வேள்விப் படலம் - 419

bookmark

விசுவாமித்திரன் இராமனுக்குப் படைக்கலம் தருதல்

419.

விண்ணவர் போய பின்றை.
   விரிந்த பூமழையினாலே
தண்ணெனும் கானம் நிங்கி.
   தாங்க அருந் தவத்தின் மிக்கோன்.
மண்ணவர் வறுமை நோய்க்கு
   மருந்து அன சடையன் வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன.
   படைக்கலம் அருளினானே.
 
விண்ணவர் போய  பின்றை- தேவர்கள் வாழ்த்திச் சென்ற  பிறகு;
விரிந்த பூ  மழையினாலே  -  தேவர்கள்  பொழிந்த  விரிந்த  மலர்
மாரியாலே; ‘தண்’ எனும் கானம் நீங்கி - குளிர்ந்த அந்தக் கானத்தை
விட்டகன்று; தாங்க  அரும்  தவத்தின்  மிக்கோன் - தாங்குதற்கரிய
தவம்  மிகுந்த விசுவாமித்திர முனிவன்; மண்ணவர் வறுமை நோய்க்கு
- உலகத்தவரின் ‘வறுமை’ என்னும் நோய்க்கு;  மருந்து அன சடையன்
வெண்ணெய்   அண்ணல்   -   மருந்தைப்போன்றதான   சடையப்ப
வள்ளலாகிய  திருவெண்ணெய்   நல்லூர்  அண்ணலுடைய;  சொல்லே
அன்ன படைக்கலம்  அருளினான்  -  சொல்லையே  போன்றதாகிய
படைக்கலங்களை இராம. இலக்குவர்களுக்கு ஈந்து அருளினான்.

‘’பின்றை’’    என்பது பின் என்பதன் மரூஉ. விண்ணவர்: தேவர்கள்.
விரிதல்: மலர்தல். தண்:தண்மை (குளிர்ச்சி).  கானம்:  கான்.  மிக்கோன்:
உயர்ந்தவன். வறுமை நோய்:  இல்லாமை நோய்.  ‘வெண்ணெய்ச்சடைய
அண்ணல்தன்  சொல்’  -  மண்ணவர்  வறுமை  நோய்க்கு மருந்தாகும்
என்பது     கருத்து.    படைக்கலத்துக்குச்   சொல்   உவமையாயிற்று.
அருளுதல்: ?கொடுத்தல். அன. அன்ன: என்பன உவமை உருபுகள்.

விண்ணவர்   இராமனை  வாழ்த்திச்  சென்றபின் -   விசுவாமித்திர
முனிவன்   -   இராம.   இலக்குவர்களுக்குத்  தேவர்கள்    கூறியபடி
படைக்கலங்களைக் கொடுத்தருளினான் என்பது பொருளாகும்.        1