வேள்விப் படலம் - 454
திரிவிக்கிரமன் உலகளந்தமை
454.
‘நின்ற கால் மண் எலாம் நிரப்பி. அப்புறம்
சென்று பாவிற்றிலை. சிறிது பார் எனா;
ஒன்ற. வானகம் எலாம் ஒடுக்கி. உம்பரை
வென்ற கால் மீண்டது. வெளி பெறாமையே.
நின்ற கால் - நிலத்தில் ஊன்றி நின்ற கால்; மண் எலாம் நிரப்பி
- நிலத்தின் பரப்பை யெல்லாம் மூடி; பார் சிறிது எனா - இப்பூமி
சிறிய அளவுடைய தென்று; அப்புறம் சென்று பாவிற்றிலை -
அப்புறம் போய்ப் பாவவில்லை; உம்பரை வென்ற கால் - வானம்
சிறிதாகுமாறு மேலே நீண்டு உயர்ந்து வென்ற காலானது; வானகம்
எலாம் ஒன்ற ஒடுக்கி - வானத்தை எல்லாம் ஒருமிக்கச் சிறிதாகும்
படி தனக்குள் ஒடுக்கி; வெளி பெறாமையால் மீண்டது -
மேலும் இடம் கிடைக்காமையால் மீண்டது.
நின்ற: ஊன்றிய. நிரப்புதல்: மூடுதல். பாவிற்றிலை: பாவவில்லை
‘’பார் சிறிதெனா அப்புறம் சென்று பாவிற்றிலை’’ என்றது. பூமி
விரிந்தால். அதுவும் விரியும் என்னும் கருத்தை உள்ளடக்கி் நின்றது.
உம்பர்: வானம். ஒடுக்கி: உள்ளடக்கி. வெளி: இடம். ஒன்ற: ஒரு சேர.
எனா: (செயா என்ற வாய்பாட்டு வினையெச்சம்). 35
