வேள்விப் படலம் - 445
வெள்ளியை நோக்கி மாவலி விளம்பல் (445-451)
445.
‘’நினைக்கிலை; என் கை நிமிர்ந்திட வந்து.
தனக்கு இயலாவகை தாழ்வது. தாழ்வு இல்
கனக் கரியானது கைத்தலம் என்னின்.
எனக்கு இதன்மேல் நலம் யாதுகொல்?’’ என்றான்.
நினைக்கிலை - சுக்கிரனே! நீ நினைத்துப் பார்த்துக்
கூறினாயில்லை; என் கை நிமிர்ந்திட - என்னுடைய கை மேலாக
நிமிர்ந்து நிற்க; தனக்கு இயலா வகை வந்து தாழ்வது - தனது
தன்மைக்குப் பொருந்தாத விதத்தில் தானே வந்து என் முன் தாழ்ந்து
நிற்பது; தாழ்வு இல் கனக் கரியானது கைத்தலம் என்னின் -
எவ்விதத்திலும் தாழ்வில்லாத மேகம் போன்ற கரிய நிறத்தை உடைய
திருமாலின் கை என்றால்; எனக்கு இதன்மேல் நலம் - எனக்கு
இதைவிட மேலான நன்மை; யாது கொல் என்றான் - ஏது இருக்கிறது
என்று மாவலி கூறினான்.
நினைக்கிலை: நினைத்துப் பார்த்துச் சொல்லவில்லை. நிமிர்ந்து:
ஓங்கி. மேலாக ‘இயலா வகை’ இதில் ‘இயலா’ என்பது ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம். ‘தாழ்வது......கைத்தலம்’ என்று முடிக்க.
கனம்: மேகம். யாது: எது. கைத்தலம். கை; இங்கு உள்ளங்கையைக்
குறித்து நின்றது. யாசிப்பவர் கையை விரித்து ஏற்றல் இயல்பாதலின்
என்க. மேல்நலம்: மேலான நன்மை. யாது கொல் இதில் ‘கொல்’ எதிர்
மறைப் பொருளை உணர்த்தி நின்றது.
என்கை உயர்ந்து மேலே நிற்க. தானே வந்து என்முன் தாழ்ந்து
நிற்பது - தனக்குப் பொருந்தாத வகையிலே. வாமனனாக வந்த
திருமாலின் கை என்றால் இதைவிட மேலான நன்மை எது இருக்கிறது
என்றான். மாவலி என்பது கருத்து. 26
