வசிஷ்ட முனிவரின் ஆலோசனை

bookmark

வசிஷ்ட முனிவரின் ஆலோசனை என்னென்ன செயல்கள் செய்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்? எவை எவை தர்மங்கள்? என்பதை அறிந்து இருக்கக்கூடிய மைத்ரேயரே! உலக தோற்றம் பற்றி அறிந்திருந்த என்னுடைய பாட்டனாரான வசிஷ்ட முனிவர் எமக்கு அருளி செய்த சில கருத்துக்களை எனக்கு நீங்கள் மீண்டும் நினைவுக்கூற செய்துள்ளீர்கள். பராசர முனிவரின் கோபமும், அரக்கர்களின் அழிவும் அதாவது முன்னொரு காலத்தில் விசுவாமித்திரரால் ஏவப்பட்ட அரக்கன் ஒருவன் என் தகப்பனாரை பழி தீர்த்து அவரை கொல்வதற்கும் காரணமாக இருந்தார் என்பதை நான் அறிந்த பொழுது எனக்குள் ஏற்பட்ட கோபத்திற்கு அளவு என்பதே கிடையாது. அரக்கர்கள் மீது எல்லாம் எமக்கு மிகப்பெரும் அளவில் கோபமும், விரோதமும் ஏற்பட்டது. அதன் விளைவாக அரக்கர்கள் எல்லோரையும் அழிப்பதற்காக யாகம் ஒன்றையும் யான் துவங்கினேன். யான் தொடங்கிய அந்த யாகத்தின் விளைவாக பல்லாயிரக்கணக்கான அரக்கர்கள் அழிந்தார்கள்.வசிஷ்ட முனிவரின் ஆலோசனை :நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நிகழ்வுகள் யாவற்றையும் கண்டு கொண்டிருந்த எனது பாட்டனாரான வசிஷ்ட முனிவர் மிகவும் வருத்தப்பட்டார். தமது தலைமுறையை சேர்ந்தவர்கள் ஒரு இனத்தை அழிப்பதற்கு காரணமாக இருக்கின்றார்கள் என்பது எண்ணி அவர் மிகவும் துன்பத்தை அடைந்தார். பின்பு என்னிடம் தோன்றி, குழந்தாய்! உன்னிடத்தில் இருக்கக்கூடிய கோபத்தை விட்டுவிடு. அரக்கர்கள் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை. உனது தகப்பனார் இந்த உலகத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு அவன் ஏற்படுத்தி கொண்ட விதியே அதுவாகும். கோபம் என்பது மூடர்களுக்கு மட்டும் தான் தோன்றுமே தவிர ஞானிகளுக்கு கோபம் என்றுமே வரக்கூடாது. இந்த உலகத்தில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் அவைகள் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவே அவைகளின் மரணமும் நிகழுகின்றன. மற்ற உயிர்களை காட்டிலும் மேம்பட்டு இருக்கக்கூடிய மனித உயிரினம் என்பது வாழும் காலத்தில் ஈட்டிய புகழையும், தவத்தினால் அடையக்கூடிய நன்மைகளையும் அவனிடத்தில் இருக்கக்கூடிய கோபமானது அழித்து விடுகின்றது. சொர்க்கம், மோட்சம் முதலிய பிறவா நிலையை அடைவதற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய யாவற்றையும் இந்த கோபமானது அழிக்கக்கூடிய வல்லமை கொண்டதாகும். ஆகவே முனிவர்கள் அனைவரும் கோபத்தை விட்டுவிடுதல் என்பது மிகவும் அவசியமாகும். கோபமானது பல முன்னேற்றங்களையும், கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்புகளையும் இழக்க வைக்கக்கூடியவை ஆகும். ஆகவே, அந்த கோபத்திற்கு வசப்பட்டுவிடாதே. அந்த கோபத்தினால் எந்தவிதமான தப்பும் செய்யாத அரக்கர்களும், அநேகர் பலர் இறந்து போனது போதும். இதற்கு மேற்கொண்டும் இந்த யாகத்தினை வளர்க்காதே. பெரியோர்கள் பொறுமையாக இருப்பது சிறந்த குணமாகும் என்று என்னுடைய பாட்டனாரான வசிஷ்ட முனிவர் கூறினார்.