வரைக்காட்சிப் படலம் - 970

bookmark

நிலவில் மகளிர் மகிழ்தல்

970.

மீன் நாறு வேலை ஒரு வெண்
   மதி ஈனும் வேலை.
நோனாது அதனை. நுவலற்கு
   அருங் கோடி வெள்ளம்
வான் நாடியரின் பொலி மாதர்
   முகங்கள் என்னும்
ஆனா மதியங்கள் மலர்ந்தது.
   அனீக வேலை.
 
மீன்  நாறு  வேலை - மீன்களின் புலால் நாற்றம் வீசும் கடலானது;
ஒரு  வெண்மதி - வெண்ணிறமுள்ள ஒரு சந்திரனை; ஈனும் வேலை -
பெறுங்   காலத்தில்;   அதனை   நோனாது  -  அந்தச்  செயலைப்
பொறுக்காமல்; அனீக வேலை- சேனைக் கடலானது; வான் நாடியரின்
பொலி -  வானுலக  மகளிரைப்  போல  விளங்கும்; மாதர் முகங்கள்
என்னும்  -  பெண்களுடைய   முகங்கள்  என்று   சொல்லப்படுகின்ற;
நுவலற்கு  அருங்  கோடி வெள்ளம் - அளவிட்டுச் சொல்ல முடியாத
கோடி  வெள்ளக்  கணக்கான;  ஆனா மதியங்கள் - கலை குறையாத
முழுமையான சந்திரர்களை; மலர்ந்தது - பெற்றது. 

கடல்  ஒரு சந்திரனை ஈன்றது கண்டு பொறாமை கொண்டு சேனைக்
கடலானது   மாதர்  முகங்கள்   என்ற  பல  சந்திரர்களைப்  பெற்றது
என்பது    -    ஏதுத்    தற்குறிப்பேற்றவணி.   சேனைக்   கடலுக்கு
மீனையுடைய  கடலை  விட   மேன்மை   தோன்றுவதற்காக வேறுபாடு
கூறியது - வேற்றுமையணி.                                   43