வேள்விப் படலம் - 444

bookmark

வெள்ளி கூறிய தடையுரை

444.

‘’கண்ட திறந்து இது கைதவம்; ஐய!
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமும் முற்றும் அகண்டமும். மேல்நாள்.
உண்டவன்ஆம்; இது உணர்ந்துகொள்’’ என்றான்.
 
ஐய! இது கண்ட திறத்திது  கைதவம்-  தலைவனாகிய மாவலியே!
ஆராய்ந்து  உணர்ந்தால்   இந்த   அந்தண    வடிவம்   கபடமானது;
கொண்டல் நிறக் குறள் என்பது  கொள்ளேல் -  (இதனை)  மேகம்
போன்ற  நிறமுடைய  குறள்  வடிவம் என நினைக்காதே;  அண்டமும்
முற்றும்  அகண்டமும்  - இந்தப் பூமியையும் அதனைச்   சூழ்ந்துள்ள
பேரண்டங்களையும்;  மேல் நாள் உண்டவன்  ஆம்  -   முன் ஒரு
காலத்திலே உண்டவனாகிய திருமாலே ஆகும்; இது உணர்ந்து  கொள்
என்றான் - இதை அறிந்து கொள்வாய் என்று கூறினான்.  

திறம்:   உணர்ச்சித் திறம். கைதவம்: பொய்மை. கொண்டல்: மேகம்.
குறள்:  குறுகிய  வடிவம்.  கொள்ளேல்: கொள்ளாதே. எதிர்மறை ஏவல்
வினைமுற்று.  முற்றுதல்:   சூழ்தல்.   அல்லது  வளைதல். கண்டறிந்து:
ஆராய்ந்து   உணர்ந்த   போது.    அண்டம்:   உலகம்.  அகண்டம்:
பேரண்டம்.

அசுர   குருவாகிய    சுக்கிரன்.    மாவலியை    நோக்கி.   ஐய!
ஆராய்ந்துணர்ந்தல்   இந்த   வடிவம்  வஞ்சகம்;    பொய்மையானது.
கொண்டல்  நிறத்துக்  குறள் வடிவம் என்று எண்ணாதே.  அண்டமும்
அகண்டமும்  உண்டவனான  திருமாலே  என்பதைத்   தெரிந்துகொள்
என்றான் என்பது கருத்து.                                  25