நானும் நரேனும் வேறில்லை ராமகிருஷ்ண பரமஹம்சர் விளக்கிய முறை

நானும் நரேனும் வேறில்லை ராமகிருஷ்ண பரமஹம்சர் விளக்கிய முறை

bookmark


குருதேவர் தம்முடைய பேரன்பினால் நரேந்திரரை ஆட்கொண்டு இருந்தார். குருதேவர் நரேந்திரரின் மடியில் சாய்ந்தவாறே இதுவும் நானே அதுவும் நானே என்று தமது உடம்பையும் நரேந்திரர் உடம்பையும் தொட்டுக் கூறினார்.

தண்ணீரைத் தடியால் பிரித்தால் பிரிந்தது போலத் தோன்றுமே தவிர, மீண்டும் ஒன்றாகிவிடும். அதுபோலத் தான் நாங்கள் இருவரும் என்று குருதேவர் மொழிந்தார்.

திடுமென்று எழுந்திருந்து ஹூக்கா பிடிக்க வேண்டும் என்றார் குருதேவர். ஹுக்கா கொண்டு வந்ததும் நரேந்திரர் கையில் வைத்திருக்க குருதேவர் புகை பிடித்தார். பிறகு நரேந்திரரிடம் ஹூக்காவை அளித்து " நீ இப்போது புகை பிடி" என்றார்.

நரேந்திரர் குருதேவரின் மொழியை மீற முடியாமல் புகை பிடித்தார். ஹூக்காவை குருதேவர் கையில் பற்றி இருந்தார். ஆகையால் ஓரிருமுறை இழுத்து விட்டு நரேந்திரர் நிறுத்தினார்.

உடனே தாம் புகை பிடிக்க வேண்டுமென்று மீண்டும் குருதேவர் ஹூக்காவின் குழலைத் தன்புறம் இழுத்துக் கொண்டார். அதைக் கண்டதும் நரேந்திரரும் பிறரும் பதறிப் போனார்கள். குருதேவரிடம் "புகைக் குழலைக் கழுவி விட்டுப் பிடியுங்கள்" என்று சொன்னார்கள். அதனை குருதேவர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. "வேறுபாடு எதுவும் எனக்கு இல்லை" என்றார்.

எச்சிலான புகைக் குழலில் புகைபிடித்தார் குரு தேவர்.

பொதுவாக குருதேவர், தமது உணவில் ஒரு பகுதியை வேறு எவருக்கேனும் கொடுத்துவிட்டாலே மீதி உள்ளதை எச்சில் என்று கூறி உண்ண மறுத்துவிடுவார். அத்தகைய கட்டுப்பாடு உடையவர். நரேந்திரர் விஷயத்தில் தமது நியதிகளைத் தளர்த்திக் கொண்டார்.

ஆக இருவரும் ஒருவர் தான் என்ற எண்ணத்தை இந்தச் செயல் வழியாக அனைவருக்கும் உணர்த்தினார் குருதேவர்.

நரேந்திரரை சோதித்த விதி

இருபத்தி ஒரு வயது நிறைந்த நரேந்திரரின் தலையில் குடும்பப் பொறுப்பு முழுவதும் வந்து இறங்கியது. ஆம். அவருடைய தந்தை விசுவநாத தத்தர் காலமானார். தாய் புவனேஸ்வரி, இரண்டு மூத்த சகோதரிகள் இவர்களைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் நரேந்திரர் இருந்தார்.

நரேந்திரரின் தந்தை இறந்த பிறகு தான் அனைவருக்கும் குடும்பத்தின் நிலை புரிந்தது. வளமான குடும்பம், வறுமையின் பிடியில் சிக்கியது. நரேந்திரர் வேலை தேடலானார்.

இறை பக்தியில் திளைத்த தாய் புவனேஸ்வரியே, இறைவனிடம் நம்பிக்கை இழந்தார். நரேந்திரரின் வாழ்வில் பசியும் பட்டினியும் சோர்வும் சூழ்ந்தது.

