விவேகானந்தர் தனது குருவை முதன் முதலில் சந்தித்தல்

விவேகானந்தர் தனது குருவை முதன் முதலில் சந்தித்தல்

bookmark

முதன் முதலாக நரேந்திரர் (சுவாமி விவேகானந்தர்) , குருத்தேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரை தரிசிப்பதற்காக தட்சிணேஸ்வரத்துக்கு வந்தார். நரேந்திரர் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தார். ஆயினும் இளம் வயதிலேயே நரேந்திரர் உலகியலில் பற்று இல்லாதவராகவே இருந்தார்.

தட்சிணேஸ்வரத்துக்கு நண்பருடன் சென்ற நரேந்திரர் கலைந்த தலைமுடியும் கசங்கிய ஆடையுமாகத் தோற்றம் அளித்தார். குரு தேவரை அவர் சந்தித்தபோது, ஒரு பாடல் பாடும் படி குருத்தேவர் நரேந்திரனிடம் கூறினார்.அப்போது உடனே நரேந்திரர் உள்ளம் ஒன்றிப் பாடும் பொழுதே குருதேவர் தியான நிலையை எய்தினார்.

நரேந்திரர் பாடி முடித்ததும் குருதேவர் தியானம் களைந்து எழுந்தார். அவருடைய அன்புக் கரங்கள் நரேந்திரரைப் பற்றின. பின்பு நரேனை தனியிடத்திற்கு அழைத்துச் சென்றார் குருதேவர். குருதேவரின் முகம் அப்போது அருளைப் பொழிந்தது. கண்களோ அன்பை வழங்கியது. நரேந்திரர் குருதேவரின் அன்பில் தோய்ந்து கட்டுண்டு நின்று இருந்தார்.

"எத்தனை காலமாக உன்னுடைய வருகைக்காக நான் காத்துக் கொண்டு இருக்கிறேன் தெரியுமா?" என்று உள்ளம் உருக குருதேவர் நரேனிடம் கூறினார்.

மக்களின் உலகியல் பேச்சுக்களைக் கேட்டு தமது காதுகள் வெந்து போகின்றனவே, நெஞ்சத்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள எவரும் இல்லையே என்று கூறி மனம் வாடினார் குருதேவர்.

குருதேவர், நரேந்திரரைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து சிரித்தார். பின்பு கரைந்து அழுதார். இனிப்புகளை நரேந்திரரின் வாயில் ஊட்டிக் களித்தார். தாய்ப்பசு கன்றைக் கண்டதும் அடைகின்ற உவகையை குருதேவர் அப்போது அடைந்தார்.

முன்காலத்தில் வாழ்ந்த முனிவன் என்றும் மனித வடிவம் பெற்று வந்து இருக்கிற நாராயணன் என்றும் நரேந்திரரைப் புகழ்ந்து அன்பின் மிகுதியால் குருதேவர் கூறினார்.

இறைவனுக்காகவே அனைத்தையும் துறந்தவர் குருதேவர் என்று நரேந்திரரின் தெளிந்த சிந்தையில் எண்ணம் தோன்றியது. புனிதமானவர் என்று உளமாறப் போற்றிய நரேந்திரர் குருதேவரைப் பணிந்து வணங்கி முதல் சந்திப்பிலேயே ' சரணம்' என்று காலடியில் வீழ்ந்தார்.