வேள்விப் படலம் - 460
இராமபிரான் அரக்கர் எப்பொழுது வருவர்
என முனிவனை வினவுதல்
460.
காத்தனர் திரிகின்ற
காளை வீரரில்
மூத்தவள். முழுது உணர்
முனியை முன்னி. ‘நீ
தீத் தொழில் இயற்றுவர்
என்ற தீயவர்.
ஏத்த அருங் குணத்தினாய்! வருவது
என்று?’ என்றான்.
காத்தனர் திரிகின்ற - வேள்வியைக் காத்தவாகளாக. அந்த
வேள்விச் சாலையைச் சுற்றித் திரிந்துகொண்டிருந்த; காளை வீரரில் -
அந்தக் காளை போன்ற இரு வீரர்களில்; மூத்தவன் - மூத்தவனாகிய
இராமபிரான்; முழுது உணர்முனியை முன்னி - யாவும் அறிந்த
முனிவனாகிய விசுவாமித்திரனை அடைந்து; ஏத்த அரும்
குணத்தினாய் - போற்றுதற்கரிய உயர்குணத்தோய்; நீ தீத்தொழில்
இயற்றுவர் என்ற தீயவர் - கொடுந்தொழில் செய்பவர் என்று நீ கூறிய
அந்தக் கொடிய அசுரர்கள்; வருவது என்று என்றான் - இந்த
வேள்விச் சாலைக்கு வருவதுதான் எப்போது? என்று கேட்டான்.
காத்தனர்: முற்றெச்சம். காளைவீரர்: காளைப்பருவத்தினரான
வீரர்கள் எனவும் கூறலாம். முழுதுணர்முனி: அனைத்தும் அறிந்தவன்.
உணர்முனி: வினைத்தொகை. ஏத்து+அரும்: போற்றற்கரிய. வருவது:
வருவதாகிய காலத்தின் மேல் நின்றது. ‘’ஆறுநாட்களும் வராதவர்
என்றுதான் வருவது’’ என ஐயம் தோன்றக் கேட்டனன் எனலாம். 41