துயரம் ஒன்று வந்தால் மற்றொன்று தொடர்ந்து வரும் என்பது போல அதுவரை உறவாடியவர்கள், நரேந்திரர் மீது அவதூறுகளை அள்ளி வீசினார்கள். நரேந்திரர் தகாத நெறிகளில் செல்கிறார் என்றும் நாத்திகராகி விட்டார் என்றும் செய்திகளை அவர் காதுபடவே பேசத் தொடங்கினார்கள்.

அத்துடன் நில்லாமல் ஒரு சிலர் தட்சிணேஸ்வரத்துக்குச் சென்று குருதேவரிடம் கூட அப்படியே தான் கூறினார்கள்.

நரேந்திரர் தகாத வழிகளில் செல்கிறார், தீயவற்றை செய்கிறார் என்று கூறக் கேட்டதும் அவர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார் என்ற எண்ணம் கொண்ட நரேந்திரர் கவலை மிகக் கொண்டார்.

ஆனால் குருதேவருக்கு நரேந்திரர் மீது இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் அன்பும் அவருடைய வாய் மொழியில் வெளிப்பட்டது. உடனுக்குடன் நரேந்திரர் மீது அவதூறு கூறிய அனைவரையும் கடிந்து கொண்டார். அத்துடன் குருதேவர் அவர்களிடம்," முட்டாள்களே, உங்கள் பிதற்று மொழிகளை நிறுத்துங்கள். நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கவே முடியாது என்று எனக்கு காளிமாதா கூறி விட்டாள். அதற்கும் மேலே வேறென்ன சான்று வேண்டும். போங்கள், இனி ஒருமுறை நரேந்திரன் மீது அவதூறு கூறினால், அவர்கள் என் எதிரில் வர வேண்டாம்" என்றார்.

குருதேவர் இவ்வாறு கூறிய செய்தியும் நரேந்திரருக்கு எட்டியது. குருதேவரின் தெய்வீக சக்தியையும் பெருமையையும் நரேந்திரர் உணர்ந்தார். தன்னுடைய தூய வாழ்வு உலகின் பார்வையில் தென்படாவிட்டாலும் குருதேவருக்கு புலப்பட்டதே அவருக்கு மன நிறைவைத் தந்தது.

நரேந்திரர் காளிதேவியிடம் கேட்ட வரம் :-

வறுமையில் உழன்று கொண்டு இருந்த காலத்தில் நரேந்திரருக்கு ஒருநாள் திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. குருதேவர் கடவுளை நேரில் காண்பதாகச் சொல்கிறார். அவரிடம் சென்று குடும்ப வறுமையை நீக்குவதற்கு கடவுளிடம் தமக்காக பிரார்த்தனை செய்யச் சொல்லலாமே என்று தோன்றியது.

உடனே நரேந்திரர் தட்சிணேஸ்வரத்துக்கு விரைந்தார். குருதேவரிடம் வந்த நோக்கத்தைப் பற்றிக் கூறினார் நரேந்திரர். ஆனால் குருதேவரோ, நரேந்திரரையே அம்பிகையிடம் சென்று வேண்டிக் கொள்ளலாமே என்றார். ஆனால் நரேந்திரர் தமக்கு அம்பிகை நேரில் தரிசனம் தரவில்லையே! பின், தான் எவ்வாறு வேண்டுவது என்றார்.

"நரேன், நான் பலமுறை பிரார்த்தித்து விட்டேன். ஆனால் நீ அவளை ஒப்புக்கொள்ளாததால் அவளும் அருள்புரிய மறுக்கிறாள். இன்று மீண்டும் நீ அவளை ஒப்புக் கொண்டு பிரார்த்தனை செய். உன் துயரம் எல்லாம் நெருப்பிலிட்ட பஞ்சு போலாகிவிடும்," என்று கனிந்த குரலில் கூறினார் குருதேவர்.

