வேள்விப் படலம் - 442

bookmark

வாமனன் மாவலியைப் பாராட்டுதல்

442.

‘ஆண்தகை அவ் உரை கூற. அறிந்தோன்.
‘’வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி.
நீண்ட கையாய்! இனி. நின்னுழை வந்தோர்
மாண்டவர்; அல்லவர் மாண்பு இலர்’’ என்றான்.
 
ஆண்தகை  அவ்வுரை கூற  -  வீரம் மிக்க மாவலி அவ்விதமாகச்
சொல்லவே;    அறிந்தோன்    -    அனைத்தும்   அறிந்தவனாகிய
அவ்வாமனமூர்த்தி;  வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி நீண்ட
கையாய் - வேண்டி  வந்தவர்களது  விருப்பத்துக்கு மேற்படும்படி வாரி
வழங்கிஅதனால்  நீண்டிருக்கும்  கைகளை  உடையோய்!;  இனி நின்
உழை    வந்தோர்   மாண்டவர்    -     உன்னிடம் வந்தவர்கள்
மாண்புடையவராவர்; அல்லவர் மாண்பிலர் என்றான் - அல்லாதவர்
மாட்சியில்லாதவரே என்றான்.

ஆண்தகை:  வீரம் பொருந்தியவன் (இங்கு மாவலி). தனக்குத் தீங்கு
வருவது    கண்டும்   மேற்கொண்ட   செயலில்    ஊக்கமுடையவன்
என்பதைக் குறிக்கும். வேண்டினர்: வேண்டி வந்த  இரவலர். வேட்கை:
விருப்பம்.  நீண்ட கை: கொடையில் நிண்ட கை;  (தருகை நீண்ட கை).
‘நின்னுழை’ இதில் ‘உழை’ ஏழனுருபு. வீசுதல்: வழங்குதல்.

மாவலி   அவ்வாறு  கூற. வாமனன். வேண்டிவந்து கேட்பவர்களின்
விருப்பத்துக்கும்    மிகுதியாக    வழங்கும்  நீண்ட  கையுடையவனே!
உன்னிடம்   வந்ததடைந்தவர்கள்    மாண்புடையர்.   அல்லாதவர்கள்
மாண்பில்லார் என்று பாராட்டினான் என்பது கருத்து.             23