வரைக்காட்சிப் படலம் - 971

bookmark

பல்வகைப் பண்ணொலிகல்

கூத்தர் ஆடலும் மகளிர்கோலமும்
 
971.

மண்ணும் முழவின் ஒலி.
   மங்கையர் பாடல் ஓதை.
பண்ணும் நரம்பின் பகையா
   இயல் பாணி ஓதை.
கண்ணும் முடை வேய் இசை. -
   கண்ணுளர் ஆடல்தோறும்-
விண்ணும் மருளும்படி
   விம்மி எழுந்த அன்றே.
 
கண்ணுளர் - கூத்தர் இயைந்த; ஆடல்தோறும் - ஆடு களங்களில்
எல்லாம்;   மண்ணும்  முழவு  -  மார்ச்சனை அமைந்த மத்தளத்தின்;
இன்  ஒலி - இனிய ஓசையும்; மங்கையர் - ஆடலுக்கு இசைய பாடல்
பாடும்  மங்கையர்தம்;  பாடல் ஓதை - கலத்தோடு (இசைக் கருவிகள்)
பொருந்த அமைந்த கண்டத்து (மிடற்றுப்)  பாடல்  ஓசையும்; பண்ணும்
-  சுருதி  சுத்தமாக  அமைய  வேண்டி   முடுக்கி   அமைக்கப் பட்ட;
நரம்பின்  -  நரம்புக்  கருவிகளில்;  பகையா  இயல்  ஓதை - பகை
நரம்பில்  விரல் மறந்தும் பதியாவாறு  அமைய  எழும் ஓசையும்; பாணி
-  தாளம் ஒத்து அமைந்த ஓசையும்;  கண் - தொளைகள்; உடைவேய்
- நன்கு அமைக்கப் பெற்ற புல்லாங்குழல்களின்  ஒலியும்  ஆகிய இவை
எல்லாம்; விண்ணும் மருளும்படி - தேவலோகத்தவரும் கேட்டு. கண்டு
மருளும்படி; விம்மி - மிக்கு; எழுந்த - எழுந்தன. 

தேவசாதியர்     தம்முள்  ஒரு   வகையர்   கின்னரர்.   இவர்கள்
யாழ்த்திறம்  வல்லவர்.  தேவர்கள்   ஆடல்.  பாடல்.  மகளிர்   நலம்.
நுகர்தல்  இவற்றில்  மிக்க  ஆர்வத்தினர்.   அத்தகையரே  அயோத்தி
மக்கள் தம் ஆடல். பாடல் காண  கேட்க  நேரின் மருள்வர் என்பதாம்.
மார்ச்சனை:  முழவிற்கு  இடப்படும்  ‘ரவை’  -  இயைந்து  பாடுங்கால்
மிடற்றொலி  எது?  கருவி  ஒலி எது? எனப்  பிரிந்து  அறிதல் எஃகுச்
செவியர்க்கும்  எளிதன்றாம்.  நரம்புக்   கருவிகளை  இயக்கு  முறைகள்
வார்தல். வடித்தல் முதலிய எண்வகை என்ப (சிலம்பு).             44