அன்று இரவு நேரம். பூஜை முடிந்த பின்பு நரேந்திரர் அம்பிகையின் முன் மண்டியிட்டு அமர்ந்து தொழுதார், அழுதார். உயிரும் உணர்வும் உள்ள தாயாகத் தோன்றினாள் அன்னை. அவளுடைய ஞானத்தையும் பக்தியையும் தமக்கு அளிக்குமாறு இறைஞ்சினார். பின்பு குருதேவரின் இருப்பிடம் வந்தார்.

குருதேவர் இளநகையுடன் " அம்பிகையுடன் பொருள் வேண்டினாயா?" என்றார். அப்போது தான் நரேந்திரருக்கு தான் பொருளை வேண்டவில்லை என்பது புரிந்தது. "மீண்டும் செல்" என்று குருதேவர் ஆணையிட நரேந்திரர் அம்பிகையின் முன் சென்றார்.

இரண்டாவது முறையும் நரேந்திரர் அம்பிகையை தரிசித்தும் இகவுலக நினைவினை இழந்தவராக விவேகத்தை அருளுமாறு வேண்டிக் கொண்டு திரும்பினார். மூன்றாவது முறையும் இவ்வாறே நிகழ்ந்தது.

பேரருள் புரிகின்ற தெய்வத்தின் திருமுன்பு நின்று கேவலமான பொருளை வேண்டுவதா என்ற எண்ணமே நரேந்திரரின் நெஞ்சில் நிறைந்து இருந்தது.

குருதேவரின் அருளினால் தான், தம்முடைய உள்ளமானது உயர்ந்த நிலையை விட்டுத் தாழ்ந்த நிலையை அடையாமல் இருக்கிறது என்பதை நரேந்திரர் உணர்ந்து மெய் சிலிர்த்தார்.

நரேந்திரருக்காக யாசகம் கேட்ட ராமகிருஷ்ண பரமஹம்சர் :-

வறுமையின் பிடியில் நரேந்திரரின் குடும்பம் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. அவர்களுடைய வறுமை நீங்க வேண்டுமென்று ராமகிருஷ்ணர் சிந்தித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது குருதேவரை தரிசிப்பதற்காக செல்வந்தராக இருந்த பக்தர் ஒருவர் தட்சிணேஸ்வரத்துக்கு வந்தார். அப்போது குருதேவருடன் நரேந்திரரும் இருந்தார்.

செல்வந்தருடன் பேசும் பொழுது, "இதோ இருக்கிறானே, இவனுடைய தந்தை காலமாகி விட்டார். இவனுடைய தாயும் சகோதரிகளும் வறுமையில் வாடுகிறார்கள். உங்களைப் போன்ற பணம் படைத்தவர்கள் உதவி செய்யலாம் அல்லவா?" என்று கூறினார்.

அவர் பேசியதைக் கேட்டு நரேந்திரருக்கு மிகுந்த அவமான உணர்ச்சி ஏற்பட்டது. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவர் அமர்ந்து இருந்தார்.

செல்வந்தர் சிறிது நேரத்தில் அவ்விடத்தில் இருந்து கிளம்பிச் சென்றார். குருதேவரின் அறையில் நரேந்திரரைத் தவிர வேறு எவரும் இல்லை. நரேந்திரர் அடக்கி வைத்திருந்த சினம் பொங்க குருதேவரிடம் வார்த்தைகளைக் கொட்டினார்.

"ஊர் பேர் தெரியாதவர்களிடமெல்லாம் எங்கள் குடும்பத்து வறுமையைப் போக்குங்கள் என்று எதற்காகச் சொல்கிறீர்கள்?" என்று சற்று கடுமையாகவே பேசினார் நரேந்திரர்.

ஆனால் குருதேவர், நரேந்திரரின் வார்த்தைகளில் இருந்த வெம்மையைத் தணிவிப்பது போல அன்பின் குளிர்ச்சியுடன் பேசினார். அருமைக் குழந்தையின் கோபம் தாய்க்கு இன்பமல்லவா?