அதைக்கேட்ட நானும் அவர் கூறிய பேச்சுக்களில் இருந்த உண்மையை அறிந்த பின்பு என் மனதில் இருந்த கோபங்களை நீக்கி அந்த யாகத்தையும் நிறுத்திவிட்டேன். நான் யாகத்தை கைவிட்டதும் என்னுடைய பாட்டனாரான வசிஷ்ட முனிவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.வரமும், அருளும் பெறுதல் : இந்த நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருந்த தருணத்தில் பிரம்மாவின் புத்திரரான புலஸ்திய முனிவர் அவ்விடத்திற்கு வந்திருந்தார். என்னுடைய பாட்டனாரான வசிஷ்ட முனிவர், அவரை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல் அவர் அமர்வதற்கான இருக்கையையும், அவருடைய திருவடிகளையும் சுத்தம் செய்து அவரை மிகுந்த மதிப்போடும், மரியாதையோடும், அன்போடும் உபசரித்து கொண்டிருந்தார்.அப்பொழுது என்னை நோக்கிய புலஸ்திய முனிவர், பராசரரே! உமக்கு பெருமளவில் கோபங்கள் இருந்தாலும் குருவாகிய உன் பாட்டனாரின் பேச்சினை கேட்டதும் பொறுமை அடைந்தாய். இனிமேல் அந்த பொறுமையுடன் சகல சாஸ்திரங்களையும் கற்றுக் கொள்வாயாக. கோபத்தினால் இனி வர இருக்கின்ற சந்ததியினரையும் அழியாமல் செய்த உனது பொறுமையின் பெருமையை பாராட்டி உனக்கு வேறு ஒரு வரத்தினையும் அளிக்கின்றோம்.அதாவது நீ புராணங்களை பற்றி எடுத்துரைக்க கூடியவராக இருப்பாயாக என்றும், தேவதைகளின் உண்மையான இயல்புகளை அறிந்து கொண்டு அதாவது இவர்கள்தான் மேலான தேவதைகள் என்பதை அறிந்து கொள்வதற்கான வரமும், முயற்சிகள், தோல்விகள் என இருவகை கர்மங்களில் உன்னுடைய புத்தியானது என்னுடைய அனுகிரகத்தில் நிலைத்திருந்து எந்தவித சந்தேகங்களும் இல்லாமல் விளங்குவாயாக என்று கூறி வரமளித்தார்.நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அனைத்தையும் கண்டு கொண்டிருந்த எனது பாட்டனாரான வசிஷ்ட முனிவரும், என்னை பார்த்து பராசரா! புலஸ்தியர் அருளியவை அனைத்தும் உமக்கு சித்தி ஆகட்டும் என்று கூறினார். இவ்விதமாக மிகச்சிறந்த முனிவர்களான புலஸ்தியர், வசிஷ்டரின் அருளால் புராணங்களை கூறுவதில் சிறப்புற்று இருக்கின்றேன் என்று எண்ணும்பொழுது நீ கேட்ட கேள்வியினால் இந்த நினைவுகள் மீண்டும் என்னிடத்தில் தோன்றின. மைத்ரேயரே! ஞானத்தில் சிறந்த பெரியோர்களின் அருளும், ஆசியும், வரமும் பெற்றதன் மூலமாக சிறப்பான ஞானம் கிடைக்க பெற்ற நான் எமக்கு அறிந்தவற்றை உனக்கு கூறுகிறேன் நன்றாக கேட்பாயாக என்று கூறினார்.