வேள்விப் படலம் - 475
475.
‘பாக்கியம் எனக்கு உளது என
நினைவுறும் பான்மை
போக்கி. நிற்கு இது பொருள் என
உணர்கிலென் - புவனம்
ஆக்கி. மற்றவை அனைத்தையும்
அணி வயிற்று அடக்கி.
காக்கும் நீ. ஒரு வேள்வி
காத்தனை எனும் கருத்தே.’
புவனம்- அனைத்துள உலகங்களை; ஆக்கி - (பிரமனாய் இருந்து)
படைத்தும்; மற்று - அதன் பின் (ஊழிப் பெரு வெள்ளக் காலத்தில்);
அவை அனைத்தையும் - அவ்வுலகத்து. இயங்கியல். நிலையியல்
பொருள்கள் அனைத்தையும்; அணிவயிற்று - நின் அழகிய
திருவயிற்றில்; அடக்கிக் காக்கும் நீ - அவை அழிவுறா வண்ணம்
அடக்கிக்கொண்டு (திருமாலாய் இருந்து) காப்பாற்றுவாய்; அத்தகு
பெருமைக்குரிய நீ; ஒரு வேள்வி - நான் செய்த இவ் வேள்வியினை;
காத்தனை - இடையூறு வாராவண்ணம் பாதுகாத்தாய்; எனும் கருத்து -
என்று உலகத்தவர் என்னும் எண்ணத்தால்; பாக்கி
யம் எனக்கு உளது என - இத்தகையது ஒரு பெரும்பேறு நானே
பெற்றேன் என; நினைவு உறும் பான்மை போக்கி - நினைப்பதே
அல்லாமல்; நிற்கு இது - உனக்கு இச்செயல் ஒரு; பொருள் என -
பொருளாகும் என்று; உணர்கிலென் - நான் எண்ணவில்லை.
இராமனது பரத்துவ நிலை நன்கு மனத்து இருத்தியவர் உபசார
வார்த்தைகள் பொழிகிறார். ஊழிக்காலத்தில் உலகு ஒடுக்கும்
திருவயிற்றுத் திருமாலே காக்கக் கடவியவன் நீயே! எத்துணைப்
பெரியை நீ எளிவந்து எனக்காக என் யாகம் காத்தாய் என்பது
உலகத்தவர்க்கு ஒரு தோற்றம் அம்மட்டே. உனக்கு அது ஒரு
பொருளோ? ஆனால் எனக்கு அது பெரும் பாக்கியமே அல்லவா
என்கிறார். 56
