வாரோசிஷ மனுவந்தரத்துப் படைப்பு

bookmark

வாரோசிஷ மனுவந்தரத்துப் படைப்பு மைத்ரேய முனிவர்! எம்பெருமானின் அருள் பார்வையும், கடாட்சமும் நிறைந்திருந்த பக்தியில் புகழ்பெற்ற பிரகலாதனுக்கு சிபி, பாஷ்கலன், விரோசனன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். விரோசனனுக்கு பலி சக்கரவர்த்தி பிறந்தான். பலிக்கு பாணாசுரன் முதலிய நூறு பிள்ளைகள் பிறந்தனர். இதோடு நின்று விடாமல் இரணியாட்சனுக்கு சர்ச்சுரன், சகுனி, பூதசந்தாயனன், மகாநயான், மஹாபாஹி, காலநாபன் என்ற பிள்ளைகள் அறுவர் பிறந்தார்கள். இது திதியின் வம்சமாகும். இனி காசிபருக்குப் பாரியையான தனு முதலிய பெண்களின் வம்சங்களை எடுத்து உரைக்கட்டுமா? என்று பராசர முனிவர் வினவினார். தனது குருநாதர் வினவிய கேள்விக்கு குருவே! தாங்கள் கூற விரும்பும் அனைத்து தகவல்களையும் கூறுங்கள். நான் யாவற்றையும் அறிந்து கொள்ள விருப்பம் கொண்டு இருக்கின்றேன் என்று கூறினார் மைத்ரேயர். அவ்விதமே ஆகட்டும் மைத்ரேயா! இதோ கூறுகிறேன்... பொறுமையுடன் கேட்பாயாக என்று பராசர முனிவர் கூற துவங்குகின்றார். தனு என்பவளுக்கு துவிமூர்த்தா, சம்பரன் அஜோமுகன், சங்குசிரன், கபிலன், சங்கரன், ஏகவத்திரன், தாரகன், சொர்ப்பானு, விருஷர்பர்வா, புலோமன், விப்ரசித்தி முதலிய அதிபலசாலிகளான பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் சொர்ப்பானுவுக்குப் பிரபை என்பவளும் விருஷபர்வாவுக்குச் சர்மிஷ்டை என்பவளும், வைசுவநாதனுக்கு உபதாநவி, அயசிரை, புலோமை, காலகை என்ற நான்கு கன்னிகைகளும் பிறந்தார்கள். மரீசி முனிவரை புலோமை, காலகை என்பவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். மரீசி புலோமை இணைந்து காலகேயர் என்ற புகழ்பெற்ற அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள். இரணியனுக்குச் சகோதரியான சிம்ஹிகை என்பவள் விப்பிரசித்திக் மனைவியாகி திரியமிசன், சல்லியன், நபன், வாதாவி, இல்வலன், நமுசிக கிருமன், அந்தகன், நரகன், காலநாபன், ராகு என்ற மகாசக்தியுள்ள பிள்ளைகளைப் பெற்றான். இவ்வாறு தனுவென்பவனின் வம்சமானது பலம் நிறைந்த மகா பலசாலிகளான அசுரர்கள் பலர் பிறந்தார்கள். இவர்களுக்கு சஹஸ்ர சங்கைகளாகப் புத்திர பௌத்திர சந்தானங்கள் உண்டாயின. முன்பு நான் உரைத்தது போல ஆத்ம ஞானியான பிரகலாதாழ்வானின் வம்சத்தில் நிவாதகவசர் என்ற தைத்தியர் தோன்றினர். தாம்பரை என்பவளுக்கு காசிபர் மூலமாக சுதி, சேனி, பரசி, சுக்ரீவை, கிருத்தரி, சுசி என்ற ஆறு பெண்கள் பிறந்தார்கள். அவர்களில் சுதிக்கு கோட்டான்களும், காக்கைகளும் பிறந்தன. சேனி என்பவளுக்குப் பருந்துகளும், பரசிக்கு செம்போத்துகளும், சுக்ரீவைக்குக் குதிரைகளும், ஒட்டகங்களும், கிருத்தரிக்கு கழுகுகளும், சுசிக்கு தண்ணீர்ப் பறவைகளும் பிறந்தன. இது தாம்பரையின் வம்சம் பற்றிய விபரமாகும். இனி விந்தைக்கு கருடன், அருணன் என்ற இரண்டு புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களில் கருடன் சர்ப்பங்களை புசிப்பவனாய் கொடூரமான, ரூபமுடையவனாய் பறவையினத்துக்கெல்லாம் உயர்ந்தவனாக இருந்து பல இடங்களில் புகழ்பெற்றிருந்தான். சுரசை என்பவளுக்கு ஆகாயத்தில் பறக்கும் ஆற்றலுடைய ஆயிரம் பாம்புகள் பிறந்தன. கத்துருவுக்குப் பலமும் தேஜசுடைய அநேக பணமண்டல மண்டிதங்களாயுள்ள அநேகம் நாகங்கள் உண்டாயின. அவை கருடனுக்கு வயப்பட்டிருந்தன. அந்த நாகர்களில் சேஷன், வாசுகி, தக்ஷகன், சங்கன், சுவேகன், மகாபத்மன், கம்பளன், அசுவதரன், ஏலாபுத்திரன், கார்க்கோடகன், தனஞ்சயன் என்போர் முக்கியமானவர்கள். அவர்கள் விஷ ஜீவாலையோடும், தந்தங்களுடனும் கூடிய முகங்களோடும் இருக்கக்கூடியவர்கள். குரோதவசை என்பவளுக்குப் பதினாயிரம் ராட்சச சர்ப்பங்களும், நிலத்திலும், நீரிலும் வாழும் பறவைகள் பிறந்து குரோதவச கணம் என்ற பெயரைப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் கோரமானவர்கள். சுரபி என்பவளுக்கு மரங்களும், கொடிகளும், புற்களும் உண்டாயின. சுஷை என்பவளுக்கு யட்ச ராட்சதர்களும், மனு என்பவளுக்கு அப்சரசுகளும், அரிஷ்டை என்பவளுக்கு மகா பலசாலிகளான கந்தர்வர்களும் பிறந்தார்கள். இந்தவிதமாக தாவர ஜங்கமங்களான காசிபரின் சந்தானங்களையெல்லாம் கூறினார். அவர்களுடைய புத்திர பௌத்திராதி சந்ததிகள் என்பது எண்ணமுடியாத அளவில் பெருகின. மைத்ரேயரே! இது சுவாரோசிஷ மனுவந்தரத்துப் படைப்பாகும்.