிடம் இருந்து எதை வேண்டுமானாலும் கேட்கலாம். உனக்கு அது மறுக்கப்படாது. இப்போதே அது நிறைவேற்றித் தரப் படும்" என்றார்.

"அரசே! தங்களைத் திருமணம் செய்யப் போகும் ஆவலில் நான் எனது தங்கை துன்யாஜாத்திடம் கூட சரியாகப் பேசாமல் வந்து விட்டேன். அவள் என்னைத் தவறாக நினைக்கக் கூடும். அதனால் நான் அவளைக் காண உடனே ஏற்பாடு செய்து தர வேண்டும்" என்று ஷாரஜாத் கண்ணீர் மல்க அரசர் ஷாரியரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாள்.

உடனே அரசர் ஷாரியர், ஷாரஜாத்தை கட்டி அணைத்தபடி, "அன்பே! உனது கோரிக்கை உடனே நிறைவேற்றப்படும். இதோ நான் உனது தங்கையை இங்கு அழைத்து வரச் சொல்கிறேன்" என்றார்.

பின்னர் தனது காவலர்களை அழைத்தார். அவர்களும் அரசரின் குரல் கேட்டு ஓடி வந்தார்கள். அவர்களிடம், "இதோ பாருங்கள் நீங்கள் உடனே சென்று ஷாரஜாத்தின் தங்கை துன்யாஜாத்தை அழைத்து வாருங்கள்" என்று கூறினார். அதன் படி காவலர்களும் விரைந்து சென்று துன்யாஜாத்தை அழைத்து வந்தார்கள். உண்மையில் அவள் முன்னேற்பாடுடன் தயாராகத் தான் இருந்தாள்.

பிறகு அரண்மனையை அடைந்த துன்யாஜாத் மன்னரை வணங்கினார். அப்போது ஷாரியர், "இதோ பார் துன்யா! உனது அக்கா உன்னிடம் சரியாகப் பேசாமல் வந்து விட்டதாகக் கூறினாள். அதற்காகத் தான் உன்னை இந்த இரவு வேளையில் அழைத்து வரச் சொன்னேன். உன்னுடன் பேச உனது அக்காள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறாள். உடனே சென்று அவளுடன் கடைசியாகப் பேசி மகிழ்ந்து விடு" என்றார்.

உடனே துன்யாஜாத் ஓடிச் சென்று தனது அக்காளை கட்டி அனைத்துக் கொண்டாள். உடனே அவளிடம் அன்பாகப் பேசத் தொடங்கினாள்.

"அக்கா! என்னாலும் உன்னைக் காணாமல் இருக்க முடியவில்லை. நீ தினமும் என்னைக் கதை கூறித் தூங்க வைப்பாய் அல்லவா? அந்த வகையில் எனக்காக கடைசியாக இன்று ஒரே ஒரு கதையை மட்டும் கூறேன்" என்றாள்.

உடனே ஷாரஜாத் அருகில் இருந்த மன்னர் ஷாரியாரைப் பார்த்தாள். மன்னர் அவளது குறிப்பை உணர்ந்து கொண்டார். அதனால் அவளிடம், "நீ கதை சொல்வதால் எனக்கு எந்த விதத் தொந்தரவும் இல்லை. அத்துடன் நானும் கூட இப்போது உனது கதையைக் கேட்க விரும்புகிறேன். அவசியம் நீ உனது தங்கைக்காக இல்லாவிட்டாலும் இப்போது எனக்காக ஒரு அற்புதக் கதையை கூறித் தான் ஆக வேண்டும்" என்றார்.

"மன்னரின் ஆணையும் இப்போது கிடைத்து விட்டது. இனி என்ன தயக்கம்?" என்று துன்யாஜாத், ஷாரஜாத்திடம் கேட்க ஷாரஜாத் "ஆயிரத்தி ஒரு இரவுகள்" என்ற கதைகளில் முதல் கதையை சொல்லத் தொடங்கினாள்.