வேள்விப் படலம் - 420

bookmark

படைக்கலங்கள் இராமபிரானை அடைதல்

420.

ஆறிய அறிவன் கூறி
   அளித்தலும். அண்ணல்தன்பால்.
ஊறிய உவகையோடும்.
   உம்பர்தம் படைகள் எல்லாம்.
தேறிய மனத்தான் செய்த
   நல்வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி
   வருவபோல். வந்த அன்றே.
 
ஆறிய அறிவன் கூறி அளித்தலும்-துயர்தீரப்பெற்ற  அறிவனாகிய
முனிவன்  உரிய  மந்திரங்களைக் கூறி. ஈந்ததும்; உம்பர்தம் படைகள்
எல்லாம் -   தெய்வத்தன்மை   உடைய  அப்படைக்கலன்களெல்லாம்;
தேறிய மனத்தான்  செய்த  -  தெளிந்த  மனம் உடையவன் முன்பு
செய்த;  நல்வினைப்   பயன்கள்  எல்லாம்  -  நல்வினைப்  பயன்
அனைத்தும்; மாறிய பிறப்பில்  தேடிவருவ  போல்  - மாறி எடுத்த
அடுத்த  பிறவியிலும்   செய்தவனைத்   தேடிவந்து  அடைவது போல;
ஊறிய உவகை  யோடும்  - ஊற்றம் மிக்க களிப்போடும்; அண்ணல்
தன்பால் வந்த - பெருமைமிகுந்த ராமபிரானிடம் வந்து சேர்ந்தன.

ஆறிய:  துயர் நீங்கிய. இந்திரியச் செயல்கள் தணியப்பெற்ற  எனவும்
கூறுதல்  பொருந்தும்.  அறிவன்:  ஞானி.  கூறி அளித்தல்:   உபதேசம்
செய்து  கொடுத்தல்.  செய்த:  முற்பிறப்பில்  செய்த.   மாறிய   பிறப்பு:
வேறாகிய  பிறப்பு.  அன்று. ஏ: அசைகள்.  விசுவாமித்திர  முனிவன் -
கூறி  அளித்தலும்  -  படைகள்  நல்வினைப்பயன்  செய்தவனை  நாடி
வந்தடைதல் போல வந்தன என்பது கருத்து.                      2