வேள்விப் படலம் - 443
மாவலி வழங்கலும் வெள்ளி தடுத்தலும்
443.
‘சிந்தை உவந்து எதிர். ‘’என் செய?’’ என்றான்;
அந்தணன். ‘’மூஅடி மண் அருள். உண்டேல்;
வெந் நிறலாய்! இது வேண்டும்’’ எனாமுன்.
‘’தந்தனென்’’ என்றனன்; வெள்ளி. தடுத்தான்;
சிந்தை உவந்து - (மாவலி இதைக் கேட்டு) மனம் மிக மகிழ்ந்து;
என் செய என்றான் - மறு மொழியாக நான் என்ன செய்யவேண்டும்
என்று கேட்டான்; அந்தணன் - அதைக் கேட்ட வாமனனாக வந்த
திருமால்; வெந்திறலாய் - கொடிய வலிமை வாய்ந்த மாவலியே;
உண்டேல் மூவடிமண் அருள் இது வேண்டும் - உள்ளதாயின் என்
காலால் மூன்றடி மண் தருவாயாக இதுவே வேண்டும்; எனா முன்
தந்தனென் என்றான் - என்று சொல்லுதற்கு முன்பே (மாவலி)
தந்தேன் என்றான்; வெள்ளிதடுத்தான் - அப்போது அசுர குருவாகிய
சுக்கிரன் த்ராதே என்று தடுத்தான்.
சிந்தை: மனம். உவந்து: மிக மகிழ்ந்து. உண்டேல்: உள்ளதாயின்
(என்றது உற்சாகத்தின் பொருட்டு). வெந்திறல்: வெம்மையாகிய திறல்
(பண்புத்தொகை) எனா: செயா என்ற வாய்பாட்டு வினையெச்சம்.
எனாமுன்: என்று கூறி முடிப்பதற்கு முன்பே. தந்தனென்: தந்தேன்
விரைவு பற்றி வந்த இறந்த கால வினைமுற்று. தருவேன் என்பது
பொருள். வழு அமைதி. சுக்கிரன் என்ற வடமொழிப் பெயரின்
தமிழாக்கம் வெள்ளி. 24
