வரைக்காட்சிப் படலம் - 969
சந்திரன் தோற்றம்
மதியம் தோன்ற மகளிர் முகமலர்தல்
969.
தண் நல் கடலில் துளி சிந்து தரங்கம் நீங்கி.
விண்ணில் சுடர் வெண் மதி வந்தது. மீன்கள் சூழ -
வண்ணக் கதிர் வெண்நிலவு ஈன்றன வாலுகத்தோடு
ஒள் நித்திலம் ஈன்று. ஒளிர் வால் வாளை. ஊர்வது
ஒத்தே.
வண்ணக் கதிர் ஈன்ற - அழகிய வெண்ணிறக் கதிர்களையுடைய;
வெண்ணிலவு என - நிலாப் போன்ற; வாலுகத்தோடு - வெண்
மணற் குவியலின் இடையே; ஒள் நித்திலம் - நல்ல நிறமுள்ள
முத்துக்களை; ஈன்று ஒளிர் - பெற்று விளங்கும்; வால் வாளை -
வெண்மையான சங்கு; ஊர்வது ஒத்து - சஞ்சரிப்பது போன்று; தண்
நற்கடலில் - குளிர்ந்த அழகிய கடலிலே; தளி சிந்து - நீர்த்
திவலைகளை வீசுகின்ற; தரங்கம் நீங்கி - அலைகளிலிருந்து
வெளிப்பட்டு; சுடர் வெள்மதி - ஒளி திகழும் வெண்ணிறச் சந்திரன்;
மீன்கள் சூழ - நட்சத்திரங்கள் சூழ்ந்திருக்க; விண்ணில் வந்தது -
வானத்திலே வந்து விளங்குவதாயிற்று.
கடலிலிருந்து வெளிப்பட்டு வானத்தில் நட்சத்திரங்கள் சூழப்
பிரகாசிக்கும் சந்திரன் கடலிலிருந்து வெளிப்பட்டு வெண் மணலிலே
முத்துக்கள் சூழ்ந்து விளங்க இடையே தோன்றும் வெண்சங்கை
ஒத்தது என்பது - தற்குறிப்பேற்றவணி. 42
