வரைக்காட்சிப் படலம் - 968

bookmark

விளக்கேற்றல்

968.

மந்தாரம் முந்து மகரந்த மணம் குலாவும்
அம் தார் அரசர்க்கு அரசன்தன் அனீக வெள்ளம்.
நந்தாது ஒலிக்கும் நரலைப் பெரு வேலை எல்லாம்
செந்தாமரை பூத்தென. தீபம் எடுத்தது அன்றே.
 
மந்தாரம்  முந்து மகரந்தம் - மந்தார மலர்கள் சொரியும் தேனின்;
மணம் குலாவும்- மணங் கமழப் பெற்ற; அம்தார் அரசர்க்கு அரசன்
தன்  -  அழகிய  மாலையணிந்த  தசரதனின்;  அனீக  வெள்ளம் -
சேனைக்  கடலனாது;  நந்தாது  ஒலிக்கும்  -  குறையாமல் ஒலிக்கும்;
நரலை - பெரு முழக்கத்தையுடைய; பெரு வேலை எல்லாம் - பெருங்
கடலின்  இடம்  முழுவதும்;  செந்தாமரை  பூத்து என - செந்தாமரை
மலர் பூத்தது போல; தீபம் எடுத்த - விளக்குகளை ஏற்றி வைத்தது. 

சேனை     தங்கியிருந்த     இடம்     முழுவதும்    விளக்குகள்
ஏற்றப்பட்டதனால்  அது  கடல்  முழுதும்  செந்தாமரை பூத்தது போல
விளங்கியது என்பது - தற்குறிப்பேற்ற அணி.                     41