வைவஸ்வத மனுவந்திரம்

bookmark

வைவஸ்வத மனுவந்திரம் இனி வைவஸ்வத மனுவந்திரத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றி கூறுகிறேன் கேட்பாயாக. வைவஸ்வத மனுவந்திரத்தில் வருணன் ஒரு யாகம் நடத்தினர். அந்த யாகத்தில் சதுர்முக பிரம்மன் ஹோதாவாகி அதை நிர்வாகம் செய்தான். அப்போது இந்த உலகில் பிரஜா சிருஷ்டி செய்த விதத்தை விபரமாக கூறுகிறேன் என்று நிகழ்ந்த நிகழ்வுகள் யாவற்றையும் எடுத்து உரைக்க துவங்கினார். தேவ, ரிஷி, கந்தர்வ பன்னகாதிகளுக்கும் பிதாமகனாக இருக்கக்கூடிய சதுர்முகன் நூதன (புதுமையான) முறையில் உலகில் உயிர்களை சிருஷ்டி செய்ய எண்ணினார். ஆனால் அதற்கான காலம் என்பது அவரிடம் இல்லாததால் பூர்வத்தில் சுவாரோசிஷ மனுவந்தரத்திலே தன் சங்கல்பத்தால் உண்டான சப்தரிஷிகளை நோக்கி, வைவஸ்வத மனுவந்தரத்தில் நீங்களே பிரஜைகளைப் படையுங்கள்! என்று நியமித்தான். சதுர்முகன் இட்ட கட்டளையை ஏற்று சப்தரிஷிகளும் பிரஜைகளை அப்படியே தோற்றுவித்தனர். இது எல்லாம் இவ்வாறு நிகழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது தேவர், தேவதைகளினாலே அசுரர்கள் எல்லாம் விநாசமாய் (அழிவு) போனதால், திதி என்பவள் தன்னுடைய புத்திரர்கள் யாவரும் இல்லாமல் மிகுந்த புத்திர சோகமடைந்து அநேக காலம் தன் கணவரான காசிபரை ஆராதித்து வந்தாள். திதியின் ஆராதனையில் மனம் மகிழ்ந்த காசிபர் திதியை நோக்கி, பெண்ணே! உம்முடைய ஆராதனைகளால் யாம் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். நீர் செய்த இந்த செயலின் காரணமாக உமக்கு வேண்டிய பிரியமான வரத்தைக் கேள் என்று கூறினார். அப்பொழுது அவள் தன்னுடைய புத்திர சோகத்திற்கு காரணமான தேவர்களை எவ்விதத்திலாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, எனக்கு தேவர்களின் அதிபதியான இந்திரனை அழிக்கும் வல்லமை கொண்ட ஒரு மகன் உண்டாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். அதை கேட்டதும் காசிபமுனிவர் தனது இல்லாளை பார்த்து எனது பிரிபுத்தினியே உமக்கு இந்திரனை அழிக்கும் பலமும், திறமையும் கொண்ட மகன் வேண்டும் என்றால் நூறு ஆண்டுகள் சம சித்தத்துடன் எந்தவிதமான சபல சிந்தனைகள் இல்லாமல் சுசியாய்க் (நியம நிஷ்டைகள் அனுசரித்து) கர்ப்பத்தைத் தரித்திருக்க வேண்டும். அப்படி செய்தால் உன் விருப்பப்படி மகன் ஒருவன் பிறப்பான் என்று சொல்லி, அவளுடன் கூடிக் கலந்தார். அதனால் அவருடைய மனைவி கருவுற்று நித்தியமும் சுசியாய் விரதம் அனுஷ்டித்து வந்தாள். திதியானவள் தன்னை அழிப்பதற்காக நியம நிஷ்டைகளுடன் விரதம் இருந்து கொண்டு இருப்பதை தேவ ஒற்றர்கள் மூலமாக இந்திரன் அறிந்து கொண்டான். இதை அறிந்து கொண்ட இந்திரன் மிகுந்த கோபமும், இதனை எவ்விதத்திலாவது தடுத்துவிட வேண்டும் என்றும், திதியின் எண்ணம் ஈடேறாமல் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கினான். ஒருசில மாய வித்தைகள் செய்து இந்திரன் ரிஷி பத்தினியின் அருகில் இருந்து கொண்டிருந்தான். ரிஷி பத்தினிக்கு தேவையான பணிவிடைகளை செய்வதுபோல செய்து தனக்கான சந்தர்ப்பம் வரும் பொழுது அந்த கருவினை எவ்விதத்திலாவது சிதைக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரும் பல விதங்களில் அந்த கருவினை அழிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இருப்பினும் அவருடைய முயற்சிகள் யாவும் பயனடையாமல் போயின. காலங்கள் யாவும் உருண்டு ஓடிக்கொண்டிருந்தன. ரிஷி உரைத்த நூறு ஆண்டுகள் நிறைவுபெறுவதற்கான காலங்கள் மிக மிக அருகில் வந்து கொண்டிருந்தது. இந்திரனும் எவ்விதத்திலாவது இதை அழித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தோடு காத்துக்கொண்டிருந்தான். இந்திரன் எதிர்பார்த்திருந்த தருணமும் அவருக்கு கிடைத்தது. அதாவது ஒரு நாள் திதிதேவி பாதசுத்தி செய்யாமல் படுக்கையில் படுத்து நித்திரை செய்து கொண்டிருந்தாள். தனக்கான தருணம் கிடைத்துவிட்டது என்பதுபோல இந்திரனும் திதியானவள் சுத்தமில்லாமல் அசுசியாக (கால்களைக் கழுவாமல் தூங்கச் செல்ல) இருப்பதையறிந்து தன்னுடைய வஜ்ராயுதத்தை எடுத்துக்கொண்டு திதியின் வயிற்றில் சூட்சம ரூபத்துடன் அதாவது அணு அளவில் அவளது கருவறையுள் நுழைந்து சென்று அந்த கர்ப்பத்தை ஏழு துண்டுகளாக துண்டித்தான். அப்போது துண்டாக்கப்பட்ட அந்த சிசுக்கள், பெருஞ்சப்தத்துடன் ரோதனம் (ரோதனம் என்றால் எந்த நேரமும் எதையாவது சொல்லி புலம்பிக் கொண்டே இருப்பதாகும்) செய்ய இந்திரன், ரோதனம் செய்யாதே என்று பலமுறைகள் கூறியும் அவைகள் அமைதி கொள்ளாமல் மீண்டும் மீண்டும் ரோதனம் செய்ய, அதனால் கோபம் கொண்ட இந்திரன் அந்த ஏழு துண்டுகளையும் மீண்டும் ஒவ்வொரு துண்டுகளையும் ஏழாக துண்டித்தான். அந்த நாற்பத்தொன்பது துண்டங்களுக்கும் மரோதி (ரோதனம் செய்யாதே) என்று சொன்ன காரணத்தால் மருத்துக்கள் என்ற நாமதேயம் உண்டாயிற்று. பிறகு, அந்த மருத்துக்கள் விவேக சத்துவ சம்பன்னராய் இந்திரனுக்கு உதவலானார்கள். மைத்ரேயரே! இது மட்டும் இன்றி பூர்வத்தில் மிருது மாமன்னன் மாமுனிவர்களால் முடிசூட்டப் பெற்ற பொழுது கிரகங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும், ஓஷதிகளுக்கும், அந்தணர்களுக்கும், வேள்விகளுக்கும், தவங்களுக்கும், சந்திரனையே முதன்மையானவராகவும், அரசாகவும் பிரம்மதேவன் நியமித்தான். ராஜாக்களுக்கு அதிபதியாக குபேரனையும், ஜலத்துக்கு அதிபதியாக வருணனையும், ஆதித்யர்களுக்கு அதிபதியாக சூரியனையும், கர்த்தமர் முதலிய பிரஜாநாகருக்கு அதிபதியாக தக்ஷனையும், வசு ருத்திர, ஆதித்திய பிரமுகமான தேவதைகளுக்கு அதிபதியாக இந்திரனையும், தைத்யதானவருக்கு அதிபதியாக பிரகலாதனையும், பிதுர்தேவதைகளுக்கு அதிபதியாக யமதர்மனையும், யானைகளுக்கு அதிபதியாக ஐராவதத்தையும், பாம்புகளுக்கெல்லாம் அரசனாக வாசுகியும், பசுக்களுக்கெல்லாம் அதிபதியாக விருஷப ராஜனையும் மலைகளுக்கெல்லாம் அரசனாக ஹிமவானையும், முனிவர்களுக்கெல்லாம் அரசனாக கபிலரையும், மிருகங்களுக்கு எல்லாம் அரசனாக சிங்கத்தையும், நகமும்... பற்களும் கொண்ட மிருகங்களுக்கு எல்லாம் அதிபதியாக புலியையும், பறவைகளுக்கெல்லாம் அரசனாக கருடனையும், மரங்களுக்கெல்லாம் அரசனாக கல்லால மரத்தையும் இவ்விதமாக ஒவ்வொரு உயிரினங்களுக்கு தன்மைகளுக்கு ஏற்ப பிரம்மதேவர் அவரவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருக்க கூடியவர்களை நியமித்து ராஜ்ய பந்தங்களை ஏற்படுத்திக் கொடுத்தார். இவ்விதமாக செய்த பின்பு திசைகளுக்கான அதிபதிகளையும் நியமித்தார் பிரம்மதேவர். அதாவது கீழ்த்திசைக்கு அதிபதியாக வைராசப் பிரஜாதிபதியின் குமாரனான சுதன்வாவையும், தென்திசைக்கு அதிபதியாக கர்த்தமப் பிரஜாபதியின் தனயனான சங்கபதனையும், மேலைத்திசைக்கு அதிபதியாக ரஜசு என்ற பிரஜாபதியின் மகனான கேதுமா என்பவனையும், வடதிசைக்கு அதிபதியாக பர்வசன்யப் பிரஜாபதியின் மகனான ஹிரண்யரோமா என்பவனையும் அதிபதியாக நியமித்தார். அவர்களால் தீவுகள், பரந்து விரிந்து இருக்கக்கூடிய சமுத்திரங்கள், நீண்ட நெடும் உயரம் கொண்ட மலைகள் முதலியவை நிறைந்து இருக்கக்கூடிய இந்த பூ மண்டலமானது உருவாகியது. இதுவரையில் தங்கள் எல்லைகளிலே தர்மமாக பரிபாலிக்கப்பட்டு வருகின்றன. இப்பொழுது வரை நான் சொன்னவர்களும் இனிமேல் உண்டாவோருமான பூதாதிபதிகள் யார் யாருண்டோ அவர்கள் அனைவரும் சர்வமயனாக இருக்கும் ஸ்ரீமந் நாராயணனின் பிரதிபிம்பம் என்பதை மட்டும் அறிந்து கொள்வீராக...! பூர்வத்தில் இருக்கக்கூடிய அனைவரும் ஏன்? இனிமேல் அதிபதியாக இருக்கக்கூடிய போராளிகள் அனைவரும் எங்கும் சர்வ மையமாக நிறைந்து இருக்கக்கூடிய விஷ்ணுவின் அம்சம் என்பதை அறிந்து கொள்வீராக..! தேவ, தானவ பைசாச மானுட, பட்சி, மிருக, பன்னதாதிபதிகளும், கிரகாதிபதிகளும் விருட்ச பருவதாதிபதிகளுமாக இருப்போரும், சென்றோரும், உண்டாவோரும் யாவரும் சர்வ பூதமயனான ஸ்ரீவிஷ்ணுவின் அமிச பூதரேயன்றி வேறல்ல என்பதை புரிந்து கொள்வீராக..! மைத்ரேயரே! முனிவரின் இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய இருக்கக்கூடிய அனைத்து உயிரினங்களையும், ஜனங்களையும் பாதுகாக்கக்கூடிய வல்லமை என்பது அனைத்து இடத்திலும் நிறைந்து இருக்கக்கூடிய சர்வேஸ்வரனான ஸ்ரீஹரியை தவிர வேறு எவராலும் இயலாது. அவன் சத்துவ குணாச்ரியமான சொரூபத்தோடு எப்படி ஜெகத்தை ரட்சிக்கிறானோ அவ்விதத்திலேயே ராட்சச, தாமச குணங்களை ஏற்றுக்கொண்டும் அவ்வுயிர்களை படைக்கின்ற காலத்தில் படைப்புக் கர்த்தாவாகவும் இருந்து உயிர்களை படைத்து கொண்டும் பிரளய காலத்தில் படைத்த அனைத்து உயிரினங்களையும் சங்காரஞ் செய்யும் (எடுத்துக்கொள்ளும்) சங்கார கர்த்தாவாக இருக்கிறான். பிரபஞ்ச நாயகனான ஜனார்த்தனன் உயிர்களை உற்பத்தி செய்யும் பொழுதும் அதாவது படைக்கின்ற பொழுதும் நான்கு வகையின்னாய் அப்படியே ஸ்திதி சங்காரங்களிலும் நந்நான்கு பேதமுடையவனாகவும் இருக்கிறான். எவ்விதம் எனில் முதல் அம்சத்தில் பிரம்மாவாகவும், இரண்டாவது அம்சத்தில் மரீசிப் பிரஜாபதிகளாகவும், மூன்றாவது அம்சத்தில் காலமாயும், நான்காவது அம்சத்தில் சகலபூதங்களாயும், ரசோகுணத்தை ஆஸ்ரயித்துப் படைப்பான். ஸ்திதிக் காலத்தில் சத்தவ குணாச்ரயமான முதல் அம்சத்தில் நானாவித திவ்ய அவதார ரூபிராயும், இரண்டாவது அம்சத்தில் மனுவாதி ரூபியாயும், மூன்றாவது அம்சத்தில் காலரூபியாயும், நான்காவது அம்சத்தில் சகல பூதங்களிலிருந்தும் ரட்சிப்பான். சங்கார காலத்தில் தமோ குணத்தை ஆஸ்ரயித்து முதல் அம்சத்தால் ருத்ரரூபத் தரித்தும், இரண்டாவது அம்சத்தால் அக்னி வாயு, அந்தகாதி ரூபங்களைக் கொண்டும், மூன்றாவது அம்சத்தால் காலசொரூபகம் தரித்தும், நான்காவது அம்சத்தால் சர்வபூத அந்தரியாமியாக இருந்தும் சங்கரிப்பான். மைத்ரேய முனிவரே! இவ்விதமாகக் யுகங்கள் தோறும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய கிரியைகளில் எம்பெருமானுக்கு நந்நான்கு பேதங்கள் இருக்கின்றன என்று எடுத்து உரைக்கப்பட்டு உள்ளது.