கைகேயி சூழ்வினைப் படலம் - 1615
1615.
‘நின் மகன் ஆள்வான்; நீ, இனிது ஆள்வாய்;
நிலம் எல்லாம்.
உன் வயம் ஆமே; ஆளுதி; தந்தேன்;
உரை குன்றேன்;
என் மகன், என் கண், என் உயிர்,
எல்லா உயிர்கட்கும்
நன்மகன் இந்த நாடு இறவாமை
நய’ என்றான்.
‘நின்மகன் ஆள்வான்- ‘உனக்கு மகனாகிய பரதன் ஆட்சி புரிவான்;
நீ இனிதுஆள்வாய் - நீ இன்பமாக அதிகாரம் செலுத்துவாய்; நிலம்
எல்லாம் - மண்ணுலகம்முழுதும்; உன் வயம் ஆமே - உன்
வழிப்பட்டதாக ஆகும்; ஆளுதி - ஆட்சிபுரிவாய்;தந்தேன் -
கொடுத்தேன்; உரை குன்றேன் - பேச்சுத் தவறமாட்டேன்; என்மகன் -
எனக்கு மகனும்; என் கண் - எனக்குக் கண்போன்றவனும்; என் மகன் -
அனைத்து உயிர்களுக்கும் சிறந்த பிள்ளை போன்றவனுமான இராமன்;
இந்த நாடு இறவாமை -இந்த நாட்டை விட்டு வெளியேறாமை மட்டும்;
நய - விரும்பிடுவாய்;’ என்றான் -.
இப்பாட்டின் பிற்பாதி தயரதன் இராமன்மீது கொண்டிருந்த அன்பின்
மிகுதியையும், இராமன்சிறப்பையும் தெரிவிக்கிறது. ‘உன் உயிர்க்கு என
நல்லன் மன்னுயிர்க்கு எலாம்’ (1350) எனவசிட்டன் உரைத்தது ஒப்பு
நோக்கத்தக்கது. 36
