வேள்விப் படலம் - 457
சித்தாச்சிரமத்தின் பெருமை
457.
‘ஆதலால். அரு வினை அறுக்கும்; ஆரிய!
காதலால் கண்டவர் பிறவி காண்குறார்;
வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு.
ஈது அலாது இல்லை. வேறு இருக்கற்பாலதே.
அருவினை அறுக்கும் ஆரிய - உயிர்களைப் பற்றி வருத்தும்
அரிய வினைகளை அழித்துக் காக்கும் மேலோனே!; காதலால்
கண்டவர் - (இந்தத் தூய்மையான இடத்தை) காதல் கொண்டு
காண்பவர்கள்; பிறவி காண்குறார் - பிறவி நோயைக்
காணமாட்டார்கள்; ஆதலால். வேதநூல் முறைமையால் - ஆதலாலே.
வேதநூல்களில் கூறியமுறைப்படி; வேள்வி முற்றுவேற்கு -
வேள்வியை நடத்த நினைத்திருக்கும் எனக்கு; இருக்கற்பாலது
- வீற்றிருந்து செய்யத்தக்க இடம்; ஈது அலாது வேறு இல்லை
- இவ்விடம் அல்லாது வேறில்லை.
ஈது அலாது வேறு இல்லை. இவ்விடம் அல்லாது வேறில்லை.
‘ஆதலால் அருவினை அறுக்கும்’ என்று கொண்டு. திருமால் இருந்த
இடமாதலால் தீவினைகளை அழிக்கவல்லதிது எனக் கூறினும் ஆம்
‘அருவினை’ கடத்தற்கரிய வினைகளாம். காதல்: அன்பு (பக்தி).
வேதநூல்: வேதமும் நூல்களும் (உம்மைத் தொகை). முற்றுதல்:
நிறைவேறச் செய்தல். முற்றுவேன்: வினையாலணையும் பெயர்.
இருக்கல்: இருத்தல். பால்: தன்மை. ஏ: அசை. வேள்வி: யாகம்.
வேள்வி செய்ய ஏற்ற இடமிதுவே என முனிவன் கூறினானென்பது
கருத்து.
