வேள்விப் படலம் - 453
குறளன் நெடியோனாதல்
453.
கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்.
பயந்தவர்களும் இகழ் குறளன். பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள. விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே.
கயம் தரு நறும் புனல் - குளத்தின் நறுமணமுள்ள அந்தத் தான
நீர்; கையில் தீண்டலும் - தனது கைகளில் தீண்டபப்பட்டவுடனே;
பயந்தவர்களும் இகழ் குறளன் - பெற்றவரும் இகழும்படியான
குறுகிய வடிவு கொண்ட வாமன மூர்த்தி; எதிர்பார்த்து வியந்தவர் -
எதிர்நின்று பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும்; வெருக்கொள -
அஞ்சும்படியாக; உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்ப - அறிவு
ஒழுக்கங்களில் சிறந்த மேலோருக்குச் செய்த உதவி சிறந்து
விளங்குவதுபோல; விசும்பின் ஓங்கினான் - வானத்தின் அளவுக்கு
வளர்ந்து நின்றான்.
கயம்: குளம். நறும்புனல்: தெளிந்து குளிர்ந்துள்ள நீராம். உதவி
வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து என்ற
குறட்கருத்துத் தோன்ற. உயர்ந்தவருக்கு உதவிய உதவி சிறந்து
விளங்குவது போல. வாமன மூர்த்தி வானுற ஓங்கி. வளர்ந்து நின்றான்
என்பது கருத்து. பயந்தவர்: பெற்றோர் (தாய். தந்தையர்). வியத்தல்:
ஆச்சரியபடுதல் வெருக்கொள: அச்சமுற. 34
