வேள்விப் படலம் - 474

bookmark

தேவர்கள் இராமபிரானைப் பாராட்டுதல்

474.

புனித மா தவர் ஆசியின் பூ
   மழை பொழிந்தார்;  
அனைய கானகத்து மரங்களும்
   அலர் மழை சொரிந்த;
முனியும். அவ் வழி வேள்வியை
   முறைமையின் முற்றி.
இனிய சிந்தையன். இராமனுக்கு
   இனையன இசைத்தான்.
 
புனித  மாதவர்-  புனிதமான தவமுனிவர் எல்லோரும்;  ஆசியின்
பூமழை  பொழிந்தார்  -  ஆசிமொழிகளாகிய மலர்மாரி பொழிந்தனர்;
அனைய  கானகத்து மரங்களும் - அந்தக் காட்டில் உள்ள பல வகை
மலர்மரங்களும்;  அலர்  மழை  சொரிந்த  - மலர்மழை பொழிந்தன;
அவ்வழி   முனியும்   -   அப்போது   விசுவாமித்திர   முனிவனும்;
வேள்வியை  முறைமையின்  முற்றி - வேள்வியை முறைப்படி செய்து
முடித்து;   இனிய  சிந்தையன்  -  மகிழ்ந்த   மனம்  உடையவனாய்;
இராமனுக்கு இனையன இசைத்தான் - இராமபிரானைப் பார்த்துப் பின்
வருமிவற்றைச் சொல்லலானான்.  

புனிதம்:  தூய்மை.  மாதவர்: சிறந்த முனிவர்கள். ஆசி: ஆசிமொழி.
பொழிதல்:  மிகப்   பொழிதலாம்.  வினை  உருவகம். அனைய: அந்த.
கானகம்+அத்து:   கானகத்து.   இதில்  ‘அத்து’  சாரியை. அலர்: நன்கு
விரிதல்.   முற்றி:    நிறைவேற்றி.    இனிய   சிந்தையன்   என்பதை
இராமனுக்குக்   கூட்டி   உறை    கூறினும்    அமையும்.  இசைத்தல்:
சொல்லுதல்                                               55