வேள்விப் படலம் - 456

bookmark

வாமனன் இந்திரனுக்கு விண்ணுலகம் ஈந்து
தன் முன்னையிடம் சேர்தல்

456.

‘’உரியது இந்திரற்கு இது’’ என்று.
   உலகம் ஈந்து போய்.
விரி திரைப் பாற்கடல்
   பள்ளி மேவினான்;
கரியவன். உலகு எலாம்
   கடந்த தாள் இணை
திருமகள் கரம் தொடச்
   சிவந்து காட்டிற்றே!
 
உரியது இந்திரற்கு இது என்று- இம்மூவுலகாட்சியும்  இந்திரனுக்கே
உரிமை  உடையது  என்று  கூறி;  ஈந்து  போய்  - அவற்றை அந்த
இந்திரனுக்கு  தந்து போய்; விரிதிரைப் பாற்கடல் பள்ளி மேவினான்
- விரிந்த  அலைகளை  உடைய  பாற்கடல்  படுக்கையை அடைந்தான்;
உலகு   எலாம்   கடந்து   -   மூவுலகத்தையும் அளந்த; கரியவன்
தாள்  இணை  -  கருமை  நிறம்வாய்ந்த  அத்திருமாலின்  பாதங்கள்;
திருமகள் கரம்  தொட - திருமகளான  இலக்குமி  தொட்டு வருடவே;
சிவந்து காட்டின - செந்நிறம் கொண்டு விளங்கின.   

உரியது:   உரிமை உடையது. இந்திரன்: வானவர்க்கு அரசன். பள்ளி:
படுக்கை.  கரியவன்.  கருநிறம்  உடையவன்.   கரி:  சாட்சி. உலகுக்குச்
சாட்சி  யானவன்.  என்றும்  கூறுவர். தாளிணை:  இரண்டு   பாதங்கள்.
திருமகள்:  பெரிய  பிராட்டி.  கரம்: கை இவ்வாறு  மாவலி  வரலாற்றை
முனிவன் கூறினான்.                                        37