நரேந்திரரின் குழந்தைப் பருவம் (பாகம் ஒன்று)

நரேந்திரரின் குழந்தைப் பருவம் (பாகம் ஒன்று)

bookmark

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பள்ளியில் 1870 ஆம் ஆண்டில் நரேந்திரர் சேர்ந்தார். படிப்பிலும் விளையாட்டிலும் தேர்ச்சி பெற்று இருந்தது போலவே துணிச்சலுக்கும் பெயர் பெற்று இருந்தார் நரேந்திரர்.

பள்ளியில் ஒரு சிறுவன் சிறு தவறைச் செய்தான். அவன் நரேந்திரரின் வகுப்புத் தோழன். தமது ஆசிரியர் மிகுந்த கோபக்காரர். அவர் என்ன தண்டனை அளிக்கப் போகிறாரோ என்று சிறுவன் மிகுந்த அச்சத்துடன் இருந்தான். நரேந்திரர் அவனுக்கு ' நானிருக்கிறேன், பயப்படாதே' என்று துணிவு ஊட்டினார்.

ஆசிரியர் வந்ததும் அந்தச் சிறுவன் செய்த தவறை அறிந்தார். அவனை நையப் புடைக்கத் துவங்கினார். அதனைக் கண்டு பொறுக்க முடியாத கோபத்துடன் நரேந்திரர் சிம்மமென கர்ஜித்தார். ஆசிரியர் திரும்பி ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வையின் வெப்பத்தில் மற்ற சிறுவர்கள் நடுங்கிப் போனார்கள்.

சிறுவனான நரேந்திரன் சிறிதும் பயம் இன்றி நின்றார். ஆசிரியர் அடிப்பதை விட்டு விட்டு நரேந்திரன் அருகில் வந்து " எதற்காக அப்படி சத்தம் போட்டாய்?" என்று அதட்டினார். நரேந்திரர் அழுத்தமாக வாயை மூடிக் கொண்ட பின்பும் நரேந்திரர் தம்மிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார் ஆசிரியர்.

நரேந்திரர் மன்னிப்புக் கோரவில்லை. தவறு செய்யாத போது எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது நரேந்திரரின் எண்ணம்.

கோபக்காரரான ஆசிரியர் நரேந்திரரின் மென்மையான சிவந்த பூப்போன்ற இளம் காதைத் திருகினார். அவர் திருகிய அந்தத் திருகில் நரேனின் காதுகளில் இருந்து ரத்தம் துளிர்த்தது. ஆனால் அப்போதும் நரேந்திரர் மன்னிப்பு கேட்கவில்லை.

"என்னைத் துன்புறுத்த நீங்கள் யார்?" என்று ஆத்திரத்துடன் நரேந்திரர் கூறியதைக் கேட்டுக் கொண்டே பள்ளியின் நிர்வாகியான ஈஸ்வர சந்திரர் அங்கே வந்தார்.

நடந்ததை ஈஸ்வர சந்திரர் அறிந்தார். ஆசிரியரிடம் இனி இவ்வாறு நடக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார். பின்பு ஈஸ்வர சந்திர வித்யா சாகர் நரேந்திரரை அன்போடு அணைத்துக் கொண்டு சமாதானம் செய்தார்.

இளவயதில் நரேந்திரரின் ஓர்மையான தியானம் :-

தியானம் செய்யும் பழக்கம் நரேந்திரருக்கு மிக இளம் வயதிலேயே கைவரப் பெற்று இருந்தது. நான்கு வயது பாலகனாக இருக்கும் போது சிவபெருமான், சீதா ராமர் போன்ற தெய்வங்களின் பொம்மைகளை வைத்து நரேந்திரர் விளையாடுவார். தெய்வங்களுக்கு மலர் சூடி, பூஜை செய்து பிறகு கண் மூடி அமர்ந்து இருப்பார். அப்போது அடிக்கடி கண் விழித்து தனது தலை முடியை தொட்டுப் பார்ப்பார். பல காலம் தியானத்தில் மூழ்கிய ரிஷிகளின் சடை மூடி நீண்டு வளர்ந்து தொங்கும் என்று வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறார். தனக்கும் அவ்வாறு வளர்ந்து இருக்கிறதா என்று அறிந்து கொள்ள அந்த பாலகன் அவ்வாறு செய்தார்.

ஒரு நாள் தியானம் செய்வதற்காகத் தனியான அரை ஒன்றில் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டார். நெடு நேரம் ஆயிற்று. வீட்டில் இருந்தவர்கள் நரேந்திரரைக் காணவில்லை என்று கவலையுற்றுத் தேடலானார்கள்.

வெளியில் சென்று இருப்பானோ? வீடு திரும்பும் வழி தவறி இருக்குமோ என்று கவலை ததும்பக் கண்ணீர் விடலானார்கள். வீட்டிலுள்ள உறவினர் எல்லோரும் வெளியே சென்று நரேந்திரரைத் தேடும் பணியில் ஈடு பட்டார்கள்.

வீட்டிற்குப் பின்னால் தனியாக இருந்த அறை மூடிக் கிடந்ததைக் கண்டு, ஒருவேளை நரேந்திரர் அங்கு இருக்கக் கூடுமோ என்று அறையை திறக்க முயன்றார்கள். அறை உட்புறமாகத் தாழிடப்பட்டு இருந்தது. அனைவரும் கலக்கத்துடன், குழந்தை உள்ளே இருப்பானோ என்று பேசியபடி கதவை உடைக்க முற்பட்டார்கள்.

கதவை உடைத்து உள்ளே எல்லோரும் சென்றதும் அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களைத் திகைக்க வைத்தது.

கதவு உடைக்கப்பட்ட சத்தம், எல்லோரும் போட்ட கூச்சல், அழுகுரல் எதுவுமே கேளாதவராக அங்கே நரேந்திரர் ஆழ்ந்த தியான நிலையில் ஆடாமல் அசையாமல் வீற்று இருந்தார்.

அத்தகைய நிலையைக் கண்ட பின்பும் இது நரேந்திரரின் இளம் பருவ விளையாட்டு என்றே அனைவரும் எண்ணினார்கள். தியானத்தில் நரேன் மெய் மறந்து இருப்பதை அவர்கள் யாரும் உணரவில்லை.

நரேந்திரரின் அசாதரணமான அனுபவங்கள்:-

நரேந்திரருக்கு இளம் வயதிலேயே அசாதாரண அனுபவங்கள் ஏற்பட்டன தினமும் இரவு படுத்தும் கண்களை மூடிக் கொள்வார். அப்போது இரு புருவங்களுக்கு இடையில் ஒளி வட்டம் ஒன்று தோன்றும். நரேந்திரர் மனத்தை அந்த ஒளிவட்டத்தின் மீது செலுத்துவார். ஒளி வட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்வதைக் காண்பார்.

அத்தகைய மாற்றங்களைக் காண்பதற்கு வசதியாக குப்புறப் படுத்துக் கொள்வார். ஒளி வட்டத்தில் வண்ணங்கள் பிரிந்து மாறும். பின்பு அவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து பெரிய ஒளிக் கோளமாகும்.

நரேந்திரர் ஒளிக் கோளத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது, அந்தக் கோளம் வெடித்துச் சிதறும். அவ்வாறு சிதறிய ஒளி விரைவாக நரேந்திரரின் உடலைத் தழுவிக் கொள்ளும். அந்த நிலையில் நரேந்திரர் உணர்வை இழந்து விடுவார். அப்படியே அவர் உறங்கிவிடுவதும் உண்டு.

நரேந்திரர் இத்தகைய அதிசிய அனுபவத்தை எல்லோரும் அனுபவிக்கிறார்கள் என்றும், எல்லோரும் இவ்வாறு தான் உறங்குகிறார்கள் என்றும் எண்ணிக் கொண்டு இருந்தார். அதனால் எவரிடத்திலும் இதைப் பற்றி அவர் கூறியதில்லை.

சிறிது காலம் சென்ற பின்பு, முறையாக தியானப் பயிற்சியை கற்றுக் கொண்டார் நரேந்திரர். அவருடன் சில நண்பர்களும் தியானம் செய்து வந்தார்கள். நரேந்திரர் தியானம் செய்யும் போது கண்களை மூடிக் கொண்டதும் ஒளி தோன்றும். அதில் தனது மனத்தை ஒரு நிலைப்படுத்துவார்.

அதைப்பற்றி நண்பர்களுடன் பேசும் போது தான் நரேந்திரருக்கு ஒரு உண்மை புலப்பட்டது. இளம் வயது முதல் கண்களை மூடியதும் தோன்றும் ஒளி தனக்கு மட்டுமே தோன்றுகிறது. அதுபோல நண்பர்களுக்கு நேர்ந்ததில்லை என்று அறிந்தார்.

நரேந்திரரின் அதிசய அனுபவங்கள் அவரை ஒரு அசாதாரண மனிதராக இனம் காட்டின. குருதேவரிடம், ஈர்க்கப்படுவதற்கு இவை காரணங்களாக அமைந்தன எனவும் கூறலாம்.

நரேந்திரன் என்னும் பயம் அறியாத அந்த இளம் கன்று:-

மரத்தில் ஏறி தலைகீழாகத் தொங்குவதும் குதிப்பதும் நரேந்திரருக்குப் பிடித்தமான விளையாட்டு. அவருடைய பள்ளி நண்பனின் வீட்டில் பெரியதொரு மரம் இருந்தது. அதில் ஏறி மலர்களை எல்லாம் பறிப்பார். நரேந்திரர் மட்டும் அல்லாமல் அவருடைய நண்பர்களும் சேர்ந்து மரத்தில் ஏறி அட்டகாசம் செய்வார்கள். அக்கணம் கூச்சலும் கும்மாளமுமாகத் தாவுவதும் குதிப்பதுமாக அவர்கள் ஆனந்த ஆரவாரத்தில் திளைத்து இருப்பார்கள்.

அந்த வீட்டில் உள்ளவர்கள் இந்த விஷமப் பிள்ளைகள் மரத்தில் ஏறி கீழே விழுந்து விட்டால் என்னவாகுமோ என்று கவலை கொண்டார்கள். வீட்டில் இருந்த முதியவர் ஒருவர் இந்தப் பிள்ளைகளின் தொல்லையில் இருந்து விடுபட ஏதேனும் செய்ய வேண்டும் என்று யோசித்தார். பிள்ளைகளுக்குத் தலைவன் போல இருந்த நரேந்திரரை அழைத்தார்.

"இதோ பார். இந்த மரத்தின் மீது பேய் உள்ளது. நீங்கள் மரத்தில் ஏறினால் அது உங்களை கொன்று தின்று விடும்" என்றார் அந்த முதியவர்.

நரேந்திரர் முதியவர் கூறியதைக் கேட்டு மிகவும் பயந்தது போல பாவனை செய்தார். முதியவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. குழந்தைகள் பயத்தின் காரணமாக இனி மேல் மரத்தின் மீது ஏற மாட்டர்கள் என்று வீட்டிற்குள் சென்று விட்டார். அவர் சென்ற மாத்திரத்தில் நரேந்திரனின் நண்பர்கள் நரேந்திரனிடம் இனி மரத்தில் ஏற வேண்டாம் என்று கூறி பாலகன் நரேந்திரனை வீட்டிற்கு அழைத்தார்கள்.

அப்போது நரேந்திரர், நண்பர்களைப் பார்த்து கேலியாகச் சிரித்தார். நரேந்திரர் அப்போது நண்பர்களைப் பார்த்துக் கூறினார்," ஏன் இப்படி பயந்து நடுங்குகிறீர்கள்? அவர் சொல்லியது போல இந்த மரத்தில் பேய் இருந்தால் இந்நேரம் நம்மை பிடித்து இருக்குமே! நாமும் தினமும் இந்த மரத்தில் ஏறி இறங்குகிறோமே! நான் சொல்கிறேன் அப்படி எதுவும் இல்லை. பேய், பிசாசு என்பதெல்லாம் பயத்தின் பரிமாணங்கள்" என்று அவர்களுக்கு விளக்கம் அளித்தார். அது கேட்டு நரேந்திரரின் நண்பர்கள் அச்சம் நீங்கினார்கள். பிறகு நரேந்திரன் மரத்தில் ஏற அவரைப் பின் தொடர்ந்து நரேந்திரனின் நண்பர்கள் அனைவரும் மளமளவென்று மரத்தில் ஏறினார்கள்.

இவ்வாறு பிள்ளைப் பருவத்திலேயே துணிவு மிக்கவராக இருந்தார் விவேகானந்தர்.

ஐந்து வயது நரேந்திரனுக்கு ராமாயணத்தின் மீது இருந்த ஈடுபாடு:-

ஐந்து வயது பாலகனாக இருந்த போதே நரேந்திரர் நிறைந்த அறிவும் மிகுந்த நினைவாற்றலும் பெற்று இருந்தார். வடமொழி இலக்கண நூலான முக்தபோகத்தில் உள்ள சூத்திரங்கள் அனைத்தையும் நரேந்திரர் மனப்பாடம் செய்து விட்டார். எதையும் ஒருமுறை படித்தாலே அவருடைய உள்ளத்தில் பதிந்து விடும்.

வீட்டில் உள்ள பெரியவர்கள் தினமும் நரேந்திரருக்கு சுலோகங்கள், தங்களுடைய முன்னோர்களின் பெயர்கள் சிறிய பாடல்கள் போன்றவற்றைக் கற்றுத் தருவார்கள். ராமாயணப் பாடல்களைத் தினமும் கேட்டு அவற்றையும் நெஞ்சத் தடத்தில் பதிவு செய்து கொண்டார் நரேந்திரர்.

இராமாயண நிகழ்ச்சிகள் நடைபெற்றால் நரேந்திரர் தவறாமல் அங்கே சென்று விடுவார். ஒருமுறை இராமாயண நிகழ்ச்சி ஒன்றுக்கு நரேந்திரர் தனது உறவினர் ஒருவருடன் சென்றார்.

அப்போது இராமயணக் கதை நடைபெறும் இடத்தில் அனுமார் இருப்பார் என்று தாய் கூறியதை அவர் நினைவுக்குக் கொண்டு வந்தார். சுற்று முற்றும் தேடினார். அவர் எதைத் தேடுகிறார் என்று கேட்ட அந்த உறவினர் நரேந்திரரின் சந்தேகத்தை போக்கினார்.

அனுமார் நமது புறக்கங்களுக்குத் தெரியாமல் அமர்ந்து இருப்பார் என்பதை நரேந்திரர் அறிந்து, இராமாயண நிகழ்ச்சியில் ஈடுபட்டார். நிகழ்ச்சியின் இடையில் ராமாயணப் பாடல்களையும் பாடினார்கள். ஒரு பாடலைப் பாடிக் கொண்டு இருக்கும் போது, பாடகர், பாடலின் அடுத்த வரியை மறந்து விட்டார். அந்தப் பாடகரின் நினைவுக்கு அந்தப் பாடல் வரிகள் கடைசி வரையில் வரவே இல்லை.

அப்போது ஆறு வயது கூட நிரம்பாத இளம் நரேந்திரர் எழுந்து நின்று பாடலின் அடுத்த வரியைப் பாடினார். இதைக் கேட்டு சபையில் இருந்தோர் அடைந்த வியப்புக்கு அளவே இல்லை. அந்தப் பாடகருக்கோ மிகுந்த மகிழ்ச்சி. பாடலைத் தொடர்ந்து பாடி முடித்தார். நரேந்திரரின் உறவினருக்குப் பெருமையாக இருந்தது. குழந்தையை அணைத்துக் கொண்டு முத்தமிட்டார்.

இறுதியில் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாடகர், குழந்தை நரேந்திரரை அழைத்து ஆசிர்வதித்து இனிப்பு வழங்கினார்.

நரேந்திரன் மேலை நாட்டு அறிஞரிடம் இருந்து சிறு வயதிலேயே பாராட்டு கடிதம் பெற்ற சம்பவம்:-

வேதாந்தத்தை பரப்பவே இந்தப் பூமியில் அவதாரம் செய்தவர் சுவாமி விவேகானந்தர். அதற்கான வித்து அவருடைய இளமைப் பருவத்திலேயே காணப்பட்டது. அத்துடன் அவரது மனதிலும் வேதாந்தத்தின் சாரம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அப்போது நரேந்திரருக்கு எட்டு வயது. எதையும் ஆழாமாக அறிந்து கொள்ளும் ஆற்றலை அந்த வயதிலேயே நரேந்திரர் பெற்று இருந்தார். அந்த வயதில் அவருடைய உறவினர் ஒருவர் புத்திசாலியாகத் திகழ்ந்த நரேந்திரருக்குப் பல விஷயங்களை கற்பித்தார். அந்த வகையில் காம்ப்டே (COMPTE) என்ற மேலை நாட்டுத் தத்துவ ஞானியின் தத்துவ போதனையையும் நரேந்திரருக்குப் போதித்து உள்ளார்.

இளம் நரேந்திரர் தத்துவ சாஸ்திரத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்பு நரேந்திரர் மேலை நாட்டு ஞானிகளில் சிறந்தவராக விளங்கிய ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவரது நூல்களைப் படித்து அறியும் திறமை பெற்று இருந்தார். ஆனால் ஹெர்பெர்ட் ஸ்பென்சரின் கருத்துக்களை நரேந்திரர் ஏற்கவில்லை. அக்கருத்துக்கள் சரியல்ல என்று கூறி முழு விளக்கங்களுடன் நரேந்திரர் ஹெர்பெர்ட் ஸ்பென்சருக்குக் கடிதம் ஒன்று எழுதினார்.

ஹெர்பர்ட் ஸ்பென்சர் நரேந்திரர் எழுதி இருந்த கடிதத்தை கண்டார். பனிரெண்டு வயதில் இத்தனை தெளிவும் முதிர்ச்சியும் சாத்தியம் தானா? என்ற வியப்பு அவருக்குத் தோன்றியது. தமது சித்தாந்தத்தைப் புரிந்து கொள்பவர்களே அரிதாக இருக்கின்ற போது, அதைப் புரிந்து கொண்டு தவறும் கண்டு பிடிப்பதற்கு ஞானம் வேண்டும் என்று உணர்ந்தார்.

ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஹெர்பெர்ட் ஸ்பென்செர் வாழ்ந்து வந்தார் எனினும் நரேந்திரரின் ஞானச் செழுமையை அவர் துல்லியமாக அறிந்து கொண்டார். சிறுவன் என்று அலட்சியம் கொள்ளாமல் பதில் கடிதமும் உடனுக்குடன் எழுதினார் ஹெர்பெர்ட் ஸ்பென்செர். அந்தக் கடிதத்தில் " தத்துவஞானப் பயிற்சி எளிதாகக் கைவரப் பெறுவாய். மென்மேலும் படித்து மேன்மை அடைவாய்" என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் நரேந்திரருக்கு ஆசி கூறி இருந்தார்.

இவ்வாறாக இளம் வயதிலேயே மேலை நாட்டு ஞானி ஒருவரிடமிருந்து வாழ்த்துக் கடிதம் பெற்ற நிகழ்வு மறக்க முடியாததாக நரேந்திரரின் வாழ்வில் இருந்தது.

நரேந்திரரின் சாமர்த்தியம்

வேல்ஸ் நாட்டின் இளவரசர் ஏழாவது எட்வர்ட் மன்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்த போது, ஆங்கிலேய நாட்டின் போர் கப்பலான 'சிரா பிஸ்' கல்கத்தா துறைமுகத்துக்கு வந்தது. இந்தக் கப்பலைக் காண்பதற்கு நகர மக்கள் பலர் அனுமதிச் சீட்டுப் பெற்றுக் கொண்டார்கள்.

நரேந்திரர் தமது நண்பர்களுடன் கப்பலைக் காண விரும்பினார். அதற்குரிய அனுமதிச் சீட்டைப் பெற ஆங்கிலேய அரசாங்க அலுவலர் ஒருவரின் கையெழுத்துத் தேவை. அதற்காக ஒரு அரசாங்க அலுவலகத்துக்கு சென்றார். ஆனால், அந்த அலுவகத்தில் இருந்த காவல்காரன், பனிரெண்டு வயதுச் சிறுவனாக இருந்த நரேந்திரரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

துணிவும் சமயோசிதமும் நிறைந்த நரேந்திரர் யோசித்தார். அனுமதிச் சீட்டுக்கான கையொப்பம், கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் வழங்கப்படுவதை அறிந்தார். அங்கே செல்ல வேறு வழி இருக்கிறதா என்று கட்டிடத்தை சுற்றி வந்தார்.

கட்டிடத்தின் பின்புறத்தில், அலுவலகத்தில் பணி புரிவோர் செல்வதற்கான படிக்கட்டு ஒன்று இருந்தது. நரேந்திரர் துணிவோடு அதில் சென்று இரண்டாவது தளத்தை அடைந்தார். அங்கே பலர் அனுமதிச் சீட்டு பெறுவதற்கான கையொப்பம் வேண்டி குழுமி இருந்தார்கள். அவர்களுடன் நரேந்திரரும் நின்று கொண்டார். தன்னுடைய முறை வந்ததும் கையோடு கொண்டு சென்று இருந்த விண்ணப்பப் படிவத்தை அதிகாரியின் முன்னே நீட்ட அவரும் அதில் கையெழுத்திட்டார்.

நினைத்ததை நினைத்த வண்ணம் சாதித்துவிட்ட மகிழ்ச்சியுடன், நரேந்திரர் எல்லோரும் இறங்கிச் செல்லும் படியில் சென்று முன்புற வாசலை அடைந்தார்.

அவ்வழியாக வெளியில் வரும் நரேந்திரரைக் கண்டதும் காவல்காரன் திகைத்தான். இவன் எப்படி உள்ளே சென்றான் என்று யோசிக்கும் முன்பே குறும்பு நிறைந்தவரான நரேந்திரர், தனது கையில் இருந்த அனுமதிச் சீட்டு விண்ணப்பத்தில் அந்த ஆங்கிலேயே அதிகாரியின் கையெழுத்தை காட்டி மகிழ்ந்தார்.

ஆனால் அந்த காவல் காரனோ, நரேந்திரனைக் கடிந்து கொள்ள வில்லை. புத்திசாலித்தனமும் குறும்புத்தனமும் சேர்ந்து கோகுல கிருஷ்ணனைப் போல இருக்கும் இவன் விளையாட்டுப் பிள்ளை என்று ரசித்துச் சிரித்துக் கொண்டான்.