வேள்விப் படலம் - 452
மாவலி வாமனனுக்கு மூன்றடி மண் தருதல்
452.
முடிய இம் மொழி எலாம்
மொழிந்து. மந்திரி.
‘’கொடியன்’’ என்று உரைத்த சொல்
ஒன்றும் கொண்டிலன்;
‘’அடி ஒரு மூன்றும். நீ.
அளந்து கொள்க’’ என.
நெடியவன் குறிய கை
நீரில் நீட்டினான்.
இம்மொழி யெலாம் முடிய மொழிந்து - இத்தகைய நீதிகளை
எல்லாம் முற்றும் எடுத்துச் சொல்லி; மந்திரி கொடியன் என்று
உரைத்த சொல் - அமைச்சனும். புரோகிதனுமான சுக்கிரன்
வாமனனைக் கொடியன் என்று கூறிய சொற்களை; ஒன்றும்
கொண்டிலன் - ஒரு சிறிதும் ஏற்றுக் கொள்ளாதவனாகி; நீ அடி ஒரு
மூன்றும் - (வாமனனைப் பார்த்து) நீ என்னைக் கேட்ட அந்த
மூன்றடி அளவுள்ள நிலத்தை; அளந்து கொள்க என - உனது காலால்
அளந்து கொள்க என்று சொல்ல; நெடியவன் குறிய கை - திருமால்
தனது குறுங்கைகளை; நீரில் நீட்டினான் - மாபலி வார்த்த தான நீரில்
நீட்டினான்.
முடிய: முடிவு பெற. ‘மொழி’ என்பது சொல்வாகு பெயராய்
நீதிமொழிகளை உணர்த்தி நின்றது. சுக்கிரன் ஆசிரியனும்
அமைச்சனுமாம். ‘ஒன்றும்’ இங்குச் சிறிதும் என்று பொருள் தந்து
நின்றது. ‘ஒரு’ சிறுமை குறித்த சொல்லாகும். நெடியவன்: திருமால்.
இங்குக் குறளுருவான வாமன வடிவத்திலேய - பின் எடுக்கப் போகும்
பேருருவம் அடங்கியிருக்கிறது என்பதை உணர்த்த ‘’நெடியவன்
குறியகை’’ என்றார் என்க. 33
