வேள்விப் படலம் - 451
451.
‘எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ. தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய் உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடுகின்றாய்!*
தகவு இல்வெள்ளி - பெருந்தன்மை இல்லாத சுக்கிரனே;
ஒருவருக்கு ஒருவர் எடுத்து ஈவதனின் முன்னம் - நாடி வந்திருக்கும்
ஒருவருக்கு உடையவர் ஒருவர் பொருளை எடுத்துக் கொடுப்பதற்கு
முன்பு; தடுப்பது நினக்கு அழகிதோ - கொடுக்க வேண்டாமெனத்
தடுப்பது உனக்கு அழகாகுமோ?; கொடுப்பது விலக்கு கொடியோய் -
ஈவதை விலக்கும் கொடிய குணம் கொண்டவனே!; உனது சுற்றம் -
உன்னைச் சார்ந்து நிற்கும் உனது சந்ததியானது; உடுப்பது?வும்
உண்பதுவும் இன்றி - உடுக்கத் துணியும். உண்ணஉணவும் இல்லாமல்;
விடுகின்றாய் - விடுகின்றாய் என்பதை அறிவாயாக.
‘’கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் - உண்பதூஉம்
இன்றிக் கெடும்’’ என்ற குறளை நினைந்து பாடிய செய்யுள் இது.
ஈவது: கொடுப்பது ‘அழகிதோ’ இதில் ஓகாரம் எதிர்மறை வினாப்
பொருள் தந்து நின்றது. தகவு: தகைமை. சுற்றம்: இனத்தார்.
கொடுப்பதைத் தடுத்த வெள்ளியைத் தகவில் வெள்ளி என்றார். 32
