வேள்விப் படலம் - 461
அரக்கர் வருதல்
461.
வார்த்தை மாறு உரைத்திலன்.
முனிவன். மவுனியாய்;
போர்த் தொழில் குமரனும்.
தொழுது போந்தபின்.
பார்த்தனன் விசும்பினை;
பருவ மேகம்போல்
ஆர்த்தனர். இடித்தனர்.
அசனி அஞ்சவே.
முனிவன் மௌனியாய் - விசுவாமித்திர முனிவன் வாய்
பேசாதவனாகி; வார்த்தை மாறு உரைத்திலன் - மறுமொழி
கூறவில்லை; போர்த்தொழில் குமரனும் - போர்த் தொழில் வல்ல
இராமபிரானும்; தொழுது போந்தபின் - (அஃதறிந்து) முனிவனை
வணங்கிச் சென்றபின்னர்; விசும்பினைப் பார்த்தனன் - வானத்தை
நோக்கினான்; பருவ மேகம் போல் ஆர்த்தனர் - (அப்போது
அரக்கர் வந்து) பருவகால மேகத்தைப் போல ஆரவாரித்தவராகி; அசனி
அஞ்ச இடித்தனர் - இடியும் அஞ்சும்படி இடித்தார்கள்.
வார்த்தை மாறு: மறு வார்த்தை (மறுமொழி). மௌனி:
மௌனவிரதம் மேற்கொண்டவன். போந்த: வந்த. அசனி: இடி.
ஆர்த்தல்: ஆரவாரித்தல். பருவ மேகம்: மழைக்காலத்து மேகம்.
‘’தீயவர் என்று வருவது’’ எனக்கேட்ட ராமனுக்கு முனிவன் மறுமொழி
கூறவில்லை. வணங்கி மீண்ட. ராமன் வானத்தைப் பார்த்தான்.
அரக்கர் வந்து ஆரவாரித்தனர் என்க. 42