புராணங்களின் அடிப்படையில் இந்த உலகத்தின் தோற்றம் எவ்விடத்தில் இருந்ததென்றால், இந்த உலகமானது ஸ்ரீவிஷ்ணுவிடத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. அவரிடத்தில் தான் இருந்தது. இந்த உலகிற்கு ஆதியும், அந்தமுமாக அவரே இருக்கிறார். இந்த உலகங்களில் இருக்கக்கூடிய அனைத்தும் அவராலேயே உருவாக்கப்பட்டு, அவருடைய சொரூபமாகவே இன்றளவும், ஏன் இனிவரும் காலங்களிலும் இருக்கப்போகின்றது. அவர் தான் உலகம், அவரே தான் உலகம் என்று மைத்ரேய முனிவரின் கேள்விக்கு பராசர முனிவர் விளக்கமளித்தார். இவ்விடத்தில் பராசர முனிவர் ஸ்ரீவிஷ்ணுவை பலவகையாக போற்றி வணங்குகிறார். எந்தவிதமான விகாரங்களும் இல்லாதவராகவும்..தூய்மையானவராகவும்..நித்தியம் உடையவராகவும்..பரம்பொருளாகவும்..பரமாத்மாவாகவும்..எந்த நிலையிலும் எந்த காலங்களிலும் எவ்விதமான சூழ்நிலைகளிலும் மாறாத இயல்புடைய மங்கள விக்கிரகம் உடையவராகவும்..சகல சௌபாக்கியங்கள் யாவற்றையும் கொண்டிருக்க கூடியவரான, வெற்றிசாலியான ஸ்ரீமகாவிஷ்ணுக்கு எனது பணிவான வணக்கங்கள்.படைக்கும் பொழுது பிரம்மாவாகவும்..படைத்த பொருள்களையும், உயிரினங்களையும் காக்கும் பொழுது ஹரிரூபியாகவும்..சங்கரிக்கும் பொழுது சங்கார ரூபியாகவும்..அவரை தினந்தோறும் வழிபடுபவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடிய வாசுதேவனாகவும் இருக்கக்கூடிய விஷ்ணுவிற்கு என்னுடைய வணக்கங்கள் உரியதாகுக!இந்த பரந்து விரிந்து இருக்கக்கூடிய பிரபஞ்சங்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரங்களாகவும்..அதி சூட்சுமமான ரூபமாய் எல்லாவற்றிலும் இருக்கக்கூடியவரும்..குற்றம் எதும் அடையாமல் எப்பொழுதும் உண்மையான ஞானத்திற்கு உரியவராகவும்..அனைத்து நல்ல குணங்களும் நிறைந்து இருக்கக்கூடியவராகவும்..நான் என்றும் வணங்கக்கூடிய என் பெருமானை சேவித்து அதன்பிறகு இந்த உலகம் தோன்றியதை பற்றி உமக்கு நான் எடுத்துரைக்கிறேன்.இந்த உலகத்தில் படைப்பு கர்த்தாவாகவும், எம்பெருமானின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றியவராகவும், உற்பத்தி நாசம் முதலியவற்றை அறிந்திருக்கக்கூடிய உலக தந்தையாக இருக்கக்கூடிய பிரம்மாவிடம் உலகம் எவ்விதத்தில் தோன்றியது என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலை நான் உமக்கு இப்பொழுது எடுத்துரைக்கின்றேன். பிரம்மதேவர் எடுத்துரைத்ததை தச்சர் முதலிய முனிவர்களும், மனத்தூய்மையுடன் நர்மதை நதிக்கரையில் ஆட்சிபுரிந்து வந்திருந்த புருகுத்சன் என்ற மன்னனும் பிரம்மா உரைத்திருந்தவற்றை கேட்டார்கள்.அவர்கள் கேட்டு அறிந்து கொண்ட விஷயத்தை சாரஸ்வதன் என்ற முனிவருக்கு எடுத்துரைத்தனர். அந்த முனிவரின் அருளால் நான் அவற்றை அறிந்திருந்தேன். இவ்விதமாக பரம்பரை ரீதியாக நான் அறிந்து வந்திருந்த மகா புராணத்தை விளக்கமாக உமக்கு எடுத்து உரைக்கின்றேன்.