நரேந்திரரின் இளமைப் பருவம் (பாகம் இரண்டு)
நரேந்திரர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் கேட்ட அந்த மகத்தான கேள்வி:-
"நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?" என்ற கேள்வியை- பல நாட்களாக, மாதங்களாக தம்முள் கேட்டுக் கொண்டு இருந்தார் நரேந்திரர். இது பற்றி யாரிடம் கேட்டும் சரியான பதில் இல்லை. ஒரு நாள் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்து இதே கேள்வியை கேட்டார் நரேந்திரர்.
அந்தக் கேள்வியைக் கேட்டு ராமகிருஷ்ண பரமஹம்சர், நரேந்திரரை உற்று நோக்கிய பின் மெல்லிய புன்னகையுடன் கூறத் தொடங்கினார்," குழந்தாய்! இறைவனை நான் கண்டிருக்கிறேன். என் எதிரே உன்னைக் காண்பதை விடவும் அகக்கண்ணால் அவரை தெளிவாகவே கண்டிருக்கிறேன். அவரோடு பேசலாம். கேட்கலாம், நீ விரும்பினால் உன்னாலும் கடவுளைக் காண முடியும்" என்றார் குருதேவர். அக்கணத்திலேயே எவரையும் குருவாக ஏற்காத நரேந்திரர் ராமகிருஷ்ண பரமஹம்சரை தனது குருவாக ஏற்றுக் கொண்டார்.
கடவுளைக் கண்டதுண்டா என்று ஒரு நாத்திகக் கேள்வியை கேட்ட நரேந்திரர் உள்ளத்தில் குருதேவரின் அருளால் நம்பிக்கை உண்டாயிற்று. நரேந்திரரின் நெஞ்சில் படர்ந்திருந்த சந்தேகங்கள் அகன்றன. பாசி படர்ந்த குளம் தூய்மையாக மாறியது. இவரே தமது குரு நாதர் என்று தீர்மானித்துவிட்டார் நரேந்திரர்.
பிறகு நரேந்திரர் குரு ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்," மீண்டும் விரைவில் வருவேன்" என்று கூறிச் சென்றார்.
நரேந்திரருக்கு ராமகிருஷ்ண பிரமஹம்சர் தனது ஞானத்தால் காட்டிய புதியதொரு உலகம்:-
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதிலும் சத்தியத்தை கடைபிடிப்பதிலும் நரேந்திரர் மிக உறுதியுடன் இருந்தார். குரு தேவரிடம் மீண்டும் 'விரைவில் வருவேன்' என்று கூறியது அடிக்கடி அவரது நினைவில் தோன்றிக் கொண்டே இருந்தது. ஒரு நாள் தனியாக, நரேந்திரர் தட்சிணேஸ்வரத்துக்குச் சென்றார்.
அவர் குருதேவரின் அறைக்குச் சென்ற போது, குருதேவர் கட்டிலில் அமர்ந்து தன்னில் தான் அமிழ்ந்திருந்தார். ஆயினும் நரேந்திரர் வருவதைக் கண்டு, வரவேற்று அருகில் அமரச் சொன்னார். நரேந்திரரும் அவ்வாரே அமர்ந்தார். அப்போது நரேந்திரர் குருத்தேவரை நோக்கியவாறு இருந்தார். குருத்தேவர் தமக்குள்ளாகவே பேசிக் கொண்டு இருப்பதை கண்ணுற்ற நரேந்திரர் அவர் என்ன செய்யப் போகிறாரோ என்று எண்ணினார். பிறகு அவரை பித்தர் என்றும் சந்தேகித்தார்.
குருதேவர், நரேந்திரரை நெருங்கி வந்து, தனது வலது பாதத்தை நரேந்திரர் மீது வைத்தார். இச்செய்கை முதலில் நரேந்திரரை திடுக்கிடச் செய்தது. மறுகணமே அந்த அற்புதம் நிகழ்ந்தது.
தனது கண் முன்னாள் இருந்தது அனைத்தும் கரைந்து போய் வெட்ட வெளியாக இருப்பதை நரேந்திரர் உணர்ந்தார். பேரச்சம் அவரைச் சூழ்ந்து கொண்டது.
"என்னை என்ன செய்கிறீர்கள்?" என்று நரந்திரர் வாய்விட்டே அலறினார். ஆனால் குருத்தேவர் களிப்பு மிகுதியால் சிரித்துக் கொண்டே இருந்தார்.
பிறகு நரேந்திரன் பயப்படுகிறான்... இன்று இவ்வளவு போதும் என்று எண்ணியபடி குருத்தேவர் நரேந்திரரின் மேல் இருந்து தனது பாதத்தை எடுத்துக் கொண்டார். அக்கணமே நரேந்திரர் தனது பழைய இயல்பான நிலையை அடைந்தார். தாம் இருக்கும் அறை அதிலுள்ள பொருட்கள், குருத்தேவர் உட்பட எல்லாவற்றையும் தனது புறக்கண்ணால் பார்த்தார்.
தாம் மன வலிமையும் உடல் வலிமையும் உடையவர் என்ற மேலான எண்ணம் நரேந்திரருக்கு இருந்தது. இவற்றை ஒரே கணத்தில் ஒன்றுமே இல்லாமல் செய்து விட்ட குருத்தேவரின் தவ வலிமையை – உள்ளொளியை அறிந்து கொண்டார். குருதேவரை பித்தர் என்று எண்ணி இருந்த தனது எண்ணத்தை நரேந்திரர் அன்று மாற்றிக் கொண்டார். இவ்வாறு ராமகிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரனுக்கு புதியதொரு உலகத்தை காண்பித்து பிரமிப்பில் அவரை ஆழ்த்தினார்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரன் மீது கொண்ட அன்பின் எல்லை
ஒரு நாள் நரேந்திரர் ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு குருதேவரைக் காணச் சென்றார். அன்று அவர் விளக்கப் பட்ட உணவு வகை ஒன்றைச் சாப்பிட்டு இருந்தார். அதை உண்டதால் குருதேவர் தம்மைத் தொடுவதை விரும்ப மாட்டார் என்று நரேந்திரர் எண்ணினார். சத்தியத்தின் வழியில் நடக்கும் நரேந்திரரும் உண்மையை மறைக்காமல் குருதேவரிடம் உள்ளதை கூறினார்.
ஆனால் குருதேவர் அதைப் பெரிதாக நினைக்க வில்லை. நரேந்திரர் பன்றி இறைச்சி, அல்லது மாட்டிறைச்சி என எதை உண்டால் தான் என்ன, அதனால் தவறேதும் நேராது. ஏனென்றால் நரேந்திரர் மனத்தை இறைவனிடம் நிலை நிறுத்தியவர். அத்தகைய ஒருவர் எதை உண்டாலும் அது வேள்வியில் நிவேதனம் செய்யப்படும் பிரசாதத்திற்கு நிகராகிவிடும். ஆனால் உலகியல் ஆசைகளில் மூழ்கியிருக்கும் வேறு எவரேனும் சைவ உணவை உண்டாலும் அது இறைச்சிக்கு ஒப்பாகும் என்று குருதேவர் எடுத்துரைத்தார்.
நரேந்திரரிடம் குருதேவர் வைத்திருந்த அன்பு எல்லையற்றதாக இருந்தது. மார்வாரி பக்தர்கள், குருதேவரை தரிசிக்க வரும்போதெல்லாம் பிஸ்தா, பாதாம் போன்றவற்றை காணிக்கையாக அளிப்பதுண்டு. குருதேவர் அவற்றைக் கை விரல் கொண்டும் தொடமாட்டார். சாதுக்களுக்கு கொடுக்கும் காணிக்கையில் கூட, கொடுப்பவரின் ஆசைகளும் ஒட்டிக் கொண்டு இருக்கும் என்பார் குருதேவர்.
ஆனால் இந்த காணிக்கப் பொருட்களை நரேந்திரருக்குக் கொடுப்பார். இவற்றை உண்பதால் நரேந்திரருக்கு எந்தத் தீங்கும் வராது. அவருடைய சித்தம் இறைவனிடம் உள்ளது. அவரைக் கெடுதல் நெருங்காது என்பது குருதேவரின் எண்ணம்.
குருதேவரின் அன்பில் நரேந்திரர் திளைத்து இருந்தார். நரேந்திரரின் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டு இருந்தார் குருதேவர், அந்த அன்பும் நம்பிக்கையும் நரேந்திரரைக் காத்தருள் புரிந்தது.
நரேந்திரரின் தெய்வீக மனநிலை காரணமாக வேள்வியில் எதுவும் நிவேதனமாகும் என்பதே குருதேவர் எண்ணம்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரருக்கு அளித்த ஸ்பரிச தீட்சை
நரேந்திரர் தட்சிணேஸ்வரத்துக்கு வருகை புரியும் போதெல்லாம் குருதேவர் அவருக்கு உயர்ந்த தத்துவங்களை போதிப்பார். ஆங்கிலக் கல்வியும் விஞ்ஞான அறிவும் பெற்றிருந்த நரேந்திரரால் சில தத்துவங்களை ஏற்க முடியாமல் இருந்தது.
குருதேவர் ஒருமுறை ஜீவாத்மா – பரமாத்மா இரண்டும் ஒன்றே என்ற தத்துவத்தைப் பற்றி விளக்கினார். ஆனால் நரேந்திரரின் மனம் அதை ஏற்க மறுத்தது. குருதேவரின் அறையில் இருந்து வெளியில் வந்து விட்டார்.
வெளியில் நின்று இருந்த நண்பர் ஹாஸ்ராவிடம் அத்வைத தத்துவத்தைப் பற்றியும் அதை தம்மால் ஏற்க முடியவில்லை என்பதையும் கூறினார். மேலும் அங்கிருந்த சில ஜடப் பொருள்களைக் காட்டி " இவையும் கடவுள், நானும் கடவுள், நீயும் கடவுள் என்பது சரியான வாதமாக எனக்குத் தோன்றவில்லை" என்றார். அத்துடன் நில்லாமல் கேலியாகச் சிரித்தார்.
நரேந்திரரின் சிரிப்பொலியைக் கேட்டு அறைக்குள் இருந்த குருதேவர் வெளியில் வந்தார். அத்வைதத்திலேயே ஆழ்ந்து அமிழ்ந்து எல்லாவற்றையும் பிரம்மமாகக் காணும் நிலையை அடைந்தவர் குருதேவர். நரேந்திரரை அணுகி எதற்காக சிரிக்கிறாய் என்று கேட்டு விட்டு, அவரைத் தொட்டார். அந்த ஸ்பரிசம் – அதாவது அந்த கண நேரத் தொடு உணர்வினால் எல்லாமே இறையுருவமாக நரேந்திரருக்கு தோன்றியது.
உள்ளத்தில் ஒரு தெளிவு பிறந்தது. ஜடப் பொருளும் கடவுள் நானும் கடவுளா என்று கேட்டு கேலியாகச் சிரித்த நரேந்திரர், எல்லாம் கடவுளே என்ற உணர்வு நிலையை எய்தினார்.
நடந்து செல்லும் போது எதிர்பட்டவை அனைத்தும் கடவுள் வடிவமே என்ற எண்ணம் நரேந்திரரின் உள்ளத்தில் உதித்தது. உண்ணும் உணவு, அதை அளித்தவர், உண்பவர் எல்லாமே, எல்லோருமே கடவுள் வடிவமே என்ற தெளிந்த நிலையில் சில தினங்கள் நரேந்திரர் வாழ்ந்து இருந்தார்.
இத்தகைய ஆன்மீக அனுபவத்தை அவருக்கு குருதேவர் தமது ஸ்பரிச தீட்சை மூலமாக வழங்கினார். அந்த அனுபவத்திற்கு பின்பு நரேந்திரர் அத்வைத தத்துவத்தை ஏற்றுக் கொண்டார்.
நரேந்திரர் குருவை சோதித்தல் :-
சத்தியத்தையே வாழ்க்கையில் நெறியாகக் கடைப்பிடித்து வாழ்ந்தவர் நரேந்திரர். ராமகிருஷ்ண பரமஹம்சரைக் குருவாக ஏற்பதற்கு முன்பு அவரைப் பலவிதங்களில் நரேந்திரர் சோதித்து அறிந்தார்.
நரேந்திரரின் உள்ளத்தை நன்கு அறிந்திருந்த குரு தேவரும், இளைஞரான நரேந்திரரின் சோதனைகளுக்கு எல்லாம் தம்மை ஆட்படுத்திக் கொண்டார். அதிலே அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டதே இல்லை. மாறாக, மன மகிழ்ச்சியே அவருக்கு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டவர்களாக இருந்தார்கள். எனினும் நரேந்திரர் குருதேவரின் அருளுரை அனைத்தையும் அப்படியே ஏற்பதற்கு முன்பு சோதித்து பின்பு ஏற்கலாம் என்பதில் தெளிவாகவே இருந்தார்.
குருதேவர், அடிக்கடி பொன்னும் பொருளும் தன்னால் ஏற்க இயலாதது என்றும், அது தமது மேனியில் பட்டாலே உடல் அதனை விரும்பாமல் துடிக்கும் நெருப்பைத் தொட்டது போல ஆகிவிடுவதாகவும் கூறுவார். இதனைச் சோதிக்க வேண்டுமென்று நரேந்திரர் விரும்பினார்.
அப்படித்தான் ஒரு நாள் தட்சிணேஸ்வரத்துக்கு வந்த போது குருநாதர் அங்கே இல்லை என்பதை நரேந்திரர் அறிந்து கொண்டார். இதுவே தகுந்த தருணம் என்று எண்ணினார். தம்மிடம் இருந்த நாணயம் ஒன்றை, குருதேவரின் அறைக்குச் சென்று எவரும் அறியாத வண்ணம், குருதேவரின் படுக்கையின் அடிப்புறத்தில் வைத்தார்.
