வேள்விப் படலம் - 463

bookmark

463.

ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின.
கானகம் மறைத்தன. கால மாரிபோல்;
மீன் நகு திரைக் கடல் விசும்பு போர்த்தென.
வானகம் மறைத்தன. வளைந்த சேனையே.
   
உருத்து  வீசின ஊன் நகுபடைக்கலம்  -  (அந்த அரக்கர்களால்)
உருத்து   எறியப்பட்ட  பகைவர்  உடல் வன்மையை  எளிதாக மதித்து
உள்ளே புகும் படைக்கருவிகள்; காலமாரி போல் கானகம் மறைத்தன
-  பருவ   கால மழையைப் போல் காட்டையே மூடிவிட்டன; மீன் நகு
திரைக்கடல் -  மீன்களைக்  கொண்ட அலைகடல்; விசும்பு போர்த்த
என  -  மேலெழுந்து வானத்தை மறைத்தது போல; வளைந்த சேனை
வானகம்  மறைத்தன  -  (வேள்விச் சாலையை) வளைத்துக் கொண்ட
அந்தச் சேனை வானவீதியையே மூடி நின்றது.  

ஊன்  நகு  படைக்கலம்: உடம்பை இகழும் படைக்கலங்கள் என்றது
எவரது   உடலும்   அதற்குப்  பொருட்டல்ல  என்பதை  உணர்த்தும்.
நகுதல்:  இகழ்ந்து   நகைத்தல்..   உருத்து: சினம் கொண்டு (கோபித்து).
வீசின:   வீசினவான    படைக்கலம்   -  வினையாலணையும்  பெயர்.
கானகம்  என்பவைகளில்    அமைந்த ‘’அகம்’’ அடைமொழி.. ‘மீன்நகு’
இதில்  நகுதல்:  ஒளிர்தலாம்.  திரைக்கடல்: அலைகளை உடைய கடல்.
இரண்டன் உருபும் பயனும் உடன்   தொக்கத் தொகை. போர்த்தது+என
போர்த்தென என நின்ற தொகுத்தல் விகாரம்.  

அரக்கர்கள்  சினம்  கொண்டு   வீசிய படைக்கலங்கள் - பருவகால
மழை  போல. அந்தக் காட்டையே   மூடிவிட்டன. வேள்விச் சாலையை
முற்றுகையிட்டுச் சுற்றி வளைத்துக்   கொண்ட அசுரசேனை அலைகளை
உடைய  கடலே மேலெழுந்து -  வானத்தை மூடிக் கொண்டது  போலக்
காணப்பட்டது.                                            44