வேள்விப் படலம் - 455
விசுவாமித்திரமுனிவன் வாமனனை வியத்தல்
455.
‘உலகு எலாம் உள்ளடி
அடக்கி. ஓர் அடிக்கு
அலகு இலாது. அவ் அடிக்கு.
அன்பன் மெய்யதாம்.
இலை குலாம் துழாய் முடி
ஏக நாயகன்.-
சிலை குலாம் தோளினாய்!
சிறியன் சாலவே!
ஓரடி உலகு எலாம் உள் அடி அடக்கிற்று- ஊன்றிய காலாகிய
ஒரு அடி உலகத்தை எல்லாம் பாதத்துள் அடக்கிவிட்டது; அலகு
இலா அவ்வடிக்கு - அளந்து கொள்ள இடமில்லாத அந்த மூன்றாம்
அடிக்கு; அன்பன் மெய் அது ஆம் - பக்தனாகிய மகாபலியின்
தலையே அளவடியாக ஆயிற்று; சிலைகுலாம் தோளினாய் - வில்
பொருந்திய தோளினை உடைய இராமா!; இலைகுலாம் துழாய்முடி-
இலைகள் மிகுந்த துளப மாலையை அணிந்துள்ள; ஏகநாயகன்-
உலகுக்கு ஒரு தனி முதல்வனான அத்திருமாலாகிய; சாலச் சிறியன்-
மிகச் சிறிய வடிவினானா அவ்வாமனன்.
இது குளகம். அடுத்த பாட்டுடன் பொருள் முடிவு பெறும். உலகு:
நிலம். உள்ளடி: அடியுள் என்பது மொழிமாறி நின்றது. அலகு: அளவு.
மெய் அது ஆம்: மெய்யதாம். மாவலியின் உடம்பே அளவடியாக
ஆனது என்பது கருத்து. ஏக நாயகன்: தனிப்பெருந்தலைவன். ஏகம்:
தனிமை. ‘சாலச்சிறியன்’ திருமால் கொண்ட வாமன வடிவைக்
குறித்ததாம். இச்சிறிய வடிவமா உலகத்தை யெல்லாம் ஓரடியுள்
அடக்கியது என வியந்து கூறியதுமாம். சால: மிக. ஏ: அசை. 36
