வேள்விப் படலம் - 441

bookmark

மாவலி வாமனனை வரவேற்று முகமன் கூறுதல்

441.

‘அன்று அவன் வந்தது அறிந்து. உலகு எல்லாம்
வென்றவன். முந்தி வியந்து எதிர் கொண்டான்;
‘’நின்தனின் அந்தணர் இல்லை; நிறைந்தோய்!
என்தனின் உய்ந்தவர் யார் உளர்?’’ என்றான்.
 
அன்று  அவன் வந்தது அறிந்து -   அன்று   அந்த   வாமனன்
வந்ததை  அறிந்து;  உலகு  எல்லாம் வென்றவன் - உலகையெல்லாம்
வென்றவனான மாவலி; முந்தி விரைந்து எதிர் கொண்டான் - முற்பட
விரைந்து   சென்று    எதிர்கொண்டு    அழைத்து  வந்தான்.  பின்பு;
நிறைந்தோய் -  நிறைந்த  தவம்  உடைய  மேலோனே;  நின்தனில்
அந்தணர்   இல்லை  -  உன்னைவிடச் சிறந்த அந்தணர் வேறில்லை;
என்தனின் உய்ந்தவர்  யார்  இனி  என்றான் - என்னைவிட உய்வு
பெற்றவர் இனி இங்கு யார் இருக்கிறார்கள் என்றான்.

உலகெல்லாம்     வென்றவன்: மகாபலிச் சக்கரவர்த்தி. முந்தி: முன்.
நின்தன்  என்தன்  இவைகளில்  ‘தன்’  இரண்டும்  ‘அசைகள்’  ‘’எதிர்
கொண்டான்’’  எதிர்  கொண்டு. அழைத்து வந்தான் என்பது  பொருள்.
நிறைந்தோய்:  தவத்தாலும்.  தன்மையாலும்   நிறைந்தவன்   என்பதை
உணர்த்தும்.   வாமனன்   வந்ததை  அறிந்த   மகாபலி  எதிர்சென்று
அழைத்து  வந்து  நிறை  தவத்தோய்   நின்னில்   உயர்ந்தாருமில்லை.
என்னில் உய்ந்தாருமில்லை எனக் கூறி மகிழ்ந்தான் என்க.         22