வரைக்காட்சிப் படலம் - 972

bookmark

மாதர் கோலங் கொள்ளல்

972.

மணியின் அணி நீக்கி.
   வயங்கு ஒளி முத்தம் வாங்கி.
அணியும் முலையார். அகில்
   ஆவி புலர்த்தும் நல்லார்.
தணியும் மது மல்லிகைத்
   தாமம் வெறுத்து. வாசம்
திணியும் இதழ்ப் பித்திகைக்
   கத்திகை சேர்த்துவாரும்.
 
மணியின் அணி - இரத்தின ஆபரணங்களை மார்பினின்றும்; நீக்கி
-  அகற்றி  அவற்றினும்  நொய்யது  ஆன;  வயங்கு ஒளி முத்தம் -
விளங்குகின்ற   ஒளி  உடைய  முத்து  மாலையை  (ஒருகாழ் முத்தம் -
ஒற்றைவடம்); வாங்கி  -  தோழியரிடம்  பெற்று;  அணியும் -  அணி
கின்ற;     அகில்  ஆவி   புலர்த்தும்  -   தமது    குழற்காட்டை
அகிற்புகையால்  புலருமாறு  செய்யும்.  (என்பதால்  இவர்கள்  மாலைக்
குளியர்  என்றாயிற்று)  ; நல்லார் - அவர்கள் (அம்மகளிர்);  தணியும்
மது   மல்லிகைத்   தாமம்  -  மென்மையான  நறுமணம்  வீசுகின்ற
மல்லிகை  மாலையை;  வெறுத்து  -  வெறுப்புற்றுக் களைந்து;  வாசம்
திணியும் - நறுமணம் மிக்க; இதழ்ப் பித்திகை கத்திகை - இதழ்களை
உடைய  கருமுகை  மலர் மாலையை; சேர்த்து வாரும் -  அணிவாரும்
(ஆயினர்). 

இரவிற்கோர்  கோலம்  கொடி இடையார் தாம் கொள்வர் என்பதால்
கல்  இழைத்துச்  செய்த   அணிகலன்களை  நீக்கி  ஒற்றை வட முத்து
மாலை   அணிந்தனர்   என்க.   மாலையில்   நீராடிப்   புறந்தூய்மை
மேவினர்.    கூந்தற்குப்    புகையூட்டிப்     பொலிந்தனர்.   இரவை
உவகையுடன் எதிர்நோக்கினர் என்பதாம்.                       45