வேள்விப் படலம் - 464
வளைந்த சேனையின் தோற்றம்
464.
வில்லொடு மின்னு. வாள் மிடைந்து உலாவிட.
பல் இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை.
‘ஒல்’ என உரறிய ஊழிப் பேர்ச்சியுள்
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றதே.
மின்னும் வாள் வில்லொடு மிடைந்து உலாவிட - மின்னுகின்ற
வாட்கள் விற்களுடன் கலந்து பெயர்ந்துவர; கடிப்பினில் பல்இயம்
இடிக்கும் - குறுந்தடிகளால் பலவகை வாத்தியங்களை அடித்துக்
கொண்டு வரும்; பல்படை ஒல் என உரறிய - பலவிதமான படைகள்
‘ஒல்’ என்று ஒலித்தன; ஊழிப் பேர்ச்சியுள் - (இச் செயல்) யுகம்
முடியும் காலத்தில்; வல்லை வந்து எழுந்ததோர் - உலகை முடிக்க.
விரைந்து எழுந்து வந்த ஒரு; மழையும் போன்றது - பெருமழை
போலவும் காணப்பட்டது.
மின்னுவாள்: வினைத்தொகை. மின்னு: உகரம் சாரியை. வில். வாள்
என்பன ஒளி என்னும் பொருள் கொண்டனவாம். ஒல்: ஒலிக்குறிப்பு.
உலாவுதல்: பெயர்தல். உரறிய: ஒலித்த. ஊழிப்பேர்ச்சி: யுகம் முடிவு.
வல்லை: விரைவு. ஓர்: ஒப்பற்ற. ‘மழையும்’ இதில் உம்மை. இறந்தது
தழிஇய எச்ச உம்மை. வந்தெழுந்தது: எழுந்து வந்தது (சொல் மாற்று).
வில்லும். வாளும் உலாவ. பலவகை வாத்தியங்கள் ஒலிக்க வந்த
படைகள் - ஒலித்த ஒலியால் ஊழிப் பெருங்காலத்தில் விரைந்து வந்த
மேகம் போலவும் இருந்தது என்பது கருத்து. அரக்கர் சேனையின்
போர்த்திறம் மூன்று செய்யுள்களால் கூறப்பட்டதாம். 45
