வேள்விப் படலம் - 446
446.
‘’துன்னினர் துன்னலர் என்பது சொல்லார்.
முன்னிய நல் நெறி நூலவர்; ‘முன்வந்து.
உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க’
என்னின். இவன் துணை யாவர் உயர்ந்தார்?
நன்னெறி முன்னிய நூலவர் - நல்ல நெறியினையே நினைந்துள்ள
நூலறிவு வாய்ந்த பெரியோர்கள்; துன்னினர் துன்னலர் என்பது
சொல்லார் - நெருங்கியவர். நெருங்காதவர் என்ற வேறுபாடு கருதார்;
உன்னிய தானம் - தாம் செய்வதாக நினைத்த தானப் பொருள்;
உயர்ந்தவர் முன்வந்து கொள்க- உயர்ந்தோர் முற்பட வந்து கொள்க;
என்னின் - என்று சொல்லிவிட்ட பிறகு அதனைப் பெறவந்திருக்கும்
பலருள்ளும்; இவன் துணை யாவர் உயர்ந்தார் - இந்த வாமனனுக்கு
இணையாகக் கல்வி கேள்விகள் வல்ல உயர்ந்தோர் யாருண்டு?
துன்னினர்: நெருங்கியவர் அல்லது உறவினர். துன்னலர்: பகைவர்.
சொல்லார்: சொல்லாதவராகி (முற்றெச்சம்). நூலவர்: நூலறிவு வாய்ந்த
மேலோர். உன்னிய: நினைத்த. தானம்: கொடை. கொள்க: வியங்கோள்
வினைமுற்று. துணை: ஒப்பு யாவர்: யார்.
நன்னெறி கருதிய மேலோர் வேண்டியவர் வேண்டாதவர் என்ற
வேறுபாட்டை எண்ணாது. தாம் செய்ய நினைத்த தானத்தை
உயர்ந்தோர் கொள்க என்று சொல்லுவராயின். இந்த வாமனனை விட
வேறு உயர்ந்தோர் எவருண்டு என்றான் மாவலி என்பது கருத்து. 27