பிறகு குருதேவரின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தார். சற்று நேரத்தில் குருதேவர் தமது அறைக்கு வந்தார். நரேந்திரர் வந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி ததும்ப பேசியபடியே கட்டிலின் மீது அமர்ந்தார் பரமஹம்சர். ஆனால் அடுத்த கணமே நெருப்பின் மீது அமர்ந்தது போன்று துடித்து எழுந்தார்.
குருதேவரின் செயலைக் கண்டு நரேந்திரர் வியந்து நிற்கும்போது, பணியால் ஒருவன், குருதேவரின் படுக்கையை உதறினான். படுக்கையின் அடியில் இருந்த நாணயத்தைப் பார்த்தார் குருதேவர். பிறகு நரேந்திரரையும் புன் சிரிப்போடு பார்த்தார்.
நரேந்திரர் எதுவும் பேச இயலாததால் குருதேவரின் அறையில் இருந்து வெளியே சென்றார். நரேந்திரர் தம்மைச் சோதித்து அறியவே இவ்வாறு செய்து இருக்கிறார் என்பது குருதேவருக்கு விளங்கியது. அவருடைய அருள் வதனத்திலே புன்னகை அரும்பியது.
நரேந்திரர் தனது இளவயதிலேயே சந்நியாசத்தின் மீது கொண்ட காதல்:-
சந்நியாசிகளைப் பார்த்தால் நரேந்திரருக்கு சந்தோஷம் ஏற்படும். இளம் பாலகனாக இருக்கும் பொழுதே சந்நியாசிகளுக்கு வீட்டில் உள்ளதை எடுத்துக் கொடுத்து விடுவார். நரேந்திரரின் தந்தை வழிப் பாட்டனார் துர்கா சரணர் துறவியாகப் போனவர். அவருடைய குணம் பேரனுக்கு அமைந்தது போலும் என்று தான் எல்லோரும் நினைத்தனர்.
ஆனால் தனது வாலிப வயதிலும் நரேந்திரர் ஒரு துறவியைப் போலவே பற்று இல்லாமல் இருந்தார். அதுவும் வாலிப வயதில் நரேந்திரர் துறவறம் பற்றியே அதிகம் பேசுவார். நண்பர்களுக்கு நரேந்திரர், தட்சிணேஸ்வரத்துக்கு அடிக்கடி செல்வத்தால் தான் இவ்வாறு பேசுகிறார் என்பது புரிந்தது. நரேந்திரரை இக வாழ்வில் ஈடுபடுத்துவதற்கான முயற்சியில் முனைந்தனர்.
நரேந்திரர் கூர்ந்த மதி படைத்தவர்; நல்ல வாய்ப்பும் வசதியும் உள்ள குடும்பத்தில் தோன்றியவர். தந்தை விசுவநாத தத்தர். நரேந்திரரை வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராகச் சேர்த்து இருந்தார். திருமணத்துக்கும் ஏற்பாடுகள் செய்யலானார்.
நரேந்திரர் எதிர்காலத் திட்டம் எதுவும் இல்லாமல் 'சித்தம் போக்கு சிவன் போக்கு' என்பது போல இருந்தார். நண்பர்கள் நரேந்திரருக்குப் புத்திமதி கூறினார்கள்.
படிப்பும் துடிப்பும் மிகுந்தவராக இருக்கும் நரேந்திரருக்கு உலக வாழ்வில் கிடைத்தற்கரிய வாய்ப்புகள் மிக எளிதாகக் கிடைக்கும். அவற்றை ஏற்று, மணம் புரிந்து கொண்டு சுகவாழ்வு வாழ்வதை விட்டு விட்டு, துறவு என்று பிதற்ற வேண்டாம் என நண்பர்கள் அறிவுரை கூறினார்கள்.
ஆனால் இவை எதுவும் நரேந்திரரின் திடமான சித்தத்தை அசைக்கவில்லை. உலக வாழ்வு என்ற பந்தத்தில் சிக்கிக் கொண்டு உயர்ந்த பேரின்பத்தை அளிக்க வல்ல தெய்வானுபூதியை அவர் இழக்க விரும்பவில்லை.
நரேந்திரருக்கு தான் ஏன் தட்சிணேஸ்வரத்துக்குப் போகிறோம், ஏன் குருதேவரின் அருள் பொழியும் திருமுகத்தை தரிசிக்க விழைகிறோம் என்பது முதலில் புதிராகவே இருந்தது. பின்பு தான் அவருக்கு ஒரு தெளிவு பிறந்தது. அதாவது தனக்குரிய பாதையைக் காட்டவல்லவர் இவர் தான் என்று நரேந்திரர் உள்ளுணர்வு – துறவை நாடிய மனம் – இனம் காட்டியது.
