ஷாரஜாத் என்னும் அழகிய நங்கையின் துணிச்சல்
மன்னர் ஷாரியருக்கு தினமும் ஒரு பெண்ணை தேடிக் கொண்டு வந்து கொடுக்க வேண்டியது தான் அந்நாட்டு அமைச்சரின் தினசரி வேலையாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் அவர் அமைச்சர் வேலையை விட இந்த வேலையைத் தான் அதிகம் பார்த்தார். இதனால் அந்த அமைச்சரையும் மக்கள் சபித்தனர். அந்த அமைச்சருக்கு இரு மகள்கள் இருந்தனர். அதில் மூத்தவள் பெயர் ஷாரஜாத். இளையவள் பெயர் துன்யாஜாத் தந்தையை ஊர் மக்கள் திட்டுவதை ஷாரஜாத்தால் தாங்க முடியவில்லை. பல முறை தனது தந்தையிடம் இது பற்றிப் பேசிப் பார்த்தாள். ஆனால் அவரோ அரச கட்டளையை தன்னால் மறுக்க முடியாது என்று கூறி மகள் கூறிய வார்த்தையைக் கூட காதில் வாங்க வில்லை.
இப்படி இருக்கும் சமயத்தில் தான் ஒரு நாள் அமைச்சர் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் எந்தப் பெண்ணும் அன்று அரசருக்குக் கிடைக்கவில்லை. என்ன தான் செய்யலாம் என்று எண்ணிய அமைச்சர் தன்னுடைய இல்லத்திற்கு வந்து வேதனைப் பட்டுக் கொண்டு இருந்தார்.
அப்போது மூத்த பெண்ணான ஷாரஜாத் தந்தையை நெருங்கி விஷயத்தை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள். ஷாரஜாத் அழகில் மட்டும் அல்ல, கல்வியிலும் சிறந்தவள். அவளுக்குத் தெரியாத விஷயங்களே இல்லை. அவ்வளவு அறிவு படைத்தவளாக அவள் திகழ்ந்தாள்.
தந்தையின் கவலையைக் கேட்டுத் தெரிந்து கொண்ட ஷாரஜாத் தந்தையிடம், "தந்தையே தாங்கள் கவலை கொள்ள வேண்டாம். இன்றே உங்கள் மன்னருக்கு என்னைத் திருமணம் செய்து வையுங்கள். அவரால் எனக்கு எந்தவிதத் தொந்தரவும் ஏற்படாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் அல்லது என்னுடைய உயிரைக் கொடுத்தாவது நமது சமூகத்தில் உள்ள கன்னிப் பெண்களை நான் காப்பாற்றுவேன்" என்றாள்.
மகள் ஷாரஜாத் கூறிய வார்த்தைகளைக் கேட்ட அமைச்சர் உண்மையிலேயே பயந்து தான் போனார். அத்துடன் அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு மிகவும் வேதனை அடைந்தார். மேலும், மகளின் விருப்பத்தை அவர் எதிர்த்தார். அத்துடன் தனது மகளிடம், "நீ மன்னரை மணந்தால் அவர் முதல் இரவு முடிந்த அடுத்த நாளே உன்னைக் கொன்று விடுவார். உன்னை இழக்க நான் சம்மதிக்கவே மாட்டேன்" என்று கூறிக் கலங்கினார்.
இப்படியாகத் தனது தந்தை கூறிய பின்னரும் கூட ஷாரஜாத்தின் மனம் மாறவில்லை. அவள் மன்னரை மணந்து கொள்வதில் பிடிவாதமாகவே இருந்தாள். உடனே அந்த அமைச்சர் தனது மகளிடம்," மகளே நான் உன்னிடம் ஒரு கதையைக் கூறுகிறேன். அதனைக் கேட்ட பிறகு முடிவு செய்து கொள்" என்று கூறினார்.
ஷாரஜாத்தும் அந்தக் கதையைக் கேட்க சித்தம் கொண்டாள். அதன் படி அந்த அமைச்சர் கதையைக் கூறத் தொடங்கினார்.