"நரேன், உனக்காக நான் எங்கே வேண்டுமானாலும் சென்று கையேந்துவதற்க்குத் தயாராக இருக்கிறேன்" என்று கூறி குருதேவர் கண்ணீர் சொரிந்தார். அப்போது குருதேவரின் தூய அன்புக்கு நரேந்திரர் அடிமையாகிப் போனார். தாய்மையின் கனிவை குருதேவரிடம் கண்டு நெக்குருகினார். தனக்காக பிச்சை எடுக்கவும் தயாராக இருந்த தாயநிதியான குருதேவரிடம் சரணம் அடைந்தார் நரேந்திரர்.

நரேந்திரருக்கு வந்த லௌகீக சோதனை:-

நரேந்திரருக்கு, செல்வக் குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் சிலர் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் நரேந்திரரை அழைத்துக் கொண்டு நகரில் உலா வந்தார்கள். பிறகு ஒரு பெரிய மாளிகையில் நடைபெற்ற விருந்திற்கு நரேந்திரரை அழைத்துச் சென்றார்கள்.

விருந்துண்டார்கள். பலவிதமான கேளிக்கைகள் அங்கே நடைபெற்றன. பாடுவதும் ஆடுவதுமாக எல்லோரும் அதில் ஈடுபட்டனர். ஆனால் நரேந்திரருக்கு இவை அனைத்தும் சலிப்பைத் தந்தன. அவர் நண்பர்களிடம் கூறிவிட்டு ஓர் அறைக்குச் சென்று படுத்திருந்தார்.

நண்பர்கள் ஒரு நடனப் பெண்ணை நரேந்திரர் இருக்கும் இடத்திற்கு அனுப்பினார்கள். அப்பெண்ணைக் கண்டதும் நரேந்திரர் எழுந்து அமர்ந்தார். அவளை பெருமைக்குரிய தாயாகக் குருதி அன்பாகப் பேசினார். அன்பான மொழிகளைக் கேட்டு அறிந்திராத அப்பெண், தனது உள்ளத்தில் தேங்கிக் கிடந்த துயரத்தை எல்லாம் அவரிடம் கூறி முடித்தாள். நரேந்திரர் அந்த நடன மாதுவிடம் அனுதாபம் கொண்டு ஆறுதல் மொழிகளைக் கூறி அவளைத் தேற்றினார்.

அதைக் கேட்டு அப்பெண், அவரைத் தவறாகக் கருதி தான் வந்த நோக்கத்தை நரேந்திரரிடம் கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்டதும் நரேந்திரர் திடுக்குற்று எழுந்தார். குருதேவரும் காளி மாதாவும் அவர் முன்னே தோன்றினார்கள். நரேந்திரர் நடுக்கத்துடன், "தாயே, நீ வாழும் இந்த வாழ்வு சரியானதல்ல. உன் வாழ்வு நல்ல விதமாக அமைய வேண்டுமென்று நான் அம்பிகையை வேண்டுவேன்," என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

பெண்களெல்லாம் தாய்மையின் அம்சமாகவே நரேந்திரர் கருதி இருந்தார். குருதேவரின் சோதனை இதுவோ என்று எண்ணமிட்டபடியே நண்பர்களிடம் விடை பெறாமலே சென்றார்.

நடன மாது, நரேந்திரர் கண்களில் படும் போதே குரு தேவரும் காளிமாதாவும் அருகில் தோன்றி அற்புதம் விளைத்த காட்சி விந்தையாகத் தோன்றியது.

நரேந்திரருக்கு குரு தேவர் அளித்த விளக்கம் :-

மனோ மோகன், நித்திய கோபால் போன்ற சீடர்கள் குரு தேவரிடம் பயின்று வந்தார்கள். அவர்களுடன் நரேந்திரரும் இருந்தார்.

குருதேவர் அவர்களுக்கு உபதேசம் செய்யும் பொழுது பகவானின் திருநாமத்தை கூறியதும் மனோ மோகனும் நித்திய கோபாலும் பரவசமெய்தி உணர்வு இழந்து கீழே சரிந்து விடுவார்கள். ஆனால் பகவான் நாமாவைக் கேட்ட பின்பும் நரேந்திரர் சுய உணர்வு உடனேயே அமர்ந்து இருப்பார்.

இதைக் குறித்து நரேந்திரருக்கு மனம் வருத்தமுற்றது. தமக்கு இன்னும் பரவசநிலை கிட்டவில்லையே என்று ஏங்கி, அதனை குருநாதரிடமே கூறிவிட்டார். குருநாதர் நரேந்திரரின் கலக்கத்தைப் போக்க விரும்பினார்.

பகவானின் நாமத்தைக் கேட்டதும் சீடர்களில் சிலர் மயங்கி விழுந்ததால் அவர்கள் சாதகர்கள் என்று எண்ணி விட வேண்டாம் என்று உரைத்தார். மேலும் நரேந்திரருக்கு விளக்குவதற்காக சிறியதொரு உதாரணத்தையும் கூறினார்.

"ஒரு சிறிய குட்டை இருக்கிறது. யானை அதற்குள் இறங்கினால் குட்டை குழம்பிவிடும். ஆனால் கங்கை நதியில் யானை இறங்கினால் கங்கை நதி குழம்பிப் போகிறதா? இல்லையே. நரேன், இவர்கள் குட்டைக்கு ஒப்பானவர்கள். பராசக்தியின் துளி அம்சம் கூட இவர்களை மயக்கிவிடுகிறது. ஆனால் நீ எதையும் தாங்கும் சக்தி படைத்தவன். கங்கை நதியைப் போன்றவன். உன்னை எந்த சக்தியும் மயக்கமடையச் செய்யாது" என்றார்.

இவ்வாறு குருதேவர் கூறியதைக் கேட்ட பின்பு நரேந்திரரின் உள்ளத்தில் இருந்த குறை தீர்ந்தது.

குருதேவரின் புகழ் மொழியில் நரேந்திரரின் ஆற்றல் மிகுந்தது. நாள் தோறும் வளர்ந்தது. பெருகியது. உலகையே ஆன்மீகத்தின்பால் திசை திருப்புமளவு ஆற்றலைக் குரு தேவரின் மொழிகளால் நரேந்திரர் அன்றைய நாளில் பெற்றார்.

சிவராத்திரி அன்று நடந்த சம்பவம்:-

அன்றைய தினம் சிவராத்திரி... காசிப்பூரில் குருதேவர் ராம கிருஷ்ண பரமஹம்சர் நோயுற்றுப் படுத்துக் கொண்டு இருந்தார். சீடர்கள் அனைவரும் அன்று உபவாசம் இருந்து இரவு முழுவதும் பூஜை செய்தார்கள்.

சிறு வயது முதலே சிவபெருமானை பூஜித்து வந்தவர் நரேந்திரர். குருதேவரும் சிவாம்சம் நிறைந்தவர் என்று நரேந்திரரை அடிக்கடி குறிப்பிடுவார். சிவராத்திரியன்று தம்முள் சிவம் எனும் பரம்பொருள் வியாபித்து இருப்பதாக நரேந்திரர் உணர்ந்தார். அதனை சோதிக்க வேண்டும் என்று விரும்பினார்.

காளி என்ற சீடரை அழைத்து, தாம் தியானத்தில் ஆழ்ந்த பின்பு தம்மைத் தொடுமாறு கூறினார். நரேந்திரர் பிறகு தியானத்தில் ஆழ்ந்தார். சிறிது நேரம் சென்ற பின்பு காளி நரேந்திரரின் காலைத் தொட்டார். தியானம் கலைந்ததும் நரேந்திரர் காளியைக் கேட்டார்.

"மின்சாரத்தை தீண்டியது போல அதிர்வு ஏற்பட்டது. என் கை நடுங்கியது" என்றார் காளி. நரேந்திரர் இதைக் கேட்டு மன நிறைவெய்தினார். இவரைத் தொட்டதால் காளி எளிதில் தியானத்தில் ஆழ்ந்தார்.

பூஜை, தியானம் அனைத்தும் முடிந்த பின்பு குரு தேவரை தரிசிக்க நரேந்திரர் அவருடைய அறைக்குச் சென்றார். அறைக்குள் புகும் போதே குருதேவர் நரேந்திரரைக் கண்டிப்பது போலப் பேசினார்.

"ஆன்மீக அனுபவங்களையும் உணர்வுகளையும் உன்னுள் சேமித்து வைத்துக் கொள்வதற்கு முன்பாகவே அதனை செலவு செய்ய ஆரம்பித்துவிட்டாய். இனி அவ்வாறு செய்யாதே!" என்று பேச்சை தொடங்கி பிற்பாடு கனிவான குரலில் அறிவுரையும் கூறி முடித்தார்.

தோட்டத்தில் நடந்தது குருதேவருக்கு எப்படித் தெரிந்தது என்பது நரேந்திரருக்கு வியப்பை தந்தது. தம்மை உள்ளும் புறமும் அறிந்த அவரறியாமல் இனி எதையும் செய்வதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டார். குருதேவரின் அறிவுரை அவரது உள்ளத்தில் ஆழ வேரூன்றியது.

ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது சக்திகள் அனைத்தையும் நரேந்திரருக்கு வழங்குதல்:-

குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் தமது இறுதி நாட்களில் நரேந்திரருக்கு உபதேசங்கள் செய்தவண்ணம் இருந்தார். ஒரு நாள் நரேந்திரரை தமதருகே அமரச் செய்தார். சீடரின் கண்களையே உற்று நோக்கியவாறே குருதேவர் சமாதி நிலையில் ஆழ்ந்து போனார். அப்போது விவரிக்க இயலாத தெய்வீக சக்தி ஒன்று தம் உடலில் பாய்ந்து பரவுவதைப் போல நரேந்திரர் உணர்ந்தார்.

குருதேவரும் சீடரும் ஒருவர் உணர்விலே மற்றவர் கரைந்து கொண்டு இருந்தார்கள். பிரபஞ்ச வெளியில் இருவருமே ஒன்றாகக் கலந்தது போன்ற உணர்வு நிலை.

வெகு நேரம் ஆயிற்று. நரேந்திரர் கண் மலர்ந்து தம்மருகே இருந்த குருதேவரைப் பார்த்தார்.

குருதேவரின் மெலிந்த தேகம் துயரத்தால் ஆடிக் கொண்டு இருந்தது. கண்களில் இருந்து கண்ணீர்ப் பெருக்கு கரை புரண்டு ஓடியது.

நரேந்திரர் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தார். குரு தேவர் கண்ணீர் விடுவதற்கான காரணத்தைக் கேட்டார்.

"நரேன். இப்போது என்னிடம் எதுவுமே இல்லை. நான் பக்கிரியாக இருக்கிறேன். இது நாள் வரை நான் என்னிடத்தில் சேர்த்து வைத்திருந்ததனைத்தையும் இப்போது உனக்கு வழங்கிவிட்டேன். என்னுடைய சக்தி இனி உன்னிடத்தில் நிலைத்து இருக்கும். அதனைக் கொண்டு நீ இதுவரை எவரும் செய்யாத சாதனைகளை நிகழ்த்துவாய். அறிய செயலைச் செய்த பின்பு தான் நீ இந்த உடலைத் துறப்பை" என்று ஆசிர்வதித்தார்.

நரேந்திரர், தமக்குள்ளே புகுந்த குருதேவரின் ஆன்ம சக்தி அனைத்தையும் அன்பையும் சேவையையும் உலகில் பரப்புவதற்காகப் பயன்படுத்தினார்